
இந்து தொன்மவியல் அடிப்படையில் ஒவ்வொரு பொருளிலும் இறைவன் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால் எந்த பொருளையும் மதிப்புடன் வைத்திருப்பது ஒருவரின் நல்ல குணாதிசயத்தை உணர்த்துவதாக உள்ளது. எந்த பொருளையும் காலால் எடுப்பதும், அதை எட்டி உதைப்பதும் கூடாது. அவ்வாறு ஒருவர் செய்தால் அவருக்கு உள்ள நல்ல அதிர்ஷ்டங்களை இழக்க போகிறார் என்று பொருள். அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சாஸ்திரத்தின்படி சில பொருட்கள் மீது கால் படுவது தவறு.
எந்த ஒரு பொருளையும் ஒருவர் மதிப்புடன் நடத்தினால், அதை தொட்டு வணங்கினால் அவருக்கு அந்த பொருள் மிகுதியாக கிடைக்கும். ஒரு பொருளை மதிப்புடன் வைத்திருப்பதை கண்டு மஹாலக்ஷ்மி மகிழ்ச்சி அடைகிறார். அவருக்கு அந்த பொருள் மிகுதியாக கிடைக்கும்படி அருள்புரிகிறார். ஶ்ரீ லஷ்மியின் ஆசிர்வாதம் அவருக்கு மிகுதியாக கிடைக்கிறது. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் கடவுள்களின் அடையாளமாகவும் அவர்களின் சின்னமாகவும் கருதப்படுகிறது.
கடவுள் பல விலங்குகளிலும் பறவைகளிலும் வசிக்கிறார் என்று நம்பப்படுகிறது. பொதுவாக எந்த விலங்கையும் மிதிக்க கூடாது; அவ்வாறு மிதித்தால் அவருக்கு பாவம் வந்து சேருகிறது.
பசு ஒரு உயரிய விலங்காக கருதப்படுகிறது. இது கேட்டதை கொடுக்கும் காமதேனுவின் அம்சமாக மக்கள் கருதுகிறார்கள். ஹிந்து மதத்தில் பசுவும் அதன் மூலம் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் புனிதமாக கருதப்படுகிறது. பசுவும் தொன்மவியல் படி ஒரு புனித தெய்வமாக வணங்கப்படுகிறது. பசுவில் மஹாலக்ஷ்மியும் ஏனைய தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதனால், பசுவை எப்போதும் அவமதிப்பது கூடாது. பசுவின் மீது கால்படக் கூடாது. தெரியாமல் பட்டாலும் உடனே அதை தொட்டு கும்பிட வேண்டும்.
விலங்குகளில் பசுவை போல தாவரங்களில் துளசியும் வேம்புவும் புனிதமானது. துளசி இலைகளையோ, வேப்பிலைகளையோ ஒருபோதும் கால்களில் மிதிக்கக் கூடாது. துளசிச் செடியில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறார். வேப்பிலையில் மாரியம்மன் வாசம் செய்கிறார். அதனால் இந்த புனிதமான தாவரங்களின் இலைகளை கால்களில் மிதிபட விடக் கூடாது. அது போல பூக்கும் தாவரங்களையும், கனிகளை கொடுக்கும் மரங்களையும் மிதிக்க கூடாது.
எந்தவொரு உணவுப் பொருளையும் மிதிப்பது மோசமான பாவமாகும். உணவுப் பொருட்களை எப்போதும் கால்களில் மிதிக்க கூடாது. முக்கியமாக உப்பின் மீது கால் வைக்கக் கூடாது. உப்பு என்பது செல்வத்தின் அடையாளம் . இதைத் தவிர, ஒருவர் ஒருபோதும் வழிபாட்டுப் பொருட்களையோ அல்லது படையலிடும் பொருட்களையோ தனது கால்களால் மிதிக்க கூடாது. இந்த பொருட்களை அவ மதிப்பவர்கள் எதிர்காலத்தில் உணவுக்கு கையேந்தும் நிலை வரலாம். அது போல உணவுப் பொருட்கள் வைக்கும் பாத்திரங்களையும் காலால் தொடக் கூடாது. அது உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தலாம்.
பயன்படுத்தும் வாகனங்கள் மீது கால் வைக்காதீர்கள். கால் வைப்பதற்காக உள்ள இடத்தினை தவிர மற்ற இடங்களில், குறிப்பாக எரிபொருள் உள்ள டேங்க்குகள் மீதோ, சாவி சொருகும் இடத்தின் மீதோ கால் வைக்காதீர்கள். வாகனங்கள் ஒருவரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பத்திரமாக எடுத்துச் செல்வதால் அதை அவமதிக்க வேண்டாம்.
வீடு கூட்டும் துடைப்பத்தின் மீது கூட கால் வைக்கக் கூடாது. துடைப்பம் தூய்மையின் அடையாளமாக உள்ளது. வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்ள முதல் காரணமாக துடைப்பம் உள்ளதால், அது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் பொருளாக உள்ளது. அது வறுமையை துடைக்கும் பொருளாகவும் உள்ளது.