

முடிகள் அதிகமாக உதிர ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், மரபியல் மற்றும் சில மருத்துவ நிலைகள் காரணமாகலாம். முடி உதிர்வதின் சரியான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். ஊட்டச்சத்து குறைபாடுகள் என்றால் புரதச்சத்து, இரும்பு, வைட்டமின்கள் நிறைந்த சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். அதற்கு கீரைகள், மீன், முட்டை, பயறு மற்றும் பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் அளிக்கும்.
மன அழுத்தம் காரணமாக அமைந்தால் அதற்கு மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை கடைபிடிக்கலாம்.
ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணம் என்றால் குறிப்பாக கர்ப்பம் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு முடி உதிர்வு ஏற்படலாம். சில வகையான முடி உதிர்வுக்கு மரபணு காரணங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இதற்கு தகுந்த மருத்துவரைக் கலந்து ஆலோசனை பெறுவது அவசியம்.
எண்ணெய் மசாஜ்:
முடி அடர்த்தியாக இல்லாதவர்கள் எண்ணெய் வைக்க மாட்டார்கள். அது இன்னும் ஒல்லியாக காண்பிக்கும் என்பதால். ஆனால் எண்ணெய் வைக்காததால் மேலும் அடர்த்தி குறைந்து வலுவில்லாமல் போய்விடும். எனவே வாரத்துக்கு ஒரு முறையாவது தலையில் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்வது முடி அடர்த்தியாக வளர உதவும். ரத்த ஓட்டம் மேம்படும். இதை தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணைகளுடன் சேர்த்து மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் மற்றும் தேன்:
விளக்கெண்ணெயை சூடுபடுத்தி அதில் சிறிது தேன் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு தலைமுடியை நன்கு அலச நல்ல பலன் தெரியும்.
வெங்காயச் சாறு:
வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து வாரத்துக்கு ஒரு முறையாவது தலையில் தடவி வெதுவெதுப்பான நீரில் குளித்து வர முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன், அடர்த்தியாகவும் இருக்கும்.
கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்:
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும் தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி அதில் கருவேப்பிலை விழுதை சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும் சூடு ஆறியதும் தலை முழுவதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இதனை செய்ய இளநரை போக்குவதுடன் முடியும் அடர்த்தியாக வளரும்.
வெந்தய பேஸ்ட்:
வெந்தயத்தை இரண்டு ஸ்பூன் அளவில் எடுத்து நீரில் ஊற வைக்கவும். ஒருமணி நேரம் கழித்து அதனை சிறிது நீருடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி விடவும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் அத்துடன் யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்துக் கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை வெதுவெதுப்பான நீரில் அலசி வர அடர்த்தியாக வளரும். வாரத்திற்கு ஒருமுறை இதனைச் செய்யலாம்.
ரோஸ்மேரி எண்ணெய்:
ஒரு கிண்ணத்தில் ஐந்தாறு சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் விட்டு, இரண்டு சொட்டு ஜோஜோபா எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து அரப்பு தூள் கொண்டு தலைமுடியை அலசலாம்.
முக்கியமாக தலை முடி அதிகம் உதிராமல் இருப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதை அடிக்கடி பயன்படுத்துவது முடியை வறண்டதாகவும், பளபளப்பு இன்றியும் மாற்றுவதுடன், முடி இழைகளை பலவீனப்படுத்தி முடி உடைவதற்கும், பிளவு படுவதற்கும் வழி வகுக்கும்.