
தோற்றப் பொலிவு, நிறம், வாசனை என்று மிகவும் சிறப்பான அழகாக கூறப்படும் பல்வேறு அங்கங்களின் அழகு குறிப்புகள் இதோ:
கீழ் உதடு கோவை பழத்தைபோல இயற்கையிலேயே சிவந்து கோணல் இராமல் அமையப்பெற்றவர்கள் பொன், பொருள், வீடு, நிலம், சொத்துகள் உடையவர்களாகவும், நல்ல பாரம்பரியத்தை சேர்ந்தவர்களாகவும் விளங்குவார்கள். இவர்களில் சிலர் நீதிபதிகளாகவும், விளங்குவார்கள். இவர்கள் சத்தியம் தவறாதவர்களாகவும், கண்டிப்பான சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது லட்சண குறிப்பு.
சிரசு உயர்ந்திருந்தால் பூரண ஆயுளும், தான தர்மம் செய்யும் குணம், அறிவியல் துறைகளில் மேன்மையும், புகழும் சிறப்புக்குரிய பதவிகளும் கிடைக்குமாம்.
வழுவழுப்பாகவும், கொழுகொழுத்தும், பளபளப்பாகவும், கன்னங்கள் இருக்குமாயின் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகளாகவும், தர்ம சிந்தனை உடையவர் களாகவும், சௌபாக்கியங்களையும், சௌகரியங் களையும் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது லட்சண சாஸ்திரம்.
மனித உடலில் தோன்றும் வியர்வைக்கு என்று ஒரு தனி மணம் அமைந்திருக்கும். சிலரின் உடலில் நெய் வாசனை வருவதை நன்றாக அறிய முடியும். அகில்கட்டை, சந்தனம், கற்பூரம், கஸ்தூரி, ஜாதிக்காய் பூ ஆகியவற்றின் மனதைப் போன்ற நறுமணம் கமழக்கூடியதான வியர்வையானது வெளிப்படும் ஆயின் அத்தகையவர்கள் மகத்தான போக சக்தியும், யோக சித்தியும் பெற்றவர்களாக திகழ்வார்களாம்.
மஞ்சள் நிறம், கருமையும் மஞ்சளும் கலந்த நிறம், கருமை நிறம் என்ற நிறங்களும் மஞ்சள் நிறமும் கருமை கலந்த மஞ்சள் நிறமும் பெற்று இருப்பது சிறப்புக்குறியதாகும்.
மலருக்கு மணம் எவ்வளவு முக்கியமோ அது போல் மனிதனுக்கு தோற்றம் மிகவும் முக்கியம் என்று கூறுவர். அப்படி தோற்றப் பொலிவுக்கு என்று சில பெருமைகள் உண்டு. அவற்றுள் பளிங்கு கற்களைப் போன்றும், ஸ்படிக மணியைப் போன்றும், அதிகாலை இளங்கதிர் படிந்த பனித்துளியைப் போன்றும் ஒளியுடையதாகவும், கம்பீரமாகவும் விளங்கும் இத்தகைய தோற்றப்பொலிவை உடையவர்கள் ஆகாய சாயலை உடையவர்கள் ஆவார்கள் என்கிறது சாஸ்திரம். இவர்களுக்கு பெரும் பொருள், போக வாழ்க்கை ,மற்றவர் போற்றுதற்குரிய சுகங்கள், புத்திர பாக்கியம் போன்றவை இயல்பாகவே வந்து அமையுமாம்.
தாடி மீசையின் ரோமங்கள் அதிக கருமையாகவும், சுருண்டும், பளபளப்பாகவும், மென்மையாகவும், பட்டு போலவும் அமைய பெற்றவர்கள் விசேஷ தனமார்களாகவும் தான தர்மங்களை செய்பவர் களாகவும், தெய்வ நம்பிக்கையும், பக்தியையும் உடையவர்களாகவும், இவர்களுடைய வாழ்க்கை நாளுக்கு நாள் பொருளாதார ரீதியிலும் ஞானத்திலும் விருத்தி அடையுமாம். இவர்களுக்கு அமையும் மனைவியும் பிறக்கும் பிள்ளைகளும் யோகம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்கிறது சாஸ்திரம்.
முடி இல்லாமல் வழுவழுப்பான பளிங்கு தளத்தை போன்ற முதுகை உடையவர்கள் சுகவாசிகளாக இருப்பார்களாம். இவர்கள் பரம்பரை குடும்ப சொத்துகளுக்கு அதிபதியாக இருப்பார்கள் அல்லது மனைவியின் வழியில் சொத்துகள் வந்தடையும் யோகம் இவர்களுக்கு உண்டாகும் என்கிறது லட்சண சாஸ்திரம்.
மேலே கூறியவற்றில் ஏதாவது சில குறிப்புகள் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். அதனை கண்டுபிடித்து சந்தோசம் அடைவீர்களாக!