
எல்லோருக்குமே இளமையாக முகப்பொலிவுடன் உடம்பு வறண்டு போகாமல் தேஜஸுடன் திகழ ஆசைதான். ஆனால் காலத்தின் கோலம் நம்மை வேறுபடுத்திக் காட்டினாலும் நாம் என்றும் இளமையாக இருப்பதற்கு சில ஆரோக்கிய வழிகளை பின்பற்றினால் வயது ஏறுவது தெரியாதபடிக்கு பொலிவுடன் விளங்கலாம். அதற்கான விஷயங்களை இப்பதிவில் காண்போம்.
முடிந்தவரை காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஐந்து முதல் பத்து நிமிஷம் ஆசுவாசமாக திறந்த வெளிக்கு வந்து சுத்தமான காற்றை நன்றாக உள்ளே இழுத்து சுவாசித்தால், மூக்கு வழியாக நம் உடலுக்குள் போகும் காற்று நம் ரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தமாக வைத்திருக்கும். அது இளமைக்கு வழிவகுக்கும்.
காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் உணவை சாப்பிட்டு முடித்த பிறகு தண்ணீர் அருந்திவிட்டு தூங்குகிறோம். பெரும்பாலும் இரவில் எழுந்து தண்ணீர் குடிப்பதில்லை. எனவே காலையில் உடலில் உள்ள நீரின் அளவு குறைவாக இருக்கும். இதை ஈடுகட்டத்தான் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர். மேலும் ஒரு நாளைக்கு நாம் எட்டு டம்ளர் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். இது உடலை நீரேற்றத்துடன் வைத்து இளமை பொலிவுக்கு வழிவகுக்கும்.
ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு சத்துக் குறைந்த பொருளை உணவு பொருளில் சேர்த்துக் கொண்டால் கேன்சர் வருவதை தடுக்கும். எனவே முடிந்தவரை ஒமேகா த்ரீ உள்ள பொருட்களை தேடிப் பிடித்து சாப்பிடுவது நல்லது.
சில நேரங்களில் ஏதோ ஒன்றுக்காக காத்துக் கொண்டிருக்கும்போது உடம்பை வருத்திக்கொள்ளாமல் சுகமாக உட்கார்ந்து இருக்கிறோம். இந்த மாதிரியான நேரங்களில் அக்கடா என்றில்லாமல் சின்ன சின்னதாக உடற்பயிற்சி செய்தால் இளமையை கட்டிக்காக்கலாம். உதாரணமாக கம்ப்யூட்டர் டவுன்லோட் ஆகும்பொழுது கூட சின்னதாக எக்சர்சைஸ் செய்யலாம்.
நம்மைத் தாக்கும் பல கிருமிகள் நம் கைகளைத்தான் முதலில் தஞ்சமடைகின்றன. கையில் இருந்து வாய், மூக்கு துவாரம் வழியாக நமக்குள் புகுந்துவிடுகிறது. எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி இருந்தால் சளி, இருமல் என்று எந்த நோயும் நம்மை தாக்காது. ஆரோக்கியம் மகா பாக்கியம் என்பார்கள். நோய் நொடியற்ற வாழ்வே இளமையை தக்கவைக்கும் என்பது உறுதி.
வீட்டில் நாய், பறவை, மீன் என்று வளர்த்தால் தினமும் சில நிமிஷங்களாவது அவைகளுடன் விளையாட வேண்டும். இதனால் ரத்த அழுத்தம் குறைவது முக்கியமான விஷயம்.
மதியம் மூன்று மணியிலிருந்து 5 மணிக்குள் நம் உடல் தூக்கத்தை தேடுவது இயற்கையான விஷயம். அந்த நேரத்தில் உடலை கஷ்டப்படுத்தாமல் கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் இரட்டிப்பு சந்தோஷத்தோடு மீண்டும் நம்மால் வேலை பார்க்க முடியும். இந்த புத்துணர்ச்சி இளமையை தக்க வைக்கும்.
வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்ததும் நம்மை நாம் ரிலாக்ஸ் செய்து கொள்கிற மாதிரி எந்த இசைக் கருவிகளை வாசிக்கத் தெரியுமோ அதை வாசிக்கலாம். அது நம்மை உற்சாகப்படுத்தும் டானிக். இல்லையேல் பயிற்சிக்கு நாம் எடுக்கும் முயற்சி அது. இசை பட வாழ்வது என்றென்றும் இளமையை காக்கும் அருமருந்து.
தினமும் கொஞ்ச தூரமாவது நடந்து சென்றால் அது நம் எடை குறைப்பிற்கு ஏற்றது. ஆழ்ந்த உறக்கத்திற்கு அடிப்படை. இதுவரை கண்டிராத புத்துணர்ச்சியை நமக்கு அது தரும். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் நடங்கள் என்பதுதான் மேலை நாட்டு மருத்துவர்கள் எல்லோரும் சொல்கின்ற அறிவுரை.
இரவில் நன்றாக தூக்கம் வரவேண்டும் என்றால் கால்சியம் அவசியம். போதுமான கால்சியம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். ஆகையால் கால்சியம் எதில் எல்லாம் இருக்கிறதோ அதைப் பார்த்து சாப்பிட்டு, தலைக்கு உகந்த தலையணை வைத்து நிம்மதியாக உறங்கி எழுவோமாக! இவை அனைத்தும் இளமையை தக்க வைக்கும் வழிமுறைகள்.