

இன்ஸ்டாகிராம், யூ ட்யூப், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் உள்ள இன்புளுயன்சர்ஸ், 'மினாக்ஸிடிலை (Minoxidil) பயன்படுத்தி முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் முடி வளர வைக்க முடியும்' என்று தொடர்ச்சியாக விளம்பரம் செய்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாகவே அழகு சாதனப் பொருட்களில் அதிக முக்கியத்துவம் பெறுவது முடி வளர்ச்சிக்குரிய எண்ணெய்கள், தைலங்கள், சீரம்கள் தான். அதனால், மார்க்கெட்டிங் இதற்கு தொடர்ச்சியாக நடைபெறுகிறது, இவற்றின் விற்பனையும் உச்சத்தில் தான் உள்ளது.
இன்புளுயன்சர்ஸ் வித்தைகள்:
சமூக வலைதள இன்புளுயன்சர்கள் முதலில் பெருமளவில் முடி உதிர்ந்த தலையை காட்டுவார்கள், அதில் அவர்களின் மண்டை தெளிவாக தெரிவதை போல இருக்கும், வழுக்கை முழுமையாக விழும் முன் 70% நிலைகளில் எடுத்த போட்டோவை போல இருக்கும். அடுத்தது, அவர் தலையை ஷாம்பூ போட்டு கழுவி சுத்தம் செய்து விட்டு, மினாக்ஸிடலை தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்வார். பின்னர் நுண்ணிய ஊசிகள் நிறைந்த ரோலரை சில நிமிடங்கள் தலையில் ஓட்டி விளையாடுவார்.
பின்னர் ஒரு மாதத்தில் புதிய முடி தோன்றியதாக போட்டோ காட்டுவார், அடுத்த மாதம் முடி இன்னும் அதிகரிக்கும், இப்படியே 6 மாதத்தில் அலைபாயுதே மாதவன் தலை போல முடி அடர்த்தியாக இருப்பதாக காட்டுவார்கள். ஆனால், இதெல்லாம் நிஜமாகவே பலனளிக்கிறதா? என்பது தான் கேள்வி.
மினாக்ஸிடில் என்றால் என்ன?அது எவ்வாறு செயல்படுகிறது? (What is Minoxidil? How is it Working? )
அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மினாக்ஸிடில் என்பது முதலில் இரத்த அழுத்த மருந்தாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஆய்வு செய்யப்பட்டதில், ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியாவிற்கு மிகவும் பரவலாக சிகிச்சைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது முடியின் வேர்கால்களில் உள்ள நுண்ணறைகளைச் சுற்றி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை தூண்டி, காலப்போக்கில் முடி அடர்த்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மினாக்ஸிடில் வெளிப்புற பூச்சாக தலைமுடிக்கு பயன்படுத்தப்படுகிறது. இது 2% மற்றும் 5% கரைசல் வடிவமாக கிடைக்கிறது. இதில் 5% கரைசல் தொடர்ந்து சோதனைகளில் சிறந்த முடிவுகளைக் காட்டுகிறது.
மினாக்ஸிடில் பலனளித்ததா?
மருத்துவ ஆய்வுகள்படி பலருக்கும் மினாக்ஸிடிலின் செயல்திறனை உள்ளதாக இருக்கிறது. டெர்மடாலஜிக் தெரபியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஒருவர் 4 மாதங்கள் 5% மினாக்ஸிடில் தொடர்ந்து பயன்படுத்தியதில் அவருக்கு முடி நன்கு வளர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஜாமா டெர்மடாலஜியில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், மினாக்ஸிடில் மேற்பூச்சு பதிலளிக்காத சிலருக்கு, குறைந்த அளவிலான மினாக்ஸிடில் மருந்துகளை வாய்வழியாக கொடுத்த போது, அவர்களுக்கு முடி வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், வாய்வழி மினாக்ஸிடில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆபத்து கொண்டது என்பதால் மருத்துவரின் மேற்பார்வை அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பக்கவிளைவுகள்:
நீண்டகால முடி உதிர்தலுக்கு மினாக்ஸிடில் சிகிச்சை மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான். இதை பயன்படுத்தும் போது முடி வளர்ச்சியை ஊக்குவித்தாலும், ஆரம்பகால கட்ட முடி உதிர்தலுக்கு மட்டுமே செயல்திறன் கொண்டதாக உள்ளது. இதன் ரிசல்ட் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும், நிறுத்தி விட்டால் மீண்டும் முடி உதிர தொடங்கி விடும்.
இன்புளுயன்சர்கள் பெரும்பாலும் வெற்றிக் கதைகளை மட்டுமே சொல்கின்றனர். தோல்வி, பக்க விளைவுகள் மற்றும் எச்சரிக்கைகளை சொல்வதில்லை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)