முகத்தை அழகாக்க ஆரம்பகாலத்தில் கழுதைப் பாலில் இருந்து இன்று லேசர்கள் வரை, எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி முகத்தை பொலிவாக்க பெண்கள் தயாராக இருக்கின்றனர். இப்போது சொல்லக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் ஏற்கனவே புழக்கத்தில் இருந்ததுதான். தற்போது அதன் பிரபலம் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் அதன் மருத்துவக்குணம் மட்டும் குறையவில்லை.
மிகக்குறைந்த செலவில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் முகத்தை பொலிவாக்கும் ஒரு அற்புத பொருள்தான் முல்தானி மெட்டி (மிட்டி).
முல்தானி மெட்டியின் வரலாறு:
பண்டைய பாரதத்தின் முக்கிய நகரமான முல்தான் இப்போது பாகிஸ்தான் வசம் உள்ளது. அண்டை நாட்டு படையெடுப்பாளர்கள் முல்தான் பகுதியை பிடித்தபோது, அங்குள்ள மக்களின் அழகிய தேகப் பொலிவை கண்டு வியந்தனர். அதற்கு காரணம், அந்த பகுதியில் உள்ள மண்தான் இவர்களின் முகத்தை அழகுறச் செய்தது என்பதை கண்டுபிடித்தனர்.
வரலாற்று ரீதியாக பார்த்தால், முகலாய அரசப் பெண்கள் , தங்களை அழகுப்படுத்திக்கொள்ள முல்தான் மெட்டியையும் ஈரான் பன்னீரையும் கலந்து முகத்துக்கு தடவி வந்தனர். இந்த பழக்கத்தை முன்பே வட இந்திய அரச மகளிர்களும் பின்பற்றினர். கோடைக்காலத்தில் இந்த முகப் பூச்சு முகத்தை குளுமையாக வைப்பதாலும் இதை விரும்பினர். அன்றைய காலக்கட்டத்தில் இது ராயல் பேஸ்பேக்காக இருந்தது என்றால் மிகையல்ல. இந்தியாவில் இருந்து அப்போது அரபுநாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த மண் ஏற்றுமதி செய்யப்பட்டது.
முல்தானி மெட்டியின் மருத்துவ குணங்கள்:
முல்தானி மெட்டி இயல்பாகவே முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சக் கூடியது என்பதால், முகத்தில் உள்ள தேவையற்ற சதைகளையும் குறைக்க கூடியது. இதில் நீரேற்றமுள்ள அலுமினியம் சிலிக்கேட்டுகள், மெக்னீசியம் குளோரைடு போன்ற பல்வேறு தாதுக்களை கொண்டுள்ளது. இது முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குவதால், முகம் பிரகாசமாக மாறத் தொடங்குகிறது. முதலில் கம்பளித்துணியின் எண்ணெய் பசையை நீக்க சலவை தொழிலாளிகளால், துணி துவைக்கும் பொருளாகத்தான் இது பயன்படுத்தப்பட்டது. பின்னர், இதன் உறிஞ்சும் மற்றும் சுத்தப்படுத்தும் பண்புகள் கண்டறியப்பட்டு, இந்தியாவின் அரச மகளிர் பயன்பாட்டிற்கு வந்தது.
முகப்பரு சிகிச்சை:
முகத்தில் உள்ள கொழுப்பையும், எண்ணெய் பசையில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களையும் இந்த மண் உறிஞ்சி விடுகிறது. இது ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராகச் (Exfoliator) செயல்பட்டு, இறந்த செல்களை நீக்குகிறது. இதனால் முகப்பரு வரக்கூடிய வாய்ப்புகள் பெரும்பாலும் குறைகிறது. எண்ணெய் வடியும் முகம் கொண்டவர்களுக்கு இது சரியான தீர்வாக இருக்கிறது.
பருக்கள் மட்டுமல்லாமல் , சிறிய வடுக்கள், மாசு, மங்கு, கருவளையம், கருந்திட்டு போன்றவற்றையும் நீக்குகிறது. முகத்தில் உள்ள நுண் குழாய்களை சுத்தம் செய்வதன் முகத்தில் ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க வைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பிரகாசமாக மாறுகிறது. இது சருமத்தை இறுக்கும் தன்மை கொண்டதால், முகச்சுருக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
கூந்தலுக்கான பயன்கள்:
இதன் எண்ணெய் உறிஞ்சும் தன்மைக்காக தலைக்கு ஷாம்பு போன்று கூட பயன்படுத்தலாம். தலையில் உள்ள பொடுகுத் தொல்லைகளுக்கு இது முடிவு கட்டுகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
வாரம் 3 முறைக்கு மேல் கூட முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம். முல்தானி மெட்டியுடன் பன்னீரை கலந்து உபயோகப்படுத்தலாம். அதிக நன்மையை பெற விரும்புபவர்கள், பாதாம் எண்ணெய், பால், தயிர், கற்றாழை ஜெல் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவி வரலாம். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.
பக்க விளைவுகள்:
ஏற்கனவே வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் சருமத்தை உலரவைக்கும் என்பதால் அவர்களுக்கு இது தேவையற்றது. முகத்தில் அரிப்பு அலர்ஜி உள்ளவர்களும் பயன்படுத்தக் கூடாது. மற்றபடி வேறு எந்த பக்கவிளைவு களையும் இது கொண்டிருக்கவில்லை.