
முகத்திற்கு மேக்கப் போடும் செயலில் முக்கியமாக உள்ளது டோனர். இது முகத்திலுள்ள அசுத்தங்களை நீக்கி, துவாரங்களை சுருக்கி, சருமத்தின் pH அளவை சமப்படுத்தும். மாய்ஸ்சரைசர் மற்றும் சீரம் போன்றவை சருமத்திற்குள் உறிஞ்சப்படவும் உதவும். 4 வகையான டோனர்களை வீட்டிலேயே அதிக செலவில்லாமல் எப்படித் தயாரிக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.அரிசி கழுவிய தண்ணீர் (Rice Water): ரைஸ் வாட்டரில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஸ்டார்ச் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை முகத்தின் சருமத்திற்கு இதமாக ஈரப்பதம் அளித்து, துவாரங்கள் இறுகவும் உதவி புரியும். இந்த நீரை நொதிக்கச் செய்து முகத்தில் தடவும்போது தோலு க்கடியில் கொல்லாஜன் உற்பத்தி அதிகரிக்கும்.
அரை கப் வெள்ளை அரிசியை 1-2 கப் நீரில் 30 நிமிடம் ஊறவைத்து, பின் நீரை வடிகட்டி எடுத்து பாட்டிலில் நிரப்பி ஃபிரிட்ஜில் வைத்து 5 நாட்கள் வரை உபயோகிக்கலாம். தினமும் காலை மாலை இரு வேளை பஞ்சில் ரைஸ்வாட்டர் டோனரை நனைத்து முகத்தில் தடவலாம்.
2.க்ரீன் டீ + ஆலூவேரா ஜெல்:
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆலூவேரா ஜெல்லில் உள்ள ஈரப்பசையும் சருமத்திற்கு இதம் அளித்து புத்துயிர் பெற உதவும். குறிப்பாக எண்ணெய்ப் பசையுள்ள மற்றும் சென்சிடிவ் சருமத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும். ஒரு கப் க்ரீன் டீ தயாரித்து அதை குளிரவிடவும். அதனுடன் 1-2 டீஸ்பூன் ஆலூவேரா ஜெல் சேர்த்து இரண்டையும் ஒரு சேரக்கலக்கவும்.
இந்த திரவத்தை பஞ்சில் நனைத்து தினமும் ஒன்று அல்லது இரண்டுமுறை முகத்தில் தடவி வரலாம். எண்ணெய்ப் பசையுள்ள முகத்திற்கு இதனுடன் ஒரு துளி விச் ஹேசல் (Witch Hazel) மற்றும் பருக்கள் உள்ள முகத்திற்கு ஒரு துளி டீ ட்ரீ ஆயில் கலந்து உபயோகிக்கலாம். இந்த டோனரை ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
3.குக்கம்பர் டானிக் (Cucumber Tonic):
வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து மற்றும் சில குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்ட கூட்டுப் பொருட்களும் உள்ளன. சருமத்தை நீரேற்றத்துடனும் குளிர்ச்சியாகவும் வைக்க உதவுவதுடன் உப்பலுடன் காணப்படும் சருமத்தை சமநிலைப்படுத்தவும் செய்யும். வெயிலில் அதிக நேரம் இருந்துவிட்டு வரும்போது சிவந்திருக்கும் சருமத்திற்கு குளிர்ச்சியூட்டி, இதமளித்து, இயற்கை நிறம்பெற உதவும்.
வெள்ளரிக்காயை தோல் சீவி நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். பின் அதை ஒரு சீஸ்க்ளாத் மூலம் வடிகட்டி சாறைப் பிரித்தெடுக்கவும். வாசனைக்காக, தேவைப்பட்டால் சிறிது ரோஸ் வாட்டர் அல்லது விச் ஹேசல் சேர்த்து 3-4 நாட்களுக்குள் உபயோகித்துவிடவும். சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து கண்ணாடி போல் மின்னச் செய்யும் டானிக் இது.
4.ரோஸ் வாட்டர் + கிளிசெரின்:
ரோஸ் வாட்டர், சருமத்திலும் சரும துவாரங்களிலும் உள்ள அழுக்கை நீக்கி இதமும் இறுக்கமும் பெற உதவும். கிளிசெரின் சருமத்திற்குள் நீர்ச்சத்தை தக்க வைக்கச் செய்யும். ரோஸ் வாட்டரின் நறுமணம் நரம்புகளுக்கு இதமளிக்கும். முடிவில், சருமம் மென்மையும், பள பளப்பும் சமநிலையும் பெறும்.
100 ml ரோஸ் வாட்டருடன் 5-10 ml வெஜிடபிள் கிளிசெரின் கலந்து (எண்ணெய்ப் பசையான சருமத்திற்கு குறைவாகவும், உலர்ந்த சருமத்திற்கு கொஞ்சம் அதிகமாகவும்) உபயோகிக்கவும்.
தினமும், முகத்தை சுத்தப்படுத்தி, பின் பருத்திப் பஞ்சில் இந்த டோனரை நனைத்து தடவவும் ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
டோனரை தயாரிக்க எப்பொழுதும் ஃபிரஷ்ஷான பொருட்களையும், சுத்தமான பாத்திரங்கள் மற்றும் பாட்டில்காளை உபயோகப்படுத்தவும். ஒவ்வொரு டோனரையும் முதல் முறை பயன்படுத்த ஆரம்பிக்கையில், சிறிய பகுதியில் தடவி, ஒவ்வாமை போன்ற கோளாறு ஏதுமில்லை என்று உறுதியான பின்பு முழு அளவில் உபயோகிக்கவும்.