

நம் ஊரில் பலரும் கண்ணாடி முன் நின்று, "ஐயோ, நாம் கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கோமே... எந்த டிரஸ் போட்டாலும் நமக்குச் செட் ஆகலையே" என்று வருத்தப்படுவதுண்டு. குறிப்பாகத் திருமண வீடுகளுக்கோ அல்லது விசேஷங்களுக்கோ செல்லும்போது, என்னதான் ஆயிரக்கணக்கில் கொட்டி ஆடை வாங்கினாலும், அது நம்மை எடுத்துக் காட்டவில்லை என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும்.
"வெள்ளையா இருக்கிறவங்களுக்கு எல்லாமே நல்லா இருக்கு" என்ற தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு இருந்தால், அதை இன்றே தூக்கி எறிந்துவிடுங்கள். அழகு என்பது நமது நிறத்தில் இல்லை; நாம் அணியும் ஆடையின் நிறத் தேர்வில்தான் இருக்கிறது. மாநிறமாகவோ அல்லது சற்று கருப்பாகவோ இருப்பவர்கள், விலையுயர்ந்த ஆடைகளைத் தான் அணிய வேண்டும் என்பதில்லை. சரியான நிறங்களைத் தேர்ந்தெடுத்தால், சாதாரண உடையிலும் நீங்கள் 'ராயல்' லுக்கில் வலம் வரலாம்.
1. எமரால்டு கிரீன் (Emerald Green): பொதுவாகக் கருப்பாக இருப்பவர்கள் அடர் நிறங்கள் அணியத் தயங்குவார்கள். ஆனால், பச்சையில் பல வகைகள் உண்டு. அதில் இந்த 'எமரால்டு கிரீன்' என்று சொல்லக்கூடிய மரகதப் பச்சை நிறம், மாநிறத் தோலுக்கு மிகவும் பொருத்தமானது. இது உங்கள் நிறத்தை மங்கச் செய்யாமல், மாறாக உங்கள் தோற்றத்திற்கு ஒரு தனித்துவமான பிரகாசத்தைக் கொடுக்கும். கூட்டத்தில் உங்களைத் தனியாக, ஒரு பணக்காரத் தோற்றத்துடன் காட்டக்கூடிய சக்தி இந்த நிறத்திற்கு உண்டு.
2. கடுகு மஞ்சள் (Mustard Yellow): மஞ்சள் நிறம் என்றாலே மங்களகரமானது தான். ஆனால், மிகவும் 'பளிச்' என இருக்கும் எலுமிச்சை மஞ்சள் நிறம் மாநிறத்தவர்களுக்குச் சரியாகப் பொருந்தாது. அதற்குப் பதிலாக, நீங்கள் 'மஸ்டர்ட் எல்லோ' எனப்படும் கடுகு மஞ்சள் அல்லது வெந்தய நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
இது உங்கள் சருமத்திற்கு ஒரு இதமான, வெப்பமான அழகைத் தரும். இது பார்ப்பதற்கு உறுத்தலாக இல்லாமல், உங்கள் முகத்திற்கு ஒரு இயற்கையானப் பொலிவை வழங்கும்.
3. ஒயின் கலர் (Wine Color): சிவப்பு நிறம் அணிய ஆசை, ஆனால் அது நமக்குச் செட் ஆகுமா என்ற பயம் பலருக்கும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் இந்த 'ஒயின்' கலர். இது கருஞ்சிவப்பு மற்றும் ஊதா கலந்த ஒரு கலவை. பொதுவாக இந்த நிறத்தை நிராகரிப்பவர்களே அதிகம்.
ஆனால், உண்மையில் மாநிறப் பெண்களுக்கு இந்த நிறம் ஒரு தேவதை போன்ற தோற்றத்தைத் தரும். குறிப்பாக, மாலை நேரப் பார்ட்டிகள் அல்லது ரிசப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த நிற ஆடையை அணிந்து சென்றால், அனைவரின் பார்வையும் உங்கள் மீதுதான் இருக்கும்.
4. பர்ன்ட் ஆரஞ்சு (Burnt Orange): தற்போது ஃபேஷன் உலகில் ட்ரெண்டிங்கில் இருப்பது 'எர்த் டோன்' எனப்படும் மண் சார்ந்த நிறங்கள் தான். அதில் முக்கியமானது 'பர்ன்ட் ஆரஞ்சு'. இது கண்ணைக் கூசும் ஆரஞ்சு நிறமாக இல்லாமல், சற்று அடர்த்தியாக இருக்கும்.
இது உங்கள் சரும நிறத்தோடு ஒன்றிப்போய், ஒரு விதமான மினுமினுப்பை உங்கள் முகத்திற்குக் கொடுக்கும். மாடர்ன் உடைகளுக்கு இந்த நிறம் மிகச்சிறந்த தேர்வு.
5. ராயல் ப்ளூ (Royal Blue): பெயரிலேயே 'ராயல்' என்பதை வைத்திருக்கும் இந்த நீல நிறம், உங்களையும் ராணி போல மாற்றும் வல்லமை கொண்டது. எந்த ஒரு விசேஷத்திற்கும் தயங்காமல் இந்த நிறத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இது உங்களை மிகவும் எடுப்பாகவும், கம்பீரமாகவும் காட்டும். பட்டுப்புடவையோ அல்லது சுடிதாரோ, ராயல் ப்ளூ நிறத்தில் இருந்தால், அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
எனவே, இனி கடைக்குச் செல்லும்போது குழப்பம் வேண்டாம். மேலே சொன்ன நிறங்களில் ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். ஆடைக்கு ஏற்றவாறு சரியான அணிகலன்களையும் அணிந்து கொண்டால், அந்த விழாவின் கதாநாயகி நீங்கள் தான்.