வெயிலில் சுற்றும் ஆண்களா நீங்கள்? கறுப்பாகாமல் தப்பிக்க இதோ ஒரு சீக்ரெட் பிளான்!

summer-skin-care-tips
summer-skin-care-tips
Published on

மார்கெட்டிங், ஊடகம், பிசினஸ் போன்ற துறைகளில் பணிபுரியும் ஆண்கள் கட்டாயம் வெயிலில் அலையவேண்டி இருக்கும். இவர்கள் கோடை காலத்தில் ஓரளவு வெப்ப தாக்கத்திலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும்.

*கோடை காலத்தில் அதிகம் பயணம் செய்யும் ஆண்களுக்கு லினன் ஆடைகள் மிகவும் உகந்ததாக இருக்கும். பொதுவாக கோடைக்காலம் என்றாலே நம்மில் பெரும்பாலானவர்கள் பருத்தி ஆடைகளை (காட்டன்) அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் காட்டன் ஆடைகளைவிட விலை சற்று அதிகமானாலும் இந்திய சீதோஷ்ண நிலைக்கு லினன் ஆடைகள் பொருத்தமாக இருக்கும்.

*பெரும்பாலான ஆண்கள் வேலை நிமித்தம் அதிகப்படியான நேரத்தை வெளியில் செலவிடும் பொழுது குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. அதற்கு பதில் மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் அல்லது தண்ணீர் எடுத்துக் கொள்வது வெப்பத்தினால் உண்டாகும் வேர்க்குரு, வேனல் கட்டிகள், அம்மை போன்ற வெப்ப நோய்கள் வருவதை தடுக்க உதவும்.

*கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வெளிவரும் வியர்வை காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து போகும். இதனால் உடல் சோர்வு, மயக்கம், அஜீரணம் மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதை தடுப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், காப்பி, டீ போன்ற பானங்களை அருந்துவதை தவிர்ப்பதும் நல்லது. அத்துடன் நீர் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வதும், மோரைப் பருகுவதும் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

*வெயிலில் அதிகம் பயணிக்கும் ஆண்களுக்கு சரும பராமரிப்பு என்பது மிகவும் அவசியம். சூரியக்கதிர்களால் ஏற்படும் கருமை மற்றும் வறட்சியை போக்க வெயிலில் செல்வதற்கு முன்பு, குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்பாவது சன்ஸ்கிரீனை முகம் மற்றும் கைகளில் தடவுவது முக்கியம். இது சூரியனின் புறஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்க பீரோவில் ஒரே கலர் டிரஸ் அதிகமா இருக்கா... அப்போ இந்த ஸ்டைலிங் ட்ரிக்ஸ் உங்களுக்குத்தான்!
summer-skin-care-tips

*பயணத்தின் பொழுது சருமத்தில் சேரும் அழுக்கு, தூசி மற்றும் எண்ணெயை அகற்றுவதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தரமான ஃபேஸ் வாஷ் கொண்டு முகம் கழுவலாம். அதேபோல் சருமம் வறட்சி அடையாமல் இருப்பதற்கு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை கலந்த மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம்.

*வெயிலின் நேரடி தாக்கத்தை தவிர்க்க முழுக்கை சட்டைகள், தொப்பி மற்றும் தரமான சன்கிளாஸ் அணிவதும் நல்லது. வார இறுதி நாட்களில் தயிர் அல்லது தக்காளியை நன்கு கடைந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர வெயிலால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

*கோடை காலத்தில் முக்கியமாக அதிகம் வெளியில் பயணம் செய்யக்கூடிய வேலைகளில் உள்ளவர்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது. இறுக்கமான ஆடைகள் அதிகப்படியான வியர்வையை வெளியேற்ற முடியாமல் சருமப் பிரச்னைகளை உண்டாக்கக்கூடும்.

*வெயிலுக்கு அடர் நிறங்களை பயன்படுத்துவதை விட வெளிர் நிறத்திலான ஆடைகளை அணிந்து கொள்வது வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வல்லது. கருப்பு போன்ற அடர் நிறங்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியதாக இருப்பதால் உடலில் வெப்பத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்த பொருட்களின் மீது காலை வைக்காதீர்கள்; வைத்தால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்!
summer-skin-care-tips

*சிலர் முதல் நாள் பயன்படுத்திய ஆடைகளை அடுத்த நாளும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறிப்பாக பேச்சிலர்ஸ் அல்லது குடும்பத்தை விட்டு தனியாக வேலை நிமித்தமாக வெளியூரில் வசிப்பவர்கள், முதல் நாள் பயன்படுத்திய ஆடைகளையே திரும்பவும் பயன்படுத்துவார்கள். கோடை காலத்திலாவது இந்த வழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது. இல்லையெனில் தேவையற்ற சரும பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com