
பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், பொருத்தமாக அவள் நெற்றியில் பொட்டு வைப்பதில்தான் முழு அழகும் உள்ளது. முக வசீகரம் முழுமை பெறுகிறது. முகத்துக்கு ஏற்றபடி பொட்டு வைத்துக்கொண்டால் அழகு மேலும் கூடுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பொட்டு ஓரளவு அழகுப் பொருளாக மாறிவிட்டது. கூடவே அது நாகரீகத்தின் சின்னமாக அறியப்படுகிறது. குங்குமம், சாந்துப் பொட்டுகள் இப்போது குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக பேஸ்ட் பொட்டுகள், ஸ்டிக்கர் பொட்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், அலங்காரத்துக்கு பொருத்தமாக நல்ல வண்ணங்களையும் பல வகைகளிலும் ஸ்டிக்கர் பொட்டுக்கள் கிடைக்கின்றன. வெளியிடங்களுக்கு செல்லும்போது ஸ்டிக்கர் பொட்டுகளை கை பைக்குள் எளிதாக வைத்து எடுத்து செல்லவும் முடிகிறது. தற்போது பல வடிவங்களிலும் பொட்டுக்கள் சிறிய, பெரிய அளவுகளில் பொட்டுக்கள் தயாராகின்றன.
பொட்டு வைக்கும் இடம்
பொட்டை நெற்றியில் சரியாக சொன்னால் இரண்டு புருவங்களுக்கும் இடையில் பொட்டை வைக்கவேண்டும். இந்த நெற்றி பொட்டு பகுதி ஒரு மர்மஸ்தானம். நினைவு, அறிவு, சக்தியின் உறைவிடமாக நெற்றி போட்டு கணிக்கப்படுகிறது.அந்த இடத்தை பொட்டு வைத்து பாதுகாக்க வேண்டும், என்றும் சொல்கிறார்கள்.
அந்த பகுதியில் சந்தனம் குங்குமம் இடுவது மருத்துவத் துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாக இருக்கிறது. இப்போது நெற்றியில் எந்த பகுதியில் பொட்டு வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடே இல்லை. அழகுக்கும் பேஷனுக்கும் தக்கப்படி நெற்றியில் எங்கு வேண்டுமானாலும் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். நிறைய பொட்டுகளை விதவிதமாக வைத்துக் கொள்கிறார்கள். இது அவரவர்கள் விருப்பத்தை பொறுத்த விஷயமாகும்.
பொட்டு தேர்ந்தெடுப்பது எப்படி?
விசாலமான நெற்றியை கொண்ட பெண்கள் பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்ததுபோல் அழகாகத் தெரியும்.
நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கும் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும்.
சதுரமான முகம் வடிவம், வட்டமான முக வடிவம் கொண்டவர்கள், சற்று பெரிய வட்ட வடிவமான பொட்டுகளை வைக்கவேண்டும்.
ஜீன்ஸ் டாப்ஸ் ஸ்கர்ட், மிடி போன்றவற்றை அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகுதான்!
குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு கறுப்பு சாந்து, கண்மையில் பொட்டு வைக்கும் பழக்கமும் உண்டு.
பொட்டு வைக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.
சாலை ஓரங்களில் விற்கப்படும் விலை குறைந்த பொட்டுக்களை வாங்குவதைவிட சற்று விலை கூடுதலானாலும் தரமான பொட்டுகளைப் பார்த்து வாங்க வேண்டும்.
பொட்டுக்களில் மணத்திற்காகவும், கவர்ச்சிக்காகவும் பலவகை கெமிக்கலும் கலக்கப்படுகின்றன. இவ்வகை பொட்டுகளை வைப்பதால் தோலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். அலர்ஜியால் அரிப்பு ஏற்படும்.
பொதுவாக சாந்து பொட்டுகளை தேர்ந்தெடுக்கும்போது கையில் வைத்து பார்த்து காய்ந்ததும், அது சருமத்தை சுருக்கி இறுக்கமாக பிடிக்காமல் இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பொட்டு வைப்பதற்கு கண்மை, சாந்து போன்றவற்றை பொதுவாக வீட்டில் தயார் செய்து வைத்துக் கொள்வது சிறந்தது.
கண் மையில் உள்ள கலப்படத்தால் கண்கள் சிவந்து கண்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே கண் மைகளை எடுத்து லேசா கண்களை தடவி அரை மணிநேரம் வரை எந்த உறுத்தலும் எரிச்சலும் இல்லாமல் உள்ளதா? என பார்த்து வாங்க வேண்டும்.
பொட்டு வைப்பதால் முகம் இளமையாக இருக்கும். பொட்டு வைப்பது உங்களை அழகாக காட்டும். உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து இளமையை தக்க வைக்கும். மேலும் முகத்தின் தசைகளை தூண்டும். அனைத்து தசைகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் .உங்கள் முகம் எப்போதும் அழகாகவும் பொலிவாக இருக்கும்.
பெண்கள் நெற்றியில் பொட்டு, குங்குமம் வைத்து அழகாக இருக்கலாம்.