
அரிசி உப்புமா கலவையில், கொஞ்சம் வேகவைத்த காரா மணியைக் கலந்து அடையாகத் தட்டி அதை இட்லித் தட்டில் வேகவைத்து சாப்பிடலாம்.
மல்லி இரண்டு டேபிள் ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், நிலக்கடலை இரண்டு ஸ்பூன் மூன்றையும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் வறுத்துப் பொடியாக்கவும். புளியோதரை கிளறியவுடன் இந்தப் பொடியை தேவையான அளவு தூவிக் கலந்தால், ருசியான, காரசாரமான புளியோதரை ரெடி.
வடகக்கூழில் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்து, இஞ்சியை அரைத்துச் சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.
ரவா தோசைக்கு மாவு கரைக்கும்போது, அதில் ஒரு ஸ்பூன் சோம்பு பொடி சேர்த்துக் கலந்து தோசை வார்த்தால் தோசை சுவையோ சுவை.
குருமா செய்யும்போது, பிடி வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி, அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பொடியாக அரைத்துச் சேர்த்தால் குருமா மிகவும் சுவையாக இருக்கும்.
தோசை மெல்லியதாக வரவேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் சுவையான மெல்லிய தோசை தயார்.
தயிர் பச்சடி, சாலட் செய்யும்போது, தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் வாசனையாக இருக்கும்.
சாதம் பொங்கி வரும் சமயத்தில் சில சொட்டுகள் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சாதம் பொல பொலவென்று இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்துவிட்டால் சாம்பாரின் ருசி அலாதிதான்.
தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்தோடு கொஞ்சம் கடலை பருப்பைச் சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
பச்சரிசியை சுடு தண்ணீரில் ஊறவைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் ஆப்பம் மொறு மொறுப்பாக இருக்கும். இரண்டு டம்ளர் உளுந்துடன் கொஞ்சம் சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையாக இருக்கும்.