
பலருக்கும் இருக்கும் பிரச்னை முடி உதிர்வதுதான். இதை வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே சரி செய்யலாம். கற்றாழை முடி உதிர்வைத் தடுத்து தலை முடி ஆரோக்கியமாக வளரஉதவும். கற்றாழை ஹேர் மாஸ்க்க்கை எப்படித் தயாரிப்பது? எப்படிப் பயன்படுத்துவது மற்றும் அதன் பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் கற்றாழை மாஸ்கின் பயன்கள்;
கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகின்றன. கற்றாழையின் அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் உள்ள பொடுகை நீக்க உதவுகின்றன. சேதமடைந்த முடிக்கற்றைகளை சரி செய்து புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
பொதுவாக வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு அருமருந்து கற்றாழை மாஸ்க். இது வறட்சியை நீக்கி முடி உதிர்வதைத் தடுக்கிறது. முடி ஈரப்ப்பதமாக இருந்தால் நன்றாக வளரும். கற்றாழையில் உள்ள பிஹெச் அளவு உச்சந்தலையில் உள்ள இயற்கையான பிஹெச் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இதில் உள்ள விட்டமின்கள் ஏ,, சி இ, பி12, அமினோ அமிலம் மற்றும் கோலின் ஆகியவை முடி இழைகளுக்கு ஊட்டமளித்து வலுவூட்டுகின்றன.
கற்றாழை ஹேர் மாஸ்க் தயாரிக்கும் விதம்;
கற்றாழைச் செடியிலிருந்து நீளமான ஒன்று அல்லது இரண்டு கற்றாழை தண்டுகளை நறுக்கிக்கொள்ளவும். இதனுடைய முட் பகுதியை நீக்கி விட்டு மேலே உள்ள தோலையும் நீக்கி வேண்டும். இதன் உள்ளிருக்கும் ஜெல்லை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக கூழ்போல அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவேண்டும். சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு பெரிய வெங்காயத்தின் தோல் சீவி, நறுக்கியதை சாறாக்கிக் கொள்ளவும். நான்கு பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும் இப்போது மென்மையான கற்றாழை பேஸ்ட் தயார்.
கற்றாழை ஹேர் மாஸ்க் பயன்படுத்தும் விதம்;
கற்றாழை பேஸ்ட்டை எடுத்து உச்சந்தலையில் நன்றாக தடவி வேர் பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து ஆறு நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்யும்போது ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.
30 லிருந்து ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு விடவேண்டும். பின்பு லேசான வெதுவெதுப்பான நீரில் மைல்ட் ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடியை அலசவும்.
வாரத்திற்கு இரண்டு முறை கற்றாழை ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தினால், தலைமுடி உதிர்வு நின்று நன்றாக செழித்து வளரும். கற்றாழை முடியை ஆழமாக ஈரப்பதமாக்கி கண்டிஷனிங் செய்து, மென்மையாகவும், பளபளப்பாகவும், மாற்றும். வறட்சியான முடி அமைப்பு மாறி, ஈரப்பதமாக மாறும். இந்த இயற்கையான பொருள் உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் தொடர்ந்து சேர்ப்பதன் மூலம், நீங்கள் ஒரு ஆரோக்கியமான, வலுவான, அடர்த்தியான மற்றும் வேகமான முடி வளர்ச்சியை பெறலாம்.