
தினசரி செய்ய முடிந்த சில பொருட்களை வைத்தே மேனியை அழகுப்படுத்திக் கொள்ளலாம். அவைகள் இதோ:
சாதம் வடித்த கஞ்சியை உடம்பில் தேய்த்து குளித்தால் உடல் பளபளக்கும். கரப்பான், படர்தாமரை வராது.
வேப்பம் பூவை தலையில் வைத்து துணியால் கட்டி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பேன்கள் ஒழிந்துவிடும்.
முட்டையின் வெள்ளை கருவை எடுத்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து சீயக்காய்தூள் போட்டுக் குளித்தால், முடி பளபளப்பாகி உதிர்வதையும் தடுத்துவிடும்.
கெமிக்கல் குறைவாக கலந்துள்ள மூலிகை கலந்த சோப்பு ஒன்றை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அதை பயன்படுத்தலாம். இதனால் தோலின் நலம் பாதுகாக்கப்படும்.
பாதாம் எண்ணெயை உச்சந்தலையில் வைத்து ஒருமணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளித்தால் முடி பளபளக்கும். உதிராது.
செம்பருத்தி பூவை காயவைத்து தேங்காய் எண்ணெயில் நசுக்கி போட்டு தலையில் தேய்த்து வந்தால் முடிவளரும்.
வாரம் ஒருமுறை கரிசலாங்கண்ணி கீரையை உண்டு வந்தால் தலை முடிகொட்டாமல் கரு கரு என்று வளரும்.
பயன்படுத்திவிட்டு இருக்கும் ஆரஞ்சு எலுமிச்சை தோலை காய வைத்து சீயக்காயுடன் அரைத்து தேய்த்து குளித்தால் பொடுகு வராது. முடியும் பளபளப்பாகும்.
வசம்பை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசினால் பேன்கள் மடியும்.
உதட்டில் சுருக்கம் இருந்தால் வாரத்தில் இரண்டு முறை உலர்ந்த திராட்சையை உதட்டில் வைத்து மசாஜ் செய்தால் சுருக்கம் போய்விடும்.
சில இளம்பெண்களுக்கு மேல் உதட்டில் மெல்லிய பூனை முடி வளர்ந்து இருக்கும். இதற்கு வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து ரோமம் உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை உதிர்ந்து மீண்டும் முளைக்காது.
கைப்பிடி ரோஜா இதழ்களை எடுத்து பால் விட்டு அரைத்து அவற்றை உதட்டின் மீது தடவி வந்தால் உதட்டு வெடிப்புகள் நீங்கி அழகு வரும்.
உதட்டில் சிறிதளவு கிளிசரினை தடவி விட்டு லிப்ஸ்டிக் போட்டு பாருங்கள் சீராக அழகாக இருக்கும்.
இரவு படுக்க போகும்போது ஒரு வாரத்திற்கு வெண்ணெய் போட்டு வந்தால் உதட்டின் கருப்பு நிறம் மறைந்து உதடுகள் வனப்புடன் மென்மை பெறும். அதேபோல் தினமும் காலையில் ஒரு துளி நெய்யை விரலால் தொட்டு உதட்டில் தடவி வந்தாலும் உதடு பளபளப்பாகும்.
வீட்டில் பூக்கும் ரோஜா இதழ்களை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரால் கண்களை கழுவி பாருங்கள் கண்கள் குளிர்ச்சிபெறும்.
பச்சை பசும்பாலில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தால் கண்களின் களைப்பு போய்விடும். பன்னீரையும் இதேபோல் பயன்படுத்தலாம். இரவு நீண்ட நேரம் கண் விழித்திருப்பவர்களுக்கு கண்களில் சோர்வு நீங்க சிறந்த வழி இது.
கருத்துபோன கொலுசு, மெட்டி போன்றவைகளை பால்/புளிகரைசலில் ஊறவைத்து கழுவிப் பாருங்கள் புதிதாய் இருக்கும்.
வெயிலில் சென்றுவிட்டு வந்தவுடன் முகத்தை சுத்தமான துணியால் துடைத்து விட்டு குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் முகம் பளிச்சென்று ஆகும்.
முட்டையின் வெள்ளை கரு 2பங்கு, எலுமிச்சை சாறு ஒரு பங்கு, தேன் அரை பங்கு சேர்த்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.
இது போன்ற தினசரி வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே நாம் நம்மை அழகுப்படுத்திக்கொள்ளலாம்.