
ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கேற்ப ஆடை அலங்காரங்கள் தான் நம்மை மேலும் அழகுபடுத்தி காட்டும். மாறிவரும் நாகரிக உலகில் தினம் ஒரு ஃபேஷன் வந்து கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் பலரும் ஆடை அலங்காரத்தில், ஹேர் ஸ்டைலில் என நிறைய தவறுகள் செய்து கொண்டிருக்கிறோம். நாகரீகமாக இருக்கிறோம் என நினைத்து நாம் செய்யும் சில தவறுகள் நம் உடல் நலத்தை பாதிக்கலாம். அப்படிப்பட்ட சில நாகரீக தவறுகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
காண்டாக்ட் லென்ஸ்:
மூக்கு கண்ணாடி அணிய தயங்கி நாகரிகமாக இருக்க விரும்பும் பெண்கள் காண்டாக்ட் பயன்படுத்துகிறார்கள் இது முறையாக பராமரிக்காமல் போனால் கண்களில் பிரச்னையை உண்டு பண்ணும்.
ஆடைகள்:
இறுக்கமான ஆடைகள் குறிப்பாக ஜீன்ஸ் போன்ற நம் ஊரின் வெப்பநிலைக்கு ஒத்து வராத இறுக்கமான ஆடைகள் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். மாரடைப்பு ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். சாதாரண சரும அழற்சி தொடங்கி புற்றுநோய் வரையிலான பெரிய பிரச்னைகளை உண்டாக்கும்.
உள்ளாடைகள்:
வியர்வையை உறிஞ்சும் காட்டன் உள்ளாடைகள் சிறந்தது ஆனால் அழகுக்காக சிந்தடிக் உள்ளாடைகளை அணிவதால் சரும பிரச்னைகள் கிருமி தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
ஹேண்ட் பேக்குகள்:
நாகரிகம் என எண்ணி பெரிய அளவிலான கைப்பைகளை உபயோகிப்பது உடலளவில் பிரச்னைகளை ஏற்படுத்தும். காரணம் பெரிய அளவிலான இந்த பைகள் ஒரு பக்கமாக அதாவது ஒரு தோள்பட்டையில் அல்லது கைகளில் சுமக்கிறோம். இதனால் சருமத்தில் தழும்புகளை உருவாக்குவதுடன் அந்தப்பகுதியில் வலிகளையும் ஏற்படுத்தும்.
அணிகலன்கள்:
விலை குறைவாக உள்ளது என தரம் குறைந்த ஆபரணங்களை தேர்ந்தெடுத்து அணிவது சருமத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். நிக்கல் போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள், ஆபரணங்கள் சருமத்தில் எரிச்சலையும், தடிப்பு, சிவந்து போகுதல் போன்ற சரும பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மேக்கப் பொருட்கள்:
அதிகப்படியான மேக்கப் நம் முகத்தோற்றத்தை மட்டும் மாற்றுவதில்லை; சருமத்திலும் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். பருக்கள் தோன்றுவது, சருமம் சிவந்து போகுதல், வீக்கம் அடைவது, சரும வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதிக ரசாயன கலப்பு மிகுந்த லிப்ஸ்டிக், மேக்கப் சாதனங்கள் போன்றே ஹேர் ஸ்டைலுக்காக பயன்படுத்தும் பொருட்களும் நிறைய தீங்குகளை ஏற்படுத்தும்.
ஹீல்ஸ்:
காலணிகளை தேர்ந்தெடுக்கும்பொழுது சிலர் அதிக ஹீல்ஸ் உள்ள காலணிகளை தேர்ந்தெடுப்பார்கள். இது முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் பொழுது உடல் வலியை ஏற்படுத்தும்.
அழகை மட்டும் நோக்கமாகக்கொள்ளாமல் உடலின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம்.