
இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் ரசாயனங்கள் கலந்த ஹேர் டைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். இதனால், முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஆனால், உங்களால் வீட்டிலேயே எளிதாக ஹேர் டை தயாரிக்க முடிந்தால் என்ன செய்வீர்கள்?. ஆம், மருதாணி இலைகளைப் பயன்படுத்தி ரசாயனங்கள் இல்லாத இயற்கை ஹேர் டை தயாரிக்கலாம். இது முடிக்கு நிறத்தைக் கொடுப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
மருதாணி பல நூறு ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு தாவரத்தின் இலையாகும். இது நீங்கள் எதிர்பார்க்கும் கருப்பு நிறத்திற்கு முடியை மாற்றவில்லை என்றாலும், சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமாக மாற்ற உதவும். இது முடிக்க குளிர்ச்சியை தருவதோடு, முடி உதிர்வையும் தடுத்து அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மருதாணி தலைக்கு பயன்படுத்துவதால், பொடுகுப் பிரச்சனை நீங்கி, உச்சந்தலை ஆரோக்கியம் மேம்படும்.
மருதாணி ஹேர் டை:
மருதாணி ஹேர் டை தயாரிப்பதற்கு மருதாணி இலைகள் மற்றும் தண்ணீர் இருந்தால் போதும். நீங்கள் விருப்பப்பட்டால் அந்த கலவையில் தயிர், எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். மருதாணி இலைகளை நன்கு காய வைத்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் மருதாணி பொடியை சேர்த்து அதில் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டில் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்குங்கள். தயிர் தலைமுடியை மென்மையாக்க உதவும். எலுமிச்சை சாறு மருதாணியின் நிறம் தலைமுடியில் நன்றாக பற்றிக்கொள்ள உதவும்.
தயாரித்த கலவையை குறைந்தது 4-5 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர், ஊற வைத்த கலவையை தலைமுடியில் தடவி, ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். இது நன்றாகக் காய்ந்ததும், தலைமுடியை சாதாரண தண்ணீரில் நன்கு கழுவி விடுங்கள்.
நன்மைகள்:
மருதாணி ஹேர் டை பயன்படுத்துவது முற்றிலும் இயற்கையானது என்பதால், எந்த பக்க விளைவுகளும் இருக்காது. ஆனால், குளிர்காலத்தில் இதை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். இது உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் என்பதால், சளி தொந்தரவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
மருதாணி முடியின் வேர்களை பலப்படுத்தி, முடி உதிர்வை தடுக்கும். இதனால், முடி வளர்ச்சி அதிகரித்து முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும். தலைப்பகுதியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இந்த ஹேர் டை பயன்படுத்துங்கள். இது தலையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்துவிடும்.
இயற்கை வழியில் முடியின் நிறத்தை மாற்ற விரும்புவோருக்கு இது சிறந்த வழியாகும்.