
டென்ஷன் மிகுந்த இந்த காலகட்டத்தில் தலைமுடி உதிர்வு என்பது ஆண் பெண் என இரு பாலருக்குமே பெரும் பிரச்னையாக உள்ளது. இளம் வயதிலேயே முடி அடர்த்தி குறைவது, வழுக்கை விழுவது எல்லாம் இன்று சாதாரணமாகிவிட்டது. பொடுகு பிரச்னை, அடர்த்தி குறைவு, வழுக்கை பிரச்சனை மற்றும் முடி கொட்டும் பிரச்னைக்கு சின்ன வெங்காயம் பயன்படுத்துவது நல்ல தீர்வைத்தரும். இது ஒன்றும் நவீன கால குறிப்பு அல்ல. காலம் காலமாக நம் பெரியோர்களால் கடைப் பிடிக்கப்பட்டு வரும் எளிமையான வீட்டு குறிப்புகள்தான்.
வெங்காயச் சாறு:
முடி வளர்ச்சிக்கும், நுனி முடி பிளவுப்படாமல் இருப்பதற்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்பர் ரத்த ஓட்டத்தை சீர் செய்து, முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் இவை இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவை. இதனால் பொடுகு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதை உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும் 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசி விட முடி உதிர்வது நிற்கும்.
வெங்காய எண்ணெய்:
கடைகளில் வெங்காய எண்ணெய் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இவை முடி உதிர்வை தடுக்க உதவும்.
சின்ன வெங்காயத்தைக் கழுவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். அதைத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க வைத்து, ஆறியதும் ஈரம் புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். இந்த எண்ணையை தினசரி முடியில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
வெங்காயச் சாறில் உள்ள ப்ளவனாய்டுகள் முடிக்கு பளபளப்பை தரும். இதனால் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவைக்கேற்றபடி அவ்வப்பொழுது இந்த வெங்காய எண்ணெயை தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த முடிகொட்டுவது குறையும்.
வெங்காய பேஸ்ட்:
இன்று இளம் வயதிலேயே இளநரை பிரச்சனை நிறைய பேருக்கு இருப்பதைக் காணலாம். இந்த இளநரை பிரச்சினையை சரி செய்ய வெங்காய பேஸ்ட் உதவும். சின்ன வெங்காயத்தில் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளது. இவை முடி பாதிக்கப்படுவதை தடுப்பதுடன், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
வெங்காயத்தை அரைத்து பேஸ்ட்டாக்கி உச்சந்தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து அலசி விட முடி உதிர்வை தடுக்கும்.
சின்ன வெங்காயத்தை சாறெடுத்து தலையில் தேய்ப்பதால் முடி உதிர்வை தடுப்பதுடன், முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். உச்சந்தலையில் இதனை தேய்த்து மசாஜ் செய்யும்பொழுது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். முடிக்கு பளபளப்பை தரும் இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தடவி மசாஜ் செய்யலாம்.
சிலருக்கு வெங்காயச்சாறு தோலில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே பயன்படுத்துவதற்கு முன்பு சிறிது சாற்றை எடுத்து புறங்கையில் தேய்த்து, சிறிது நேரம் வைத்திருந்து சோதித்துப்பார்த்து பயன்படுத்துவது நல்லது.