
விரல்களின் முனைகளில் சங்கு சக்கரம் போன்ற அமைப்புடைய ரேகைகள் அமைந்திருந்தால் அதை மிகவும் சிறப்பித்துக் கூறுவது உண்டு. இதை அனைவரும் அறிவர். அதுபோல் அமையப்பெற்றவர்களின் லட்சண குறிப்பு சொல்லும் சுவாரசியமான விஷயம் இதோ:
சிலரின் விரல்களின் முனைகளில் சங்கு அல்லது சக்கரம் போன்ற அமைப்புடைய ரேகைகள் மிகவும் அரிதாக இருப்பதைக் காணலாம். அது போன்ற சக்கரம் ஒரே விரலின் நுனியில் மட்டும் அமையப்பெற்றவர் எப்போதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் அளவுக்கு வசதி உடையவராக விளங்குவார் என்கிறது லட்சண சாஸ்திரம்.
இரண்டு விரல்களில் சக்கரம் உடையவர்கள் அரசு மரியாதைகள், சலுகைகள், மானியங்கள், பரிசுகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்று பெயரும், புகழும், செல்வாக்கும் உடையவர்களாக இருப்பார்களாம்.
பல்வேறு தேசங்களில் சஞ்சாரம் செய்யக்கூடியவர்கள், பிரயாணம் செய்யும் விற்பனையாளர்கள் போன்றவர் களுக்கு மூன்று விரல்களில் சக்கரம் இருக்க காணலாம் என்கிறது சோதிடம். இந்த சக்கரம் சூரிய விரலில் அமையப் பெற்றவர்கள் அயல்நாட்டு தூதுவராக பணியாற்றும் தகுதியையும், செல்வாக்கையும் பெற்று திகழ்வார்கள்.
அரசியல் பேச்சாளர்களாகவும், கலை அல்லது விஞ்ஞானத்துறையில் மேதைகள் ஆகவும் சிறந்து விளங்குவார்கள். சகலவிதமான வசதிகளையும், சௌகரியங்களையும் பெற்று செல்வாக்குடன் வாழ்வார்கள் என்கிறது லட்சண சாஸ்திரம். இவர்கள்தான் பெரும்பேறு பெற்றவர்கள் போலும்.
நான்கு விரல்களிலும் சக்கரம் அமைய பெற்றவர்கள் சிறந்த கலைஞர்களாகவும், வேதசாஸ்திர வல்லுனராகவும் புகழ் பெறுவார்கள் என்கிறது இலட்சண குறிப்பு.
ஐந்து விரல்களிலும் சக்கரம் அமைய பெற்றவர்கள் மகான்களாகவும், சித்த புருஷர்களாகவும், காடு, மலைகள், வனங்கள் ஆகிய இடங்களில் தேடிச்சென்று தவம், யோகம், தியானம் செய்து அகில உலகப் புகழ்பெற்ற ஞானியராகவும், பல நாடுகளிலும் தமது ஆத்மிக சீடர்களை கொண்ட ஞான குருமார்களாகவும், தத்துவ குணத்தை உடையவர்களாகவும் விளக்குவார்கள் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் சரி. ஆனால், பத்து விரல்களிலும் பெரிய சக்கரங்கள் அமைந்திருக்க கூடும் என்றாலும் அவர்களுக்கு வலக்கையில் உள்ள ரேகைகளின்படிதான் பலன்கள் நிகழ்ந்து வருமாம். ஆகையால் இடக்கையில் அமையும் ரேகைகளின் பலன்கள் அவர்களுடைய முன்னோர்கள், பெற்றோர்கள், மனைவி, மக்கள் ஆகியவர்களைப் பற்றியனவாகவே அமைந்திருக்கும் என்கிறது விரல்களின் நுனிகளில் சங்கு சக்கரம் போன்ற அமைப்பை பெற்ற ரேகை உடையவர்களின் லட்சண குறிப்பு.
விரல்களின் நுனியில் சங்கு சக்கரம் அமையப் பெறாதவர்களின் கைரேகை அமைப்பு அழகாக அமைய பெற்றவர்கள் அயல்நாட்டு தூதுவராக பணியாற்றிய பெருமை பெற்றவராக இருந்ததையும் காண முடிகிறது.
சாதாரணமாக எல்லோர் கைகளிலும் சங்கு சக்கர அமைப்பை காண முடிவது அரிதுதான். இப்படி அரிதானவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் அல்லவா!