
கோடை காலத்தில் சருமம் தடித்து காணப்படுவது, முகமும் சருமமும் கருமை நிறம் அடைவது போன்ற சருமப் பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே சரும வறட்சி (Dry skin) இருக்கும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டே நம்மை அழகுபடுத்தி, சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். செய்வது சுலபம்; செலவும் அதிகமாகாது; பக்க விளைவுகளும் இல்லாத எளிய பலன் தரும் அழகு குறிப்புகள் சிலவற்றை இங்கே காணலாம்.
இறந்த செல்களை நீக்க:
அரிசி மாவு ஒரு ஸ்பூனை 2 ஸ்பூன் தயிரில் கலந்து ஸ்க்ரப் போல பயன்படுத்த முகத்தில் இறந்த செல்களை நீக்க உதவும்.
கரும் புள்ளிகளைக் குறைக்க:
எலுமிச்சைசாறு விட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க உதவும். எலுமிச்சைசாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவலாம் அல்லது எலுமிச்சைசாறுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி விடவும்.
சருமத்தை ஈரப்பதமூட்ட:
காய்ச்சாத பச்சைப் பாலை சிறிதளவு எடுத்து முகம், கழுத்துப் பகுதி மற்றும் கைகளில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவிவர சருமத்தை ஈரப்பதமூட்டி பளிச்சென்று வைத்திருக்கும்.
வறண்ட சருமத்திற்கு:
வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை விட வாரத்திற்கு ஒருமுறை தயிருடன் கடலைமாவைக் கலந்து உடல் முழுவதும் பூசி தேய்த்துக் குளிக்க வறண்ட சருமத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
எண்ணெய் பசை சருமத்திற்கு:
எண்ணெய் பசை சருமத்திற்கு கடலை மாவுடன் பால் கலந்து நன்கு குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க சருமம் மிருதுவாகும்.
எண்ணெய்ப் பசை சருமத்திற்கு ஒரு துண்டு பப்பாளி, ஒரு ஸ்பூன் கடலை மாவு, சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கிழிருந்து மேலாக வட்ட வட்டமாக தேய்த்து விட்டு ஈரத்துணி கொண்டு முகத்தை அழுந்த துடைத்துவிட முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
முகப்பருக்கள் நீங்க:
எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால் அது முகப்பருக்களாகி முக அழகை கெடுத்துவிடும். இதனைப் போக்க ஒரு ஸ்பூன் முல்தானி மட்டியை எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள், சிறிது சந்தனத் தூள், தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழிவி விட பருக்கள் மறையும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
ரோஜா குளியல்:
உடல் புத்துணர்ச்சி பெற ரோஜா குளியல் அவசியம். சுவாமி படங்களுக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் ரோஜா பூக்களை சேகரித்து வைத்துக்கொண்டு முதல் நாள் இரவே தண்ணீரில் நன்கு ஊறவைத்து விடவும். காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி குளித்து முடித்ததும் கடைசியாக தலை முதல் கால் வரை விட்டு குளித்து விட சுகமான செலவே இல்லாத ஸ்பா இது.
கால் அழகுபெற:
பியூமிஸ் ஸ்டோன் கொண்டு குளித்து முடித்ததும் கால்களை குறிப்பாக குதிகாலை அந்த கல்லால் தேய்த்துவிட இறந்த செல்கள், பாதவெடிப்புகள் இல்லாமல் பளிச்சென்று இருக்கும்.
கால் வெடிப்பை சரி செய்ய மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு கலந்து அரைத்து வெடிப்பில் பூசி வரலாம். கற்றாழை ஜெல்லியை தடவலாம்.
முகம் மட்டும் அழகாய் இருந்தால் போதாது கால்களும் அழகாக இருக்க வேண்டும். அதற்கு எலுமிச்சைசாறு பிழிந்ததும் அதன் தோலை பாதங்களில் தேய்த்துவிட கருமை நீங்கி பளிச்சிடும்.
பாடி மசாஜ்:
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சுடவைத்து மிதமான சூட்டில் உடல் முழுவதும் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு மென்மையாக மசாஜ் செய்து பாசிப்பருப்பு மாவு அல்லது கடலை மாவு கொண்டு தேய்த்து வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட சருமம் மிருதுவாக ஆவதுடன் பளிச்சென்றும் இருக்கும்.