
நம் உடலில் சருமத்தின் அடிப்பரப்பில் உற்பத்தியாகும் கொல்லாஜன் சருமத்தின் ஆரோக்கியத்தை தூக்கிப் பிடிக்கும் தூணாக நிற்கிறது. நாம் இருபத்தைந்து வயதை கடக்கும்போது கொல்லாஜன் உற்பத்தி குறைய ஆரம்பிக்கிறது. விளைவு? சருமத்தில் சுருக்கம் விழவும்,
பளபளப்பு குறையவும் ஆரம்பிக்கும். இந்த நிலை தொடராமல் பாதுகாக்க, கொல்லாஜன் உற்பத்தியைப் பெருக்குவதே ஒரே வழி. இதற்கு, அதிக செலவில்லாமல், வீட்டிலேலேயே இயற்கை முறையில் தயாரித்து உபயோகிக்கத் தகுந்த கிரீம் ஒன்றின் ரெசிபியை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த க்ரீம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியம் தரும் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் கொல்லாஜன் ஸிந்தஸிஸ் பெற உதவும் தாவர வகைக் கூட்டுப்பொருட்கள் அடங்கியதாக இருக்கும். மேலும், ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்ட இந்த க்ரீம் சருமத்தை அமைதிப்படுத்தவும், நீரேற்றத்துடன் வைத்துப் பாதுகாக்கவும் உதவும். இந்த கொல்லாஜன் பூஸ்டர் க்ரீம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
1.ஃபிரஷ் பீட்ரூட் 1
2.கார்ன் ஸ்டார்ச் 1 டேபிள் ஸ்பூன்
3.ரோஸ் வாட்டர் 70 ml
4.ஃபிளாக்ஸ் சீட்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
5.ஸ்வீட் ஆல்மண்ட் ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
6.ஜோஜோபா ஆயில் 10 சொட்டு (drops)
(க்ரீம் அதிக நீர்ச்சத்து உள்ளதாக இருக்க வேண்டுமானால் ஒரு டீஸ்பூன் கிளிசரின் அல்லது 3-5 சொட்டு வைட்டமின் E சேர்த்துக் கொள்ளலாம்).
கொல்லாஜன் பூஸ்டர் க்ரீம் செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும். துருவியதை நன்கு பிழிந்து, ஜூஸை சீஸ் கிளாத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு சிறிய சாஸ்பேனில் பீட்ரூட்ஜூஸ், ரோஸ் வாட்டர், கார்ன் ஸ்டார்ச் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின் அடுப்பில் வைத்து மீடியம் தீயில் தொடர்ந்து கிளறவும். கலவை கெட்டியாகி, மென்மையான க்ரீம் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
மற்றொரு சாஸ்பேனில் ஃபிளாக்ஸ் சீட்ஸ்ஸைப் போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றவும். பிறகு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். மிதமான தீயில் 4-5 நிமிடம் வைத்திருந்து, கெட்டியான ஜெல் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சிறிது ஆறியதும் சீஸ் கிளாத்தில் வடிகட்டி ஜெல்லை பிரித்தெடுத்துக் கொள்ளவும்.
பீட்ரூட் கலவை நன்கு குளிர்ந்ததும், அதனுடன் ஃபிளாக்ஸ் சீட் ஜெல், ஆல்மண்ட் ஆயில் மற்றும் ஜோஜோபா ஆயில் ஆகியவற்றை சேர்த்து, ஒரு பட்டுப்போன்ற மென்மையான டெக்ச்சரில் ஒரே மாதிரியான க்ரீம் உருவாகும் வரை கலக்கவும்.
பின் இந்த க்ரீமை, சுத்தமான, கிருமியழிக்கப்பட்ட (Sterilized) கண்ணாடி பாட்டிலில் சேமித்து, ஃபிரிட்ஜில் வைத்துப் பத்திரப்படுத்தி உபயோகிக்கவும். வெளியில் வைத்தால், ஏழு நாட்களுக்குள் உபயோகித்து முடித்துவிடவும்.
உபயோகிக்கும் முறை:
சாயங்கால நேரத்தில், முகத்தை நன்கு சுத்தப் படுத்திவிட்டு, இந்த கிரீமிலிருந்து கொஞ்சம் எடுத்து முகத்திலும் கழுத்திலும் தடவவும். பின் மேல் நோக்கி மெதுவாக மசாஜ் செய்யவும். பின், சத்துக்கள் உறிஞ்சப்பட விட்டுவிடவும். காலையில் எழுந்ததும், வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்தவும். இந்த க்ரீமின் முழு பயனை அடைய, வெயிலில் செல்லும் போதெல்லாம் SPF உபயோகிக்கவும்.
பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் C, கொல்லாஜன் உற்பத்திக்கும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் பாதிப்பை உண்டு பண்ணச் செய்யும் ஃபிரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
கார்ன் ஸ்டார்ச் க்ரீமை கெட்டியாக்க உதவும் ஓர் இயற்கையான பொருள். இது சருமத்தின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்காக அமர்ந்து சருமம் பாதுகாப்புபெற உதவும். ஃபிளாக்ஸ் ஜெல் சருமத்திற்கு நீரேற்றம் தர உதவும்.
மேலும் அதிலுள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள், லிக்னன்ஸ் (Lignans) மற்றும் ம்யூசிலேஜ் (Mucilage) போன்றவை சருமத்து பாதுகாப்பு அம்சங்களை தக்கவைக்க உதவி புரியும்.