பியூட்டி பார்லர் என்ற பெயரில் நடக்கும் பகீர் மோசடிகள்... உஷாராகும் நேரம் வந்துவிட்டது!

Hair Transplant Clinic
Hair Transplant Clinic
Published on

முடி கொட்டும் பிரச்னை இன்று பலருக்கும் மிகப்பெரிய மன உளைச்சலைத் தருகிறது. இழந்த முடியை எப்படியாவது மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய நம்ம ஆட்கள் தயங்குவதே இல்லை. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஊருக்கு ஊர் பல போலி கிளினிக்குகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. 

சமீபத்தில் சென்னை அண்ணா நகரில், வெறும் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்த சில இளைஞர்கள் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர வைத்தது. மக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது மிகக் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. 

தப்பித்த போலிகள்! 

தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000-க்கும் அதிகமான மருத்துவமனைகள் மற்றும் சிறு கிளினிக்குகள் முறையாக அரசிடம் பதிவு செய்து இயங்கி வருகின்றன. அலோபதி மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்று மருத்துவ மையங்களும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தங்கள் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால், இந்த முடி மாற்று மையங்கள் மட்டும் 'அழகு நிலையம்' அல்லது 'ஸ்கின் கேர் சென்டர்' என்ற பெயர்ப்பலகையை மாட்டிக்கொண்டு இதுவரை அரசை ஏமாற்றி வந்தன. இவை நேரடியாக மருத்துவத்துறையின் கீழ் வராததால், சுகாதாரத்துறை அதிகாரிகளால் அங்கு சென்று நேரடியாக ஆய்வு செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாத ஒரு சூழல் நிலவியது.

அரசின் அதிரடி ஆக்‌ஷன்!

இந்தச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தித் தான், எந்த ஒரு மருத்துவப் பின்னணியும் இல்லாதவர்கள் மயக்க மருந்து கொடுப்பது முதல் அறுவை சிகிச்சை செய்வது வரை அனைத்து ஆபத்தான காரியங்களையும் சர்வசாதாரணமாகச் செய்து வந்தனர். இந்தப் பகீர் உண்மைகள் வெளிவந்த பிறகு உஷாரான தமிழக அரசு, மருத்துவ நிறுவன பதிவு சட்டத்தில் பல அதிரடி திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்கான பிரத்யேக அரசாணையும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பதிவு நடைமுறைகள் ஆன்லைனில் எளிதாக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
Miss Matured: நவீன யுகத்தின் புதிய அடையாளம்!
Hair Transplant Clinic

கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய விதிகள்!

புதிய விதிமுறைகளின்படி, இனிமேல் முடி மாற்று அறுவை சிகிச்சை, லேசர் மூலம் செய்யப்படும் தோல் சிகிச்சைகளை, அதற்கான முறையான அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். பதிவு பெற்ற உரிமம் உள்ள கிளினிக்குகளில் மட்டுமே இந்த சிகிச்சைகள் நடக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவேளை சிகிச்சை நடக்கும்போது நோயாளிக்கு ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால், உடனடியாக உயிரைக் காக்கும் வகையிலான முதல் உதவி மற்றும் அவசர சிகிச்சை உபகரணங்கள் அங்கு கட்டாயம் இருக்கவேண்டும்.

சிகிச்சை பெறுபவர்களிடம் அதற்கான முழு சம்மதத்தையும் எழுத்துப்பூர்வமாகப் பெற்ற பிறகே வேலையை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்த முழு ஆவணங்களையும் முறையாகப் பராமரிப்பது மிக மிக அவசியம். இனிமேல் சுகாதாரத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் இந்த மையங்களுக்குள் நுழைந்து திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
முடிமாற்று அறுவை சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடுகள்.! தமிழக அரசு அதிரடி.!
Hair Transplant Clinic

அரசு வகுத்துள்ள இந்த விதிகளை மீறும் கிளினிக்குகள் மற்றும் போலி மருத்துவர்கள் மீது சட்டரீதியாக மிகக் கடுமையான கிரிமினல் நடவடிக்கை பாயும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் இந்த புதிய கட்டுப்பாடு கட்டாயம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு சிறந்த முன்னெடுப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com