
டீன் ஏஜ் வயதில் நம்மை சங்கடப்படுத்தும் சருமப்பிரச்னை முகப்பரு. சிலருக்கு டீன் ஏஜ்க்கு பிறகும் தொடர்ந்து முகத்துல தலைவலியா மாறிவிடும் இந்த முகப்பரு, முகப்பரு ஒரு தற்காலிக பிரச்னைதான். சரியான பராமரிப்பு, இயற்கையான முறைகள், உணவு கட்டுப்பாடு இவையெல்லாம் இருந்தால், இதை எளிதாக கட்டுப்படுத்தலாம்
முதல்ல, முகப்பரு ஏன் வருகிறது. முகப்பரு, சருமத்துல உள்ள எண்ணெய் சுரப்பிகள் (sebaceous glands) அதிகமா எண்ணெய் சுரக்கும்போது, இறந்த செல்கள், அழுக்கு, பாக்டீரியாக்கள் இவையெல்லாம் துளைகளை அடைத்து உருவாகுகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், தவறான உணவுப்பழக்கம், சருமபராமரிப்பு குறைவு, மாசு இவையெல்லாம் காரணமா இருக்கலாம். குறிப்பா, பால் பொருட்கள், சர்க்கரை அதிகமான உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் இவை முகப்பருவை மோசமாக்கலாம்னு ஆய்வுகள் சொல்கிறது.
அடிக்கடி பிரெட் மற்றும் பிராசஸ் செய்யப்பட்ட ரொட்டிகள் போன்றவைகளை காலைச் சிற்றுண்டி வகைகளாக சாப்பிட்டால் முகப்பரு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார் கொலராடோ ஸ்டேட் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி லோரென் கோர் டெய்ன் எனும் ஆராய்ச்சியாளர்.
பிராசஸ் செய்யப்பட்ட பிரெட் போன்ற உணவுகள் வேகமாக செரித்து விடுகிறது. கணையம் இதை செரிக்கச் செய்வதற்காக நிறைய இன்சுலினை சுரந்து தருகிறது. அதே வேளையில் ஹார்மோன்களும் சுரப்பதால், தோலில் உள்ள துளைகள் மூலமாக பிசுபிசுப்புத் தன்மை கொண்ட திரவத்தை உடல் வெளியேற்றுகிறது. இந்த திரவம் முகப்பருக்களை ஊக்குவிக்கும் பாக்டீரியாக்களுக்கு ஏற்றதாக உள்ளது.
சரி! இப்போ விரைவாக , வந்த முகப்பருக்களை குறைக்க என்ன பண்ணலாம்? தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், இது சருமத்தை ஹைட்ரேட் பண்ணி, முகப்பருவை குறைக்குது. பால் பொருட்கள், எண்ணெய் வகை உணவுகள், பாஸ்ட் புட்கள் மற்றும் சர்க்கரை அதிகமான உணவுகளை ஒரு மாசத்துக்கு தவிர்த்து பாருங்க, முகப்பரு குறைவதை காணலாம்.
தினமும் இரண்டு தடவை மைல்டு கிளின்சர் வைத்து முகத்தை கழுவ வேண்டும் . அதிகமா கழுவுறதும் தப்பு, இது சருமத்தை உலர வைக்கும். எண்ணெய் பசை உள்ள மேக்கப் பொருட்களை தவிர்க்கணும், இவைகள் சருமத் துளைகளை அடைத்து முகப்பரு அதிகரிக்கும்.
முகப்பரு வெளிய தெரியுற பிரச்னையா இருந்தாலும், உடலின் உள் ஆரோக்கியம்தான் இதுக்கு முக்கிய காரணம். பச்சை இலை காய்கறிகள் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் இவையெல்லாம் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைஞ்சவை. இவை உடம்பை டிடாக்ஸ் பண்ணி, அழற்சியை குறைக்குது. தினமும் ஒரு கப் பச்சை இலை காய்கறிகளை உணவுல சேர்க்கணும். பெர்ரி பழங்களை ஸ்மூத்தியா, சாலட்டா சாப்பிடலாம். வெள்ளரிக்காய், கேரட் இவையெல்லாம் அரைச்சு மாஸ்க்கா போட்டு 15 நிமிஷம் கழித்து கழுவலாம்.
7-8 மணி நேர தூக்கம் அவசியம் இல்லை என்றால், மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாகி முகப்பருவை மோசமாக்கலாம். மன அழுத்தத்தை குறைக்க யோகா, மெடிடேஷன் செய்ய, ஹார்மோன் பேலன்ஸ் மேம்படும்.
முகப்பரு வந்துள்ளதா இதுக்கு வீட்டுலயே எளிமையா, இயற்கையா செய்யக்கூடிய தீர்வுகள் இருக்கு. விலை உயர்ந்த கிரீம்கள், கெமிக்கல் ட்ரீட்மென்ட்ஸ் இல்லாம, நம்ம சமையலறையில இருக்குற பொருட்களை வச்சே முகப்பருவை போக்கலாம். மஞ்சள், கற்றாழை, எலுமிச்சை, ரோஸ் வாட்டர், கருஞ்சீரகம், இவையெல்லாம் நம்ம சருமத்துக்கு ஒரு ப்ரொடெக்டிவ் ஷீல்டு மாதிரி. மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல் கலந்த கலவை, அரைத்த கசகசா சிறிது எலுமிச்சைசாறு கலந்த பேஸ்ட், கருஞ்சீரகம் அரைத்து தேன் கலந்த பேஸ்ட் இதில் ஏதேனும் ஒன்றை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவர பருக்கள் விரைவில் மறையும்.