
அழகு என்பது தற்போது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதிலும் கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு எப்போதும் தங்களுடைய முகம் புத்துணர்வுடன் திகழவேண்டும் என்று முகத்திற்கு பூசும் அழகு சாதன க்ரீம்களை உபயோகிப்பார்கள். சருமம் வெயிலால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சன் ஸ்கிரீன் லோஷன்களை கை கால்கள் மற்றும் கழுத்தில் தடவுவார்கள்.
செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தயங்கும் இயற்கை விரும்பிகள் வீட்டிலேயே இருக்கும் கடலைமாவு, தயிர் போன்ற பொருட்களை உபயோகிப்பார்கள். அதில் மிகவும் முக்கியமானதாக இருப்பது எலுமிச்சம்பழம். முகத்தின் மீது எலுமிச்சை சாற்றினை தடவுவதன் மூலம் பொலிவை பெறலாம் என்பது பலரின் கருத்து.
ஆனால் எலுமிச்சைசாறு நேரடியாக நமது சருமத்தில் படுவதால் சில பாதிப்புகளும் உண்டு என்பது தெரியுமா? வாருங்கள் முகத்தில் தடவும் எலுமிச்சம் சாற்றினால் உண்டாகும் நன்மை தீமைகளை இங்கு பார்ப்போம்.
எலுமிச்சையை முகத்தில் தடவுவது சில சரும பிரச்னைகளுக்கு நன்மை பயக்கும் எனினும் ஓரே மாதிரியான சரும அமைப்பு இல்லை என்பதால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. சிலருக்கு தடித்ததாகவும் சிலருக்கு மென்மையானதாகவும் சிலருக்கு நார்மலாகவும் இருக்கும். சரும வகைகளுக்கு ஏற்பவே இயற்கை பொருள்களையும் பயன்படுத்த வேண்டும்.
நன்மைகள்
எலுமிச்சையில் உள்ள துவர்ப்புத்தன்மை தரும் அமிலம் சருமத்துளைகளை இறுக்கி எண்ணெய் பசையைக் குறைக்க உதவும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் பிற சரும தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும். அத்துடன் எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்கவும் சீராக வைக்கவும் உதவும்.
பாதிப்புகள்
பழத்திற்கு புளிப்பு சுவையை அளிக்கும் எலுமிச்சையில் உள்ள முக்கிய அமிலமான சிட்ரிக் சில சரும வகைகளுக்கு ஏற்றதாக இருக்காது. பொதுவாக எலுமிச்சை சாற்றின் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இது சருமத்தின் இயற்கையான pH சமநிலையை சீர்குலைக்கும். இதனால் மென்மையான சருமத்தில் பாதிப்பு கடுமையாக இருக்கும், எரிச்சல், சிவத்தல் மற்றும் எரிச்சல் தன்மையை ஏற்படுத்தும் எலுமிச்சைசாறு தடவிய சருமத்தின் மீது சூரிய ஒளியின் தாக்குதல் அதிகம் இருக்கும் என்பதால் தோல் சேதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
இதெல்லாம் இருக்கட்டும். எலுமிச்சையில் உள்ள அழகு ரகசியத்தை எப்படி அனுபவிப்பது? சில முன்னெச்சரிக்கைகள் இந்த பாதிப்புகளைத் தடுக்கும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். அதாவது எலுமிச்சை சாற்றை நேரடியாக உபயோகிக்காமல் அதன் அமிலத்தன்மை மற்றும் அதனால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க தண்ணீர் அல்லது தரமான எண்ணெயுடன் கலந்து அதை நீர்த்துப்போகச் செய்து பின் உபயோகிக்கலாம்.
ஏதேனும் பாதகமான எதிர்வினைகள் உள்ளதா என சரிபார்க்க சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்கலாம். பாதிப்பு உண்டாகாத வகையில் எச்சரிக்கையுடன் குறைந்த அளவிலான எலுமிச்சை சாற்றை முதலில் பயன்படுத்தலாம். குறிப்பாக ஒவ்வாமை தரும் சென்சிடிவான சருமத்தில் அதைப் பயன் படுத்துவதைத் தவிர்க்கவும். தடவி கழுவிய பின் ஏற்படும் எரிச்சல் நீக்க ஈரப்பதம் தரும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
பாதிப்பை தருகிறது எனத்தெரிந்து அதை பயன் படுத்துவதை விட மாற்று வழிகளை தேர்வு செய்வது சிறப்பு. உதாரணமாக சரும பராமரிப்புக்காக வடிவமைக்கப்பட்ட எலுமிச்சை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவை மென்மையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம். ஆபத்தற்ற நன்மைகளை வழங்கக்கூடிய எலுமிச்சைசாறு சார்ந்த பிற இயற்கை வைத்தியங்களை நிபுணர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம். சருமத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் உடனடியாக சரும நிபுணரை சந்தியுங்கள்.
அழகை விட சரும ஆரோக்கியம் முக்கியம் என உணருங்கள். நேரடியாக முகத்தில் எலுமிச்சைசாறு தடவுவதில் எச்சரிக்கையை கடைபிடியுங்கள்.