

மனித வாழ்க்கை என்பது பணம், புகழ், அந்தஸ்து அல்லது விரும்பிய வேலை என ஏதோ ஒரு தேடலால் நிறைந்ததுதான். நம் இலக்குகளை அடைய கடினமான போராட்டங்களும், பதட்டமான முயற்சிகளும் தேவையில்லை. மாறாக, சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், நினைத்ததை சுலபமாக அடையமுடியும். அது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இறுக்கிப் பிடிப்பதைக் கைவிடுங்கள்
தண்ணீரை உங்கள் உள்ளங்கைக்குள் நிரப்பி, அதை இறுக்க மூடிக்கொண்டால், நீர் விரைவில் கையில் இருந்து நழுவி ஓடிவிடும். அதுபோலத்தான், புதிய வேலை, உறவுகள் அல்லது நட்பு போன்றவற்றை நாம் இறுகப் பற்றினால், அந்த செயல் அதிக அழுத்தத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி விடுகிறது. இந்த மன அழுத்தம் தான் நீங்கள் நினைத்ததை அடையமுடியாமல் போவதற்குக் காரணம்.
மாறாக, இரண்டு கைகளையும் குவித்து வைத்து இருந்தால், தண்ணீர் நீண்ட நேரத்திற்குச் சிந்தாமல் இருக்கும். அதுபோலவே, இலக்கை நோக்கிய பயணத்தில் பதட்டமின்றி, மனதை லேசாக்கிக்கொண்டு பயணப்படும்போது, உங்களின் இலக்கு விரைவில் கைகூடும். நீங்கள் உங்கள் இலக்கை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும்போது, வாழ்க்கை தானாகவே தன் பாதையில் செயல்படத் தொடங்குகிறது.
வெற்றியைத்தேடி ஓடாதீர்கள்
வெற்றியை துரத்துவதால் எந்தப் பயனும் இல்லை. வெற்றியைத்தேடி ஓடாமல், உங்கள் காரியத்தில் மட்டும் முழு கவனமாக இருந்து, அதைச் சிறப்பாகச் செய்யும்போது, வெற்றி தானாகவே உங்களைத் தேடி வரும். இது வேலை, உறவுகள், நட்பு என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
நீங்கள் செய்யும் செயல் சிறப்பாக இருக்கும்போது அதன் விளைவாக வெற்றி அதைத் தொடர்ந்து வரும். இந்த அணுகுமுறை, உங்கள் மனதின் கவனத்தை முடிவைப் பற்றி யோசிக்காமல், நிகழ்காலச் செயலில் நிலைநிறுத்துகிறது.
நம்பிக்கையும் காத்திருப்பும் அவசியம்
விரும்பியதை அடையத்தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து முடித்த பிறகு, நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். "என்னால் முடிந்த அத்தனையும் சிறப்பாகச் செய்து முடித்துவிட்டேன்" என்று நீங்கள் அசைக்க முடியாத மனஉறுதியுடன் நம்பும்போது, விரும்பியது விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்.
இந்தப் புரிதல் ஒருவிதமான விடுதலை உணர்வை அளிக்கிறது. “இந்தச் செயலைச் செய்துவிட்டேன்; முடிவு என்னவாக இருக்குமோ?" என்று பதற்றப்படும்போது, மன அமைதி கெட்டுவிடுகிறது. எனவே, முடிவுகளைப் பற்றி யோசிக்காமல், உங்கள் முயற்சியைச் செய்துவிட்டு, பிரபஞ்சத்தின் விதியை நம்பி அமைதியாகக் காத்திருங்கள்.
அச்சத்தையும் அழுத்தத்தையும் நீக்குங்கள்
“நம் இலக்கில் வெற்றி பெறுவோமா மாட்டோமா?” என்கிற அச்சத்திலும், அது சார்ந்த அழுத்தத்திலும் இருக்கும் மனிதர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்காது. அச்சம் உள்ள மனதில் அவநம்பிக்கைதான் தலைதூக்கும்.
அந்த மனதைக் துணிச்சல் மற்றும் நம்பிக்கையால் நிரப்பும்போது, “நாம் வேண்டியதை அடைந்தே தீருவேன்” என்கிற உறுதியும் சேரும். எண்ணம், செயல், உணர்வு ஆகியவை அனைத்தும் இணைந்து செயல்படும்போது, நீங்கள் விரும்பியது ஒரு அமைதியான கடலில் கப்பல் நீந்திச் செல்வதைப்போல, இலகுவாக உங்களைத்தேடி வந்து சேரும்.
வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக எதையும் அடைய முடியாது. சிறந்த முயற்சிகளைச் செய்துவிட்டு, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தால், நீங்கள் நினைத்தது விரைவில் நடந்தேறும். உங்கள் மனதைத் தளர்த்திக் கொள்ளுங்கள்; விரும்பியது தானாகவே நம்மை வந்து சேரும் என்ற நம்பிக்கையும் செயல்பாடும்தான் வெற்றியை அடைய வைக்கும்.