

எவரிடமும் போராட்டமே இல்லாத குணம் வாழ்க்கையில் இல்லை. சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் அந்த எண்ணம் நம்முள் வந்துவிடும். ஆனால் அதனை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியம்.
பூமியில் வாழும் எந்த உயிரினமும் போராடத்தை சந்திக்காமல் வாழ முடியாது. மிருகங்கள் அனைத்தும் தன் உயிருக்காக போராடுகிறது. மனிதன் மட்டும்தான் வாழ்க்கையோடு போராடுகிறான். ஏனென்றால் மனிதனுக்கு ஆறு அறிவோடு, ஆசையும் சேர்ந்து இருப்பதுதான் காரணம்.
போராட்டம் என்பது அடுத்தவரை சமயம் பார்த்து வீழ்த்தி, தான் முன்னேற வேண்டும் என்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. அந்த தவறை செய்யும் எவரும் வேறு ஒரு சமயத்தில் வீழ்ந்து போவார்கள். முன்னேற்றம் என்பதுதான் சார்ந்த துறையில், அறிவாலும் ஆற்றலாலும் இருக்கவேண்டும். அதுவே சுயத்தின் அடையாளம்.
உழைப்பில் முன்னேறுங்கள். அதன் பலன் முழுவதும் உங்களை சார்ந்து இருக்கும். அங்கே போட்டியோ, பொறாமையோ இருக்காது. அது எந்த வகையிலும் உங்களை கீழே தள்ளி வேடிக்கை பார்க்காது.
வாழ்க்கையில் எப்போதும் புதிய சிந்தனை, புதிய யுக்தி போன்றவை மனதுக்குள் ஊற்றுக்கண் மாதிரி தோன்றி, ஜீவநதியாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இலக்கின் தடயங்கள் உங்கள் கண்களுக்கு முன்னே தோன்றி, செயல்படும் திறன் கூடிக் கொண்டே போகும் என்பதை உணருங்கள்.
வாழ்க்கையில் சுமைகளை தோள் ஏற்றி சுமந்து பயணிக்கும்போது, நேர்மறை எண்ணங்களோ, அல்லது சிந்தனைகளோ வற்றிப் போகும். அதனால், இதுவும் அல்ல... எதுவும் கடந்து போகும் என்ற மனப்பான்மை மனதில் வளர்த்துக்கொண்டு, அதனை இடது கையால் புறம் தள்ளி, வாழ்க்கையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டே இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
இலக்கை நோக்கி பயணிக்கும்போதுதான், நீங்கள் பதிக்கும் தடங்கள் முன்னேற்றத்திற்கு வழி காட்டும். எட்டாக்கனி கூட எட்டும் வரை போராடும் மனப்பக்குவம் உண்டாகும்,
வாழ்க்கை முடியும் வரை போராட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். அதனை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் மனித தனத்தை இழந்து விடக்கூடாது. அப்போது தான் சிந்திக்கும் எண்ணம் நல் வழிகாட்டும். மிருக குணம் எழுந்தால், வாழ்க்கை வேரறுந்து வீழ்ந்து போகும்.
நீங்கள் நடக்கும் பாதையும், கடக்கும் எண்ணமும் நற்சிந்தனையோடு, நற்செயல்களை நோக்கி இருந்தால், மலரும் வாழ்க்கை மகிழ்வையும், வெற்றியையும் பெற்றுத்தரும்.
மனிதம் சூடும் வாழ்க்கை, பொறுமை காக்கும் மனம், நிதானம் கடைபிடிக்கும் உணர்வுகள், இவை யாவும் வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் காரணிகள்!
எதுவுமே வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில், பாரதி எப்படிப்பட்ட புதுமை படைத்து, நமக்கு தந்துவிட்டு, இன்றளவும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஐயன் வள்ளுவன் எப்படிப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகளை கலங்கரை விளக்கமாக தந்து, இன்றளவும் புகழ்பெற்று நிலைத்து நம்மோடு, வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருக்கிறார்.
நம்மை புடம் போட்டு வளர்க்க, இன்னும் எண்ணில் அடங்காத ஆன்றோர்கள் சான்றோர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம். ஆகவே வாழ்க்கையை எளிதாக எதிர்கொள். எளிமையாக அதேசமயம் ஏற்றமாக வாழ்ந்து காட்டி, வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி சூடுங்கள்!