

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், கண்ணாடியில் தலையைப் பார்த்ததும் ஒன்றிரண்டு வெள்ளை முடிகள் தெரிந்தால், “நரை வந்துவிட்டதே!” என்று பதற்றப் படாதவர்கள் குறைவு. உடனே நெல்லிக்காய், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி என்று பாட்டி வைத்தியக் குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன. நரை மறைய வேண்டும் என்ற ஆசையில், அவற்றில் எது உண்மை, எது கட்டுக்கதை என்று யோசிக்காமல் கிடைக்கும் எல்லா வழிகளையும் முயற்சி செய்யத் தொடங்கிவிடுகிறோம்.
வீட்டில் பெரியவர்கள் சொன்ன வைத்தியம் முதல், சமூக ஊடகங்களில் பரவும் புதிய குறிப்புகள் வரை எதையும் விடுவதில்லை. ஆனால் இவற்றில் உண்மையில் நரை முடியை கருப்பாக்குவது எது? வெறும் நம்பிக்கை எது? என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நரை ஏன் வருகிறது?
முடியின் இயற்கையான நிறத்துக்குக் காரணம் மெலனின் என்ற நிறமிப் பொருள். வயது அதிகரிக்கும் போது இதன் உற்பத்தி குறைவதால் முடி நரைக்கிறது. குடும்பத்தின் மரபும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, நரை என்பது பெரும்பாலும் இயற்கையான மாற்றமே.
இளநரைக்கு காரணம் என்ன?
இளம் வயதிலேயே நரை வருவதற்கு மரபுடன், வைட்டமின் B12, இரும்புச்சத்து குறைபாடு, தைராய்டு பிரச்சினைகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம். புகைபிடித்தல், வாழ்க்கைமுறை, மனஅழுத்தம் போன்றவையும் சில ஆய்வுகளில் தொடர்புடையதாகக் குறிப்பிடப் படுகின்றன. குடும்பத்தில் இளநரை இருந்தால், நமக்கும் வர வாய்ப்பு அதிகம்.
சமூக ஊடகங்களின் தாக்கம்
இன்றைய சமூக ஊடகங்களில் “ஏழே நாளில் நரை மறையும்”, “இந்த எண்ணெய் போதும்; முடி மீண்டும் கருப்பாகும்” என்று பல வீடியோக்களும் பதிவுகளும் வேகமாகப் பரவுகின்றன. பாட்டி வைத்தியக் குறிப்புகள், தனிப்பட்ட அனுபவங்கள், விளம்பரங்கள் என எல்லாமே ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.
ஒருவருக்கு பயன் ஏற்பட்டதாகச் சொல்வது மட்டும், அந்த முறையை அனைவருக்கும் நிரூபிக்கப்பட்ட சிகிச்சை என்று அர்த்தமல்ல. குறிப்பாக முன்–பின் புகைப் படங்களையும் அதிரடி வாக்குறுதிகளையும் பார்த்தவுடன் நம்பிவிடாமல், மருத்துவ ஆதாரம் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பதே நல்லது.
நெல்லிக்காயும் நரையும்
நெல்லிக்காய் சத்தான உணவு. அதை உணவில் சேர்ப்பது உடல்நலத்துக்கு நல்லது. நெல்லிக்காய் எண்ணெயைத் தலைமுடியில் பயன்படுத்துவதால் முடி மென்மையாக இருக்கலாம். நெல்லிக்காய் நல்ல உணவுதான். ஆனால் நரைத்த முடியை மீண்டும் கருப்பாக்கும் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
கரிசலாங்கண்ணியின் கருமை
கரிசலாங்கண்ணி தலைமுடி பராமரிப்பில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சாறு முடி வளர்ச்சிக்கு உதவுமா என்பது குறித்து சில ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் நரைத்த முடியை மீண்டும் கருப்பாக்கும் திறன் இதற்கு இருப்பதாக உறுதியான ஆதாரம் இல்லை. எனவே, முடி பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் கரிசலாங்கண்ணியை, நரை போக்கும் மருந்தாகக் கருதுவது சரியல்ல.
செம்பருத்தி, ஆவாரம்பூ- முடி வளர்ச்சி
முடி வளர செம்பருத்தியை எண்ணெயில் கலந்து தலைமுடிக்குப் பயன்படுத்துவது நம் பாரம்பரியத்தில் உள்ளது. ஆவாரம்பூவுக்கும் பாரம்பரியப் பயன்பாடுகள் உண்டு. ஆனால் இவற்றைத் தொடர்ந்து பயன் படுத்தினால் வெள்ளை முடி கருப்பாகும் என்பதற்கு நம்மில் போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை. எனவே, பாரம்பரியப் பயன்பாட்டை நரை போக்கும் சிகிச்சையாகக் கருதமுடியாது.
எண்ணெய் தேய்த்தலின் பலன்
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை தலைமுடியை மென்மையாகவும் உலராமல் இருக்கவும் உதவலாம். ஆனால் எண்ணெய் முடியின் இயற்கையான நிறத்தை மாற்றாது. அது தலையில் உள்ள சூட்டை குறைக்குமே தவிர வெள்ளை முடியில் எண்ணெய் தேய்த்தால் அது கருப்பாகிவிடும் என்பது கட்டுக்கதை.
நரையைப் பறித்தால் பத்து நரை வருமா? மாபெரும் கட்டுக்கதை:
“ஒரு வெள்ளை முடியைப் பறித்தால், அதற்குப் பதிலாக பத்து வெள்ளை முடிகள் வரும்” என்பது பிரபலமான கட்டுக்கதை. ஒரு முடியைப் பறிப்பதால் அருகில் உள்ள முடிகள் வெள்ளையாக மாறாது. ஆனால் தொடர்ந்து முடியைப் பறிப்பது முடியின் வேரைப் பாதிக்கலாம். எனவே நரையைப் பறிப்பதைவிட அப்படியே விட்டுவிடுவது நல்லது.
இளநரை வராமல் இருக்க உணவும் மருத்துவமும்
இளம் வயதில் திடீரென நரை அதிகரித்தால், மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகள் குறித்து ஆலோசிக்கலாம். B12 அல்லது வேறு சத்து குறைபாடு, தைராய்டு பிரச்சினை போன்ற காரணம் இருந்தால் அதைச் சரிசெய்வது முக்கியம். சில சந்தர்ப்பங்களில் காரணத்துக்குச் சிகிச்சை அளித்த பிறகு முடியின் நிறத்தில் மாற்றம் ஏற்படலாம்.
சமச்சீர் உணவு, போதுமான தூக்கம், புகைபிடிப்பதைத் தவிர்த்தல் போன்ற நல்ல பழக்கங்கள் உடலுக்கும் முடிக்கும் நல்லது. ஆனால் “இந்த ஒரு உணவைச் சாப்பிட்டால் நரை போய்விடும்” என்பது கட்டுக்கதை.
பாட்டி வைத்தியத்தின் உண்மையான பாடம்
பாட்டி வைத்தியத்தில் நெல்லிக்காய், கீரைகள், கறிவேப்பிலை போன்ற சத்தான உணவுகளும், செம்பருத்தி, கரிசலாங்கண்ணி போன்ற மூலிகைகளும் இடம்பெறுகின்றன. இவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது இயற்கையான, எளிய முடிப் பராமரிப்பு வழியாக இருக்கலாம்; ஆனால் நரையை நிரந்தரமாகக் கருப்பாக்கும் மருந்தாகக் கருதமுடியாது.
இன்றைய விளம்பரங்களில் மூலிகைகளின் பெயர்களை முன்னிறுத்தி, சில பொருட்களில் பல்வேறு ரசாயனக் கலவைகள் சேர்க்கப்படுகின்றன. அவை நரைமுடியை தற்காலிகமாக கருப்பாகக் காட்டலாம். ஆனால் தேவையற்ற ரசாயனப் பொருட்கள் தலைமுடி, தலையோடு மற்றும் உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே இயற்கையான வழிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தெரியாத கலவைகள் கொண்ட பொருட்களைத் தவிர்ப்பதே பாதுகாப்பான அணுகுமுறை.