
பருவ காலத்திற்கு ஏற்ற உணவு முறைகளை தேர்ந்தெடுப்பது, உடைகளை தேர்ந்தெடுப்பது, அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவது, சரும பராமரிப்பை மேம்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் தினசரி அழகாக மிளிரலாம். அதற்கான ஐடியாக்கள் இதோ:
பருவத்திற்கு ஏற்ப அன்றன்று விளைந்து மார்க்கெட்டுக்கு வரும் ஃபிரஷ் ஆன பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் சருமத்தில் ஒருவித தேஜஸ் உண்டாகும். இதற்காக விலை உயர்ந்த காய்கறி பழங்கள் கொட்டை வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
சருமத்தில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கி அதனை பொலிவூட்டுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆதலால் தினசரி குறைந்தது ஒன்பது கப் தண்ணீர் குடிப்பது அவசியம். பழம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த ஜூஸ், போன்ற பானங்களையும் அருந்தலாம். இதுவும் நம் அழகுக்கு அழகு சேர்க்கும்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலைகளை செய்வது நல்ல உடற்பயிற்சி. இந்த சுறுசுறுப்பான வாழ்க்கை முறையால் பள பளப்பான மேனி சாத்தியம். நடை, யோகா, உடற்பயிற்சி, தியானம் நிறைவான தூக்கம் அனைத்தும் இதை மெருகூட்டும்.
தினமும் இரண்டு மூன்று முறை முகத்தை சுத்தமாக கழுவி முக சருமத்தின் வகைக்கு ஏற்ற மாய்ட்ஸ்ரைசரை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் பொலிவு வரும்.
சருமத்தில் மங்கு, மரு, கீறல், சிராய்ப்பு போன்று எது ஒன்று வந்தாலும் அதை உடனடியாக சரி செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். இயற்கை பொருட்களை பயன்படுத்தி சரும பிரச்னைகளை புறக்கணிக்காமல் உடனே கவனித்தால் சருமம் அழகு பெறும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சருமம் அழகாக மினுக்காக இருந்தால் தன்னம்பிக்கை குறைவின்றி வாழலாம்.
வாழைப்பழத்தை சாப்பிட்டால் அதன் தோலை முகத்தின் மசாஜ் செய்யலாம். ஆரஞ்சை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை காயவைத்து சீயக்கையுடன் சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து வந்தால் மேனியுடன் தலைமுடியும் பளபளப்பாகும்.
இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ற உடை, தொப்பி, குடை, சூரிய ஒளியில் நிற்பது, அதிக சூரிய ஒளியை தவிர்ப்பது, தவறாமல் தேவையான பொழுது சன் ஸ்கிரீனை பயன்படுத்துவது இவற்றையும் காலம் கருதி செய்ய வேண்டும். இதனால் சருமம் பாதுகாக்கப்படும். ஸ்மார்ட் என்ற நல்ல பெயரும் கிடைக்கும்.
தசைகள் சிரிக்கும்போது நமது உடலில் இருக்கும் அத்தனையும் இயங்குகிறது. வயிறு குலுங்க சிரித்தால் தலையில் இருந்து கழுத்து, மார்பு, தோள்கள், கைகள், வயிறு, கால்கள் என எல்லா பாகங்களும் துடிப்பாகின்றன. இதுபோல் ஒரே நாளில் பலமுறை வாய்விட்டு சிரிக்கும்போது பத்து நிமிடம் உடற்பயிற்சி செய்வதற்கு சமமான வலிமையை பெறுகின்றது .இதனால் தேஜஸில் கூடுதலாக அழகு கிடைக்கும். இருமலுக்கு சிரப்பே மருந்து. அதை சாப்பிடும் பொழுது இன்பமாக வாழ சிரிப்பே மருந்து என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இப்படி நம் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான விஷயங்களில் இருந்து தற்காத்து கொண்டால் என்றென்றும் அதிக ஒப்பனை இன்றி அழகுடன் மிளிரலாம்.