
நம்மில் பலருக்கும் தலையாய பிரச்னையாக இருப்பது, தலைமுடி உதிர்தல், உடைதல், சிக்கலாவது, முடி வலுவின்றி மெலிதாகிக் கொண்டு போதல் போன்றதாகவே உள்ளது. அதற்கு நாம் பல வகையான எண்ணெய்களை கடையில் வாங்கி உபயோகித்தும் திருப்தியின்றியே இருக்கிறோம். இதற்கு ஒரு நல்ல தீர்வாக, 'ஆதிவாசி ஹேர் ஆயில்' அறிமுகமாகியுள்ளது.
இதைத் தயாரிப்பவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர்கள். ஹக்கி பிக்கி சமூகத்தினரான இவர்கள் காடுகளில் பறவைகளைப் பிடித்தும் சிறிய விலங்குகளை வேட்டையாடியும் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒரு குழுவினர்தான் இந்த ஆதிவாசி ஹேர் ஆயிலை தயாரித்து, 'ஒரிஜினல்' என விளக்கி விற்று வருகின்றனர். இயற்கையான முறையில் இதை நம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆதிவாசி ஹேர் ஆயில் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.சுத்தமான தேங்காய் எண்ணெய் 250 ml
2.லவங்கம் (cloves) 10
3.கருஞ்சீரகம் (kalonji) 1 டீஸ்பூன்
4.வெந்தயம் 1 டீஸ்பூன்
5.நெல்லிக்காய் பவுடர் 1½ டீஸ்பூன்
6.கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
7.செம்பருத்திப் பூ 1
8.வல்லாரை இலைகள் (Brahmi) 6
9.வேப்பிலை 6
தேங்காய் எண்ணெய் மற்றும் சேர்மானப் பொருட்கள் அனைத்தும் சுத்தமானதாகவும், புதிதாக (Fresh) வும் இருப்பது அவசியம்.
செய்முறை:
ஒரு சுத்தமான உலர்ந்த கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வும். சூடான எண்ணெயில் லவங்கம், வெந்தயம், நெல்லிக்காய் பவுடர், கருஞ்சீரகம், செம்பருத்திப் பூ, வல்லாரை இலை, வேப்பிலை மற்றும் கறிவேப்பிலைகளை சேர்த்து முப்பது நிமிடங்கள் சிறு தீயில் கடாயில் வைத்திருக்கவும்.
பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஒரு வடிகட்டியை உபயோகித்து எண்ணெயைப் பிரித்தெடுத்து, ஒரு அடர் நிறமுள்ள கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
இந்த எண்ணெயை தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு பரவுமாறு தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். அப்படியே அரைமணி நேரம் அல்லது இரவு முழுக்க விட்டு விட்டு, பிறகு முடியை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதே போல் வாரம் இருமுறை செய்து வர, கரு கரு கூந்தல் கைப்பிடியில் அடங்காது!