
எந்த வயதுப் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு தன்னுடைய தலைமுடியைப் பற்றிய கவலையும் அதை பராமரிப்பதற்கான அக்கறையும் இருக்கும். அதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். வெங்காயச் சாறு முடி வளர்ச்சியை நன்றாக ஊக்குவிக்கும் ஒரு இயற்கையான பொருளாகும்.
அதில் அதிக கந்தக உள்ளடக்கம் இருப்பதால் அது மயிர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவு,ம் கொலாஜன் திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
வெங்காயச்சாறு தயாரிக்கும் முறை;
தேவையான பொருட்கள்;
மூன்று பெரிய வெங்காயம், ஒரு சிறிய பாட்டில், ஃபில்டர், சுத்தமான கிண்ணம் ஒன்று. வெங்காயம் நல்ல சிவப்பாக இருக்கவேண்டும். அதில்தான் அதிக கந்தக உள்ளடக்கம் இருக்கும். வெங்காயத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இதை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை ஒரு கிண்ணத்தில் சேகரித்து, ஃபில்டரை வைத்து வடிகட்டிக் கொள்ளலாம். அதை ஒரு சுத்தமான காற்றுப் புகாத பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்போது வெங்காயச்சாறு தயார்.
பேச் டெஸ்ட்;
வெங்காயத்திற்கு ஒவ்வாமை (அலர்ஜி) இருப்பவர்கள் வெங்காயச்சாறு பயன்படுத்தக் கூடாது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு பேச் டெஸ்ட் செய்து கொள்ளலாம். முழங்கையின் உள்பகுதியில் வெங்காய சாற்றை தடவி ஐந்து மணி நேரங்கள் காத்திருக்கலாம். அதில் ஏதாவது அரிப்பு அல்லது வீக்கம் அல்லது சிவப்பு திட்டுகள் போன்றவை தோன்றினால் வெங்காயச்சாறு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். அதை பயன்படுத்தக் கூடாது. ஆனால் எந்த அறிகுறிகளும் இல்லை என்றால் அதை தாராளமாக பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை;
வெங்காயச்சாறை தலையில் அப்ளை செய்யும் முன்பு, தலைக்குக் குளித்து ஈரம் நன்றாக காய்ந்திருக்க வேண்டும். வெங்காய சாற்றை உச்சந்தலையிலும் மயிர்க்கால்களிலும் நன்றாக மசாஜ் செய்யுமாறு ஊடுருவி தேய்க்க வேண்டும். காட்டன் பால்களை வெங்காய சாற்றில் நனைத்து அதை நேரடியாக உச்சந்தலையில் தடவலாம். இல்லையென்றால் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெங்காய சாற்றை ஊற்றி அதை உச்சந்தலையில் ஸ்பிரே செய்து கொள்ளலாம்.
பின்னர் விரல்களால் மென்மையாக உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். மென்மையாக மசாஜ் செய்யும்போது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் வெங்காயச்சாறு மயிர் கால்களில் ஆழமாக ஊடுருவ உதவுகிறது. 30 நிமிடங்களுக்குப் பிறகு அதை ஷாம்பு போட்டு தலையை கழுவிவிட வேண்டும். வெதுவெதுப்பான நீர் மற்றும் மென்மையான ஷாம்பு இரண்டும் அவசியம். அதேபோல வெங்காயசாறு வாசனை முழுவதும் தலையிலும், முடியிலும் நீங்கிவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
வெங்காயசாறு மீதம் இருந்தால் அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் சேமித்து பயன்படுத்தலாம். நீண்ட காலத்திற்கு பயன்படுத்த விரும்பினால் அதில் அதை பிரீசரில் உள்ள ஐஸ் கியூப் தட்டுகளில் ஊற்றி உறையவைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அவை உறைந்தவுடன் ஐஸ்க்யூபுகளை ஜிப்லாக் பைகளில் போட்டு மாற்றிக் கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு;
வெங்காயச்சாறு தடவும்போது கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். கண்ணில் பட்டுவிட்டால் நன்றாக கண்களை கழுவிக்கொள்ள வேண்டும்.
சைனஸ் தொந்திரவு மற்றும் தலைவலி பிரச்னை உள்ளவர்கள் இந்த செயல்முறையைத் தவிர்க்கலாம்.