
நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்த்து கொள்கிறோமோ அதுபோலவே நகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிக அவசியம்.
சருமத்திற்க்கு எப்படி ஈரப்பதம் தேவைப்படுகிறதோ அதேபோல நகத்திற்கும் ஈரப்பதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நகத்திற்கும் கைகளுக்கும் மாய்ஸ்டரைஸர் பயன்படுத்தவும்:
நகத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள பாதாம் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையை பயன்படுத்தி இரவு படுக்க செல்லும் முன் நகத்திற்கு ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.
நீங்கள் தினமும் சானிடைசர் உபயோகப்படுத்தினால், உடனே கைகளை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள மாய்ஸ்டரைஸர் கிரீம் பயன்படுத்தவும். ஏனெனில் சானிடைசரில் உள்ள ஆல்கஹால் நகத்தையும் கைகளையும் வறட்சியடைய செய்துவிடும்.
நகத்தை சுகாதாரமாக பார்த்து கொள்ளும் வழிமுறைகள்:
கைகளை ஈரத்தில் அதிகம் படும்படியாக வைத்துக்கொண்டால், நகம் உடைந்து போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் தண்ணீர் நகத்திற்குள் தங்கி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
நகத்தை பெரிதாக வளர்க்காமல் டிரிம் செய்து வைத்து கொள்வது நல்லது. அதனால் அழுக்கு உள்ளே சென்று சேராமல் இருக்கும்.
டீ ட்ரீ ஆயில் கிருமி நாசினியாக செயல்படுவதால் நகங்களில் உள்ள பேக்டீரியாக்களை அழிக்கிறது.
நெயில் பாலிஷை நீக்குவதில் கவனம் தேவை:
நகத்தில் உள்ள நெயில் பாலிஷை நீக்கும் போது கவனமாக செய்ய வேண்டும். அதை சுரண்டி எடுக்க கூடாது. நகத்தில் இருக்கும் நெயில் பாலிஷை சுரண்டி எடுப்பதால் அது நகத்தின் அமைப்பை சேதப்படுத்தி நகங்களை வறண்டு போகச் செய்யும்.
காட்டனில் நெயில் பாலிஷ் ரிமூவரை தொட்டு பொறுமையாக நீக்க வேண்டும்.
நகத்திற்கு இரண்டு முறை மேல் பூச்சு தர வேண்டும்:
உங்களுக்கு பிடித்த நெயில் பாலிஷ் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பாதுகாப்பு கோட்டிங்கும் பின்பு நெயில் பாலிஷை போட்டு விட்டு அதன் மீது இன்னொரு கோட்டிங்கும் கொடுக்கும் பொழுது நீண்ட நாள் நெயில் பாலிஷ் அழியாமல் இருக்கும்.
பாதுகாப்பு கையுறைகளை அணிய வேண்டும்:
வீட்டில் பாத்திரம் கழுவுவதோ அல்லது தோட்ட வேலை செய்யும் போதோ நகம் உடைய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் தண்ணீரும், அழுக்குகளும் நகத்தினுள் சென்று தங்கி கொள்ளும். இதை தடுப்பதற்கு ரப்பர் கையுரைகளை அணிந்து கொள்வது சிறந்தது.
தரமான தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்:
மலிவான மூலப்பொருட்கள் கொண்ட பொருட்களையோ நெயில் பாலிஷையோ பயன்படுத்த வேண்டாம். அது நகத்திற்கு கேடு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் சாப்பிடும்போது உடலுக்கும் சென்று கெடுதல் விளைவிக்கும். இதனால் முடிந்தவரை தரமான தயாரிப்புகளையே பயன்படுத்துவது சிறந்தது.
நகத்தை அவ்வபோது வெட்டி பராமரித்தல்:
நகத்தை அளவுக்கு மீறி வளர்ப்பதால் உடையவும் அழுக்குகள் சேரவும் வாய்ப்புள்ளது. அதனால் நகவெட்டியை உபயோகித்து அழகாக நகத்தை அவ்வபோது வெட்டி விடுவது சிறந்தது. அதற்காக சிறிதாக வெட்ட வேண்டிய அசியமில்லை பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அளவு வெட்டி கொள்ளலாம்.
நம் தலைமுடியை அவ்வபோது வெட்டி அழகுபடுத்தி கொள்வது போலவே நகத்தையும் வெட்டி அழகுப்படுத்தி கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பெட்ரோலியம் ஜெல்லி, விட்டமின் ஈ ஆகியவற்றை நகத்தில் தடவுவதால் நகம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.
அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இப்போது நகத்திற்கும் தனி கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். நகத்தை பேனி காப்பதற்காகவே பார்லர்கள் வந்து விட்டது.
சிலருக்கு நகத்தை கடிக்கும் பழக்கமிருக்கும். அவர்களுக்கெல்லாம் நீண்ட நகம் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையிருக்கும். அவர்களுக்காகவே செயற்கையாக நகம் வைத்து கொள்ளும் வசதிகள் வந்துவிட்டது. அதுபோன்ற செயற்கை நகங்கள் சந்தையில் விற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.