
கடந்த சில ஆண்டுகளாக சரும ஆரோக்கியம் காக்க நம் நாட்டில் பலரும் கே-பியூட்டி அழகு சாதனங்களைத் தேடிப் போய்க் கொண்டிருக்கையில், சில பெண்கள் சமையலறையிலிருக்கும், மஞ்சள், பால், கடலைமாவு போன்ற இயற்கைப் பொருட்களையே முகப்பொலிவு மற்றும் முடி ஆரோக்கியம் காப்பதற்கு நாடிச் சென்று கொண்டிருக்கின்றனர். சருமம் ஆரோக்கியம்பெற
மசூர் டால் சிறந்த முறையில் உதவிபுரியும் என்பது பல பேருக்கு இன்னும் தெரியவில்லை. சரும ஆரோக்கியத்திற்கு மசூர் டாலை நாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.
இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்திலிருக்கும் அழுக்குகளையும் அசுத்தங்களையும் சிறந்த முறையில் நீக்க உதவும். மசூர்டால் மாவைக் கரைத்து முகத்தில் மாஸ்க்காக போட்டு, சிறிது நேரத்தில் கழுவிவிட்டால் முகத்திலுள்ள இறந்த செல்கள் மிருதுவாக உறித்தெடுக்கப்பட்டு முகம் பளபளப்புப் பெறும்.
மசூர் டால் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. அது தோலிலுள்ள வீக்கங்களை நீக்கவும், சிவந்த நிறமாய் மாறியுள்ள பகுதிகளை சீராக்கவும் உதவிபுரியும். மசூர் டால் சருமத்தின் துவராங்களில் உள்ள அடைப்புகளை நீக்கி சுத்தப்படுத்தி, அங்கு உற்பத்தியாகும் எண்ணெய்ப் பசையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதனால் பருக்கள் வெடித்து வெளிவரும் வாய்ப்பு நீங்கி, சருமம் சுத்தமாகவும் மிருதுவாகவும் தோற்றமளிக்கும்.
மசூர் டாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, முன் கூட்டியே உடல் வயதானது போன்ற தோற்றம் பெறுவதைத் தடுக்க உதவுகின்றன. மேலும், பாதுகாப்பிற்காக சருமத்தில் கூடுதலாக ஒரு அடுக்கை உருவாக்கி, சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுக்களால் சரும செல்கள் சேதமடையாமலிருக்கவும் உதவி புரிகின்றன.
இப் பருப்பிலிருக்கும் வைட்டமின்கள் A மற்றும் C ஆகியவை சருமத்தின் அடிப் பகுதியில் கொல்லாஜென் உற்பத்தியைப் பெருகச் செய்து, தோலின் மீது சுருக்கங்கள் மற்றும் கோடுகள் உருவாவதைத் தடுக்க உதவி புரிகின்றன.
பல்வேறு கரணங்களால் சருமத்தில் ஆங்காங்கே நிறம் மாறி திட்டுக்கள் தென்பட்டால், மசூர் டால் பவுடருடன் லெமன் ஜூஸ் மற்றும் தக்காளி ஜூஸ் கலந்து திட்டுக்கள் மீது தடவி வர, அது அவ்விடத்து இறந்த மற்றும் நிறம் மாறிய செல்களை மிருதுவாக உரித்தெடுத்து பழைய நிறத்தை மீட்டெடுத்துக் கொண்டு வந்துவிடும்.
இரவில் ஒரு கப் மசூர் டாலை ஊறவைத்து காலையில் அரைத்து அதனுடன் ⅓ கப் பச்சைப் பால் சேர்த்து முகத்தில் மாஸ்க்காகப் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவிவிட முகம் தேவையான அளவு நீரேற்றம் பெறும். சரும துவராங்கள் இறுக்கமடையும்.
இரவில் 50 கிராம் மசூர் டாலை ஊறவைத்து காலையில் அரைத்து அதனுடன் 1 டீஸ்பூன் பச்சைப் பால் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலந்து முகம் முழுவதும் தடவி, அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விட சருமம் சமநிலையும் மினு மினுப்பும் பெறும்.
இரவில் 2 டேபிள் ஸ்பூன் மசூர் டாலை ஊறவைத்து காலையில் அதனுடன் சமஅளவு மேரி கோல்ட் பூவின் இதழ்கள் மற்றும் சில துளி ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து அந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட சருமம் நீர்ச்சத்து நிறைந்து உப்பலுடன் கூடிய அழகிய தோற்றம் பெறும்.