

அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் சருமப் பராமரிப்பிலும் பயன்படுத்தப்படும் குங்குமப்பூ 'சிவப்பு தங்கம்' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், குங்குமப் பூவின் விலை அதிகம் என்பதால் சந்தையில் போலியான குங்குமப்பூக்களின் புழக்கமும் அதிகரித்துள்ளது. அசல் குங்குமப்பூவின் பயன்கள் என்ன? போலிகளைக் கண்டறிந்து அசலைத் தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
குங்குமப்பூவின் பயன்பாடுகள்
குங்குமப்பூவைக் கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் பெண்களும் என அனைவருமே பாலில் கலந்து பருகலாம். இது உடலின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தருகிறது.
சருமத்தில் உள்ள மெலனின் உற்பத்தியைச் சீராக்கி, இயற்கையான பிரகாசத்தையும் பொலிவையும் தருகிறது. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருத் தழும்புகளைப் போக்க உதவுகிறது. ஃபேஸ் கிரீம்கள், ஃபேஸ் வாஷ், ஃபேஷியல் சீரம் மற்றும் பாரம்பரிய 'குங்குமாதி தைலம்' தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகிறது.
அசல் vs போலி: கண்டறிய உதவும் 5 எளிய சோதனைகள்
1. தண்ணீர் பரிசோதனை:
வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் போட்டால், அசல் குங்குமப்பூ 10 முதல் 15 நிமிடங்கள் கழித்துத்தான் மெதுவாக மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் மாறும். ஊறவைத்த பிறகும் அந்த இழையின் சிவப்பு நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். போலியான குங்குமப் பூவைப் போட்ட உடனே அதிலுள்ள செயற்கைச் சாயம் கரைந்து, தண்ணீர் நொடியில் ரத்தச் சிவப்பு நிறமாக மாறிவிடும். இழையும் வெளுத்துப் போய்விடும்.
2. வாசனை மற்றும் சுவை:
அசல் குங்குமப்பூ தேனின் மணமும், காய்ந்த வைக்கோலின் மணமும் கலந்த வித்தியாசமான நறுமணத்தைக் கொண்டிருக்கும். அதை நாவில் வைத்துச் சுவைத்துப் பார்த்தால் லேசான கசப்புத் தன்மையுடன் இருக்கும். போலி குங்குமப்பூ செயற்கையான இனிப்புச் சுவையுடன் இருக்கும். எந்த நறுமணமும் இன்றி ரசாயன வாசனை அடிக்கும்.
3. விரல்களில் தேய்த்துப் பார்த்தல்:
நீரில் ஊறவைத்த ஒரு குங்குமப்பூ இழையை எடுத்து இரண்டு விரல்களுக்கு இடையே வைத்துத் தேய்க்க வேண்டும். அசலாக இருந்தால், இழை எளிதில் உடையாமல் அப்படியே இருக்கும். விரல்களில் பிரகாசமான மஞ்சள்-ஆரஞ்சு நிறம் ஒட்டும். போலியை விரலில் வைத்துத் தேய்க்கும்போது சிறு சிறு துண்டுகளாக உடைந்து, பிசுபிசுப்பான கூழ் போல மாறிவிடும்.
4. பேக்கிங் சோடா சோதனை:
ஒரு சிறிய கிண்ணத்து நீரில் சிறிதளவு பேக்கிங் சோடாவைக் கலந்து, அதில் 2-3 குங்குமப்பூ இழைகளைப் போடவேண்டும். தண்ணீர் பிரகாசமான மஞ்சள் நிறமாக மாறினால் அது அசல். தண்ணீர் அடர் சிவப்பு அல்லது வேறு நிறத்திற்கு மாறினால் அது செயற்கைச் சாயம் பூசப்பட்ட போலி.
5. தோற்றம்:
அசல் குங்குமப்பூ இழையின் ஒரு முனை மெலிதாகவும், மறுமுனை விரிவடைந்த புனல் போன்ற வடிவத்திலும் இருக்கும். இழைகள் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தாலும், அதன் நுனியில் மிகச்சிறிய அளவில் மஞ்சள் நிறம் காணப்படும். இழைகள் ஒரே சீரான அடர் சிவப்பு நிறத்தில், தட்டையாக அல்லது நேராக இருந்தால் அது போலி.
குங்குமப்பூ வாங்கும்போது கவனிக்க வேண்டியவை;
குங்குமப்பூவையோ அல்லது அது கலந்த ஃபேஸ் சீரம் போன்ற அழகு சாதனப் பொருட்களையோ வாங்கும் போது, ISO 3632 தரம் மற்றும் GI Tag (காஷ்மீர் குங்குமப்பூ புவிசார் குறியீடு) உள்ள பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அசல் குங்குமப்பூவின் தயாரிப்புச் செலவு அதிகம் என்பதால், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தயாரிப்புகள் போலியாகவே இருக்க வாய்ப்பு அதிகம். அழகு சாதனப் பொருட்கள் வாங்கும்போது, அதில் 'குங்குமாதித் தைலம்' அல்லது இயற்கை குங்குமப்பூ சாறு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை லேபிள் விவரங்களைப் பார்த்து வாங்குவதே பாதுகாப்பான முறை.
சந்தையில் உள்ள ஏமாற்று வேலைகளிலிருந்து தப்பித்து, உங்களுக்கான மிகச் சிறந்த மற்றும் அசல் குங்குமப்பூவைத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.