
ஆரஞ்சு அல்லது எலுமிச்சம்பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து கடலை மாவு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த உடன் தண்ணீரால் கழுவிவிட்டால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும்.
கேரட்டை நன்கு துருவி பாலுடன் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின்பு அலம்பிவிட்டால் முகம் பளபளக்கும்.
கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பின் குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள் மாசு மரு போன்றவை நீங்கிவிடும்.
ஒரு சிறிய வெள்ளரிக்காய் துண்டை முகத்தில் நன்கு தேய்த்து காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பிவிட்டால் முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை நீக்கிவிடலாம்.
முல்தானிமிட்டியுடன் பன்னீரை கலந்து முகத்தில் தடவி நன்கு உலர்ந்தவுடன் முகத்தை கழுவி விட்டால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி முகம் பிரகாசம் அடையும்.
கைகள் சிறப்பாக பார்ப்பதற்கு அழகற்று இருந்தால் ஆலிவ் எண்ணெயுடன் சிறிது பொடி உப்பை கலந்து கைகளில் நன்கு தேய்த்தால் கைகள் மென்மை பெறும் நகங்களுக்கும் நல்லது.
கைப்பிடி அளவு புதினா இலையை பிழிந்து சாறு எடுக்க வேண்டும் முகத்தை நன்கு அலம்பி இரவு படுக்க போகும் முன் புதினா சாறை முகத்தில் தடவி மறுநாள் காலை முகத்தை அலம்பி விட்டால் பருக்களின் தொந்தரவு நீங்கிவிடும்.
முதுகுப்பகுதியில் வெயில்படும் இடங்களில் கருத்துவிடும் அந்த கருமையை போக்க எலுமிச்சம்பழத் தோலை நன்கு தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்னர் குளித்தால் நாளடைவில் கருமை உதிர்ந்துவிடும்.
நெல்லிக்காய் எப்போதுமே தலைமுடிக்கு ஆரோக்கியம் அளிக்க வல்லது. ஆறு நெல்லிக்கனிகளை ஒரு கப் பாலில் நன்கு வேக வைத்து கொட்டைகளை நீக்கி விழுது போல் மசித்து தலையில் தடவி நன்கு ஊறிய பின் கூந்தலை நன்கு அலசினால் கூந்தல் சுத்தமாகவும் பட்டுபோல மிருதுவாகவும் இருக்கும்.
முல்தானி மிட்டியை தண்ணீரில் கலந்து தலையில் தடவி உலர்ந்த பின்னர் நன்கு அலசிவிட்டால் பொடுகு தொல்லை குறையும்.
நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தினமும் தடவி வந்தால் இளநரை மறையும்.
நகங்கள் நல்ல உறுதியாக இருக்க இரவு படுக்க போகும் முன் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சைசாறு ஆகியவற்றை கலந்து ஒரு பதினைந்து நிமிடம் வரை நகங்களை அதில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் கைகளை நன்கு மசாஜ் செய்து நன்கு துடைத்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் நகங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்று.