

இன்றைய காலகட்டத்தில் செல்பி எடுப்பது என்பது நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி புகைப்படம் எடுக்கும் போது நமது முகம் எந்த அளவுக்கு ஷார்ப்பாக இருக்கிறது என்பதைத் தான் பலரும் முதலில் கவனிப்பார்கள். ஹாலிவுட் நடிகர்களைப் போல எடுப்பான மற்றும் தெளிவான தாடை அமைப்பு அதாவது ஜா-லைன் (Jawline) வேண்டும் என்பது இப்போது பல இளைஞர்களின் பெரிய கனவாகவே இருக்கிறது.
இதற்காக விலை உயர்ந்த அறுவை சிகிச்சைகள், அழகு நிலையங்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. நமது அன்றாடப் பழக்கவழக்கங்களில் சில சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே அந்த கவர்ச்சியான முக அமைப்பை ரொம்பவே சுலபமாகப் பெற முடியும்.
முகத்திற்கான உடற்பயிற்சிகள்!
உடம்பைக் குறைக்க எப்படி ஜிம்முக்குப் போகிறோமோ, அதேபோல முகத்தில் உள்ள தேவையற்ற சதைகளைக் குறைக்கவும் சில பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. இதில் 'மியூவிங்' (Mewing) எனப்படும் பயிற்சி பிரபலமானது. உங்களின் நாக்கின் முழுப் பகுதியையும் மேல் அண்ணத்தில் படும்படி அழுத்தி வைத்திருக்கும் இந்த எளிய பயிற்சி, உங்களின் தாடைப் பகுதியை வலிமையாக்கும்.
அதேபோல, தலையை நன்றாக நிமிர்த்தி மேற்கூரையைப் பார்த்தவாறு வானத்திற்கு முத்தம் கொடுப்பது போல உதடுகளைக் குவிக்கும் பயிற்சியை தினமும் செய்து வந்தால் டபுள் சின் பிரச்சனை மாயமாக மறைந்துவிடும்.
தண்ணீரும் உப்புமில்லா உணவு!
உங்கள் முகம் எப்போதுமே வீங்கினாற்போல உருண்டையாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள அதிகப்படியான உப்பு தான். அதிக உப்பினால் உடலில் சேரும் தேவையற்ற நீர், நேராக முகத்தில் தான் தங்கிவிடும். அதனால் பாக்கெட் உணவுகள் மற்றும் ஊறுகாய் போன்றவற்றை கொஞ்சம் ஓரம்கட்டி வையுங்கள். இதற்குப் பதிலாகத் தினமும் நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி முகம் ஆட்டோமேட்டிக்காக ஸ்லிம்மாக மாறத் தொடங்கும்.
சூயிங்கம் மெல்லுங்கள்!
எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் ஜா-லைனை செதுக்க ஒரு ஜாலியான வழி இருக்கிறது. அதுதான் சூயிங்கம் மெல்லுவது. தினமும் சிறிது நேரம் சூயிங்கம் மெல்லும் போது, அது தாடை தசைகளுக்கு ஒரு மிகச் சிறந்த வொர்க்-அவுட் போலச் செயல்படுகிறது. இது தாடையைச் சுற்றியுள்ள தசைகளை இறுக்கமாக்கி ஒரு ஷார்ப்பான லுக்கை கொடுக்கும். ஆனால், பற்கள் பாழாகாமல் இருக்கக் கட்டாயம் சர்க்கரை இல்லாத சூயிங்கம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எப்போதும் மொபைல் போனை குனிந்து கொண்டே பார்ப்பதால் கழுத்துச் சதைகள் மடிந்து டபுள் சின் உருவாகிறது. அதனால் எப்போதுமே நிமிர்ந்து நேராக உட்காரப் பழகிக் கொள்ளுங்கள். ஆண்களாக இருந்தால், தங்களின் தாடி மற்றும் மீசையை சரியான கோணத்தில் ட்ரிம் செய்வதன் மூலம் முகத்தை ஷார்ப்பாகக் காட்ட முடியும்.
அதேசமயம் பெண்களுக்கு மேக்கப் போடும்போது கான்டூரிங் (Contouring) எனப்படும் ஒரு சூப்பரான டெக்னிக் இருக்கிறது. இதன் மூலம் தாடைப் பகுதியை நிழல் போலக் காட்டி முகத்தை அழகாக செதுக்கியது போலக் காட்டலாம்.
ஒரே இரவில் இந்த ஷார்ப்பான ஜா-லைன் வந்துவிடாது. இதற்குக் கொஞ்சம் பொறுமையும் தொடர்ச்சியான முயற்சியும் மிக மிக அவசியம். மேலே சொன்ன இந்த சிம்பிளான டிப்ஸ்களை உங்களின் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். எந்த ஒரு பணச் செலவும் இல்லாமல், இயற்கையான வழியில் உங்களின் முக அமைப்பை மெருகேற்ற இவை உதவி செய்யும்.