
மேக்கப் என்பது அழகை அதிகரிக்க துணைபுரியும் ஒரு கலை. ஆனால் அதுவே நம் உடலை கெடுப்பதாக ஆகிவிடக்கூடாது அல்லவா? மேக்கப் போட்டுக் கொள்கிறேன் என்ற பெயரில் பல தவறுகளை செய்து பெண்கள் தங்கள் சருமத்தை வீணாக்கிக் கொள்கிறார்கள். அந்த தவறுகளை தடுக்க சில டிப்ஸ்.
வெளியில் போய்விட்டு வந்து வீட்டில் தூங்கப்போகும் முன்பாக கட்டாயமாக மேக்கப்பை நீக்கிவிட வேண்டும். சோம்பலில் அப்படியேதூங்கி விடக்கூடாது. இரவு முழுக்க அப்படியே இருப்பதால் சருமத்தின் துவாரங்களில் மேக்கப்பிற்கு பயன்படுத்திய பொருட்கள் நுழைந்து துவாரங்களின் அளவு பெரிதாகும். சருமம் வெகுவிரைவில் வறண்டு சொரசொரப்பாக ஆகிவிடும். முதுமை தோற்றமும் வந்துவிடும். எண்ணையும் அழுக்கும் இந்த துவாரங்களை அடைத்து அதனால் அடிக்கடி பருக்கள் ஏற்படும்.
மேக்கப் செய்ய பயன்படுத்தும் பிரஷ்களை அடிக்கடி கழுவவேண்டும். மேக்கப் பிரஷ்களை முறையாக சுத்தம் செய்ய தவறும்பொழுது அதில் பல்வேறு வேதிப்பொருட்கள், பாக்டீரியாக்கள் சேர்ந்துவிடும். இதனால் அதை பயன்படுத்தும்போது உங்கள் சருமத்திற்கு பல பிரச்னைகள் உண்டாகும்.
சில பெண்கள் கண்களில் செய்த மேக்கப்பை பஞ்சை நனைத்து முரட்டுத்தனமாக துடைக்க முயற்சிப்பார்கள். கண்ககள் பகுதிகளில் இருக்கும் சருமம் மிக மென்மையானது. அழுத்தி துடைத்தால் சீக்கிரம் சுருக்கம் ஏற்படும். கண்களை இப்படி கடுமையான முறையில் துடைக்கக்கூடாது. இதனால் இமைகளின் அடர்த்தி குறைந்து விடும்.
முகத்தில் அளவுக்கு அதிகமாக பவுண்டேஷன் பயன்படுத்தினால் முகம் வெளியில்போய் அச்சுறுத்தும் தோற்றம் வந்துவிடும். உங்கள் சருமத்தின் நிறமும் செயற்கையாகத் தெரியும். ஃபவுண்டேசனை கழுத்து மற்றும் சருமங்களில் பூசாமல் லேசாக முகத்தில் மட்டும் போட்டுக்கொள்ளலாம்.
முகத்தில் உள்ள வடுக்கள் சில மாற்றங்களை மறைப்பதற்கு சிலர் கன்சீலரை பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த கன்சீலர் சரும துவாரங்களை அடைத்துவிடும். இது காலப்போக்கில் சருமத்திற்கு நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும்.
வறண்ட சருமத்தை உடைய பெண்கள் மாய்சரைஸ் செய்துகொள்ள வேண்டும். மாய்சரைஸர் என்பது நமது சருமத்துக்கு மிகவும் அவசியமானது. சரும வறட்சியை போக்கி பொலிவாகவும், ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்ள இது பயன்படுகிறது.
உதட்டு லைனரை உதட்டு விளிம்பில் மட்டும் பயன்படுத்தாமல், உதடு முழுவதும் பயன்படுத்த வேண்டும் சிறிது நேரத்தில் உதட்டில் லிப்ஸ்டிக் நிறம் காய்ந்துவிட்டால் அடர்த்தியான உதட்டு வளையம் மட்டுமே மீதம் இருக்கும். அது பார்க்க நன்றாக இருக்காது எனவே லைனரை உதடு முழுவதும் போடவும்.
சிலர் நீர் புகாத மஸ்காராவை அடிக்கடி பயன் படுத்துவார்கள். இது நீண்ட நேரம் நீடித்து நிற்பதால் பலரின் விருப்ப தேர்வாக இருக்கும். ஆனால் இது கண் இமைகளை வறட்சியாகும்போது கண்களை அதிகமாக தேய்க்க வேண்டிவரும். அதனால் கண்களை சுற்றி உள்ள சருமம் சுருக்கமடைவதோடு இமைகளின் அடர்த்தியும் காலப்போக்கில் குறைந்துவிடும்.
மிகவும் பிடித்தமானது, நெருக்கமான தோழி பரிசாக கொடுத்தது, செண்டிமெண்டாக வைத்திருப்பது என பல பெண்களின் டிரஸ்ஸிங் டேபிளில் சில அழகு சாதன பொருட்களை பல ஆண்டுகாலமாக பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
மருந்துகளுக்கு மட்டும் இல்லை. அழகு சாதன பொருட்களுக்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு. அதிலும் பல வேதிப்பொருட்கள் கலந்து செய்யப்படுவதால் மேக்கப் ஐட்டங்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். எக்ஸ்பயர் தேதி முடிந்த பின்னரும் கூட அந்த பொருட்களை பாதுகாத்து பயன்படுத்துவது தவறு. அது உங்கள் தோற்றத்துக்கும் சருமத்துக்கும் சரி, நல்லது அல்ல.