

நாற்பது வயது என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக உன்னதமான காலகட்டம். இளமைப்பருவத்தின் தடுமாற்றங்கள் நீங்கி, வாழ்க்கையில் ஒரு தெளிவும் முதிர்ச்சியும் கிடைக்கும் பருவம். ஆனால், இந்த வயதை எட்டியவுடன் பல ஆண்கள், ‘நமக்கு வயதாகிவிட்டது’ என்று நினைத்து, தங்களின் ஆடைத் தேர்வில் அலட்சியம் காட்டத் தொடங்கி, வயதானவர்கள் உடுத்தும் ஆடைகளைத் தேடிப்பிடித்து அணிகிறார்கள்.
40 வயதைக் கடந்த ஆண்கள், தங்களைச் ஸ்மார்ட்டாகவும் இளமையாகவும் காட்டிக்கொள்ள உதவ சில எளிய ஃபேஷன் ரகசியங்கள் இதோ:
ஃபிட்டான ஆடைகள்:
40 வயதிற்கு மேற்பட்ட பல ஆண்கள் தங்களின் உடல் மாற்றங்களை மறைப்பதற்காகப் பெரிய அளவிலான, தளர்வான ஆடைகளை உடுத்தத் தொடங்குகிறார்கள். இது தோற்றத்தை இன்னும் வயதானவராகவும் சோர்வானவராகவும் காட்டும். அதேபோல், மிக இறுக்கமான ஆடைகளும் இந்த வயதிற்குப் பொருந்தாது.
ஃபேஷன் ரகசியம்: உடலின் சரியான அளவிற்குப் பொருந்தும் 'ரெகுலர் ஃபிட்' அல்லது 'ஸ்லிம் ஃபிட்' ஆடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். சட்டை மற்றும் பேண்ட்களின் தையல் நேர்த்தியாக இருக்கும்போது, அது ஒரு இளமையான தோற்றத்தைத் தந்துவிடும்.
வண்ணங்களில் ஜொலிக்கும் இளமை:
எப்போதும் வெள்ளை, சாம்பல் அல்லது மங்கிய நிறங்களையே உடுத்த வேண்டும் என்ற விதியை முதலில் மாற்றவேண்டும். நிறங்கள்தான் ஒரு மனிதனைத் தனித்துக் காட்டும்.
ரகசியம்: அடர் நீலம், கரும்பச்சை, மெரூன், டார்க் சாக்லேட் நிறம் போன்ற வண்ணங்கள் ஆண்களுக்கு என்றும் இளமையான தோற்றத்தைத் தரும். வெளிர் நிறங்களை விரும்பினால் மென்சிவப்பு, ஆகாய நீலம், புதினா பச்சை போன்ற மென்மையான நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். சட்டை மற்றும் பேண்ட்டிற்கு ஒரே நிறத்தைப் பயன்படுத்தாமல், இரண்டுக்கும் வேறு வேறு நிறங்களைப் பயன்படுத்தி (காண்ட்ராஸ்ட்) உடுத்துவது இளமைத் தோற்றத்தைக்கூட்டும்.
டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் தேர்வு:
40 வயதாகிவிட்டால் ஜீன்ஸ் அணியக்கூடாது என்பது முற்றிலும் தவறான கருத்து. சரியான ஜோடியைத் தேர்ந்தெடுப்பதில்தான் ரகசியமே இருக்கிறது.
ரகசியம்: தளர்வான ஜீன்ஸ் துணிகளைத் தவிர்த்துவிட்டு, நேர்த்தியான அடர் நீலம் அல்லது கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்களை அணியலாம். அவற்றுடன் காலர் வைத்த 'போலோ' டி-ஷர்ட்டுகளை அணியும்போது அது ஒரு தனி கம்பீரத்தைத்தரும். வட்டக் கழுத்து டி-ஷர்ட் அணிவதாக இருந்தால், அதன் மேல் ஒரு லேசான சாதாரண சட்டையைப் பொத்தான் போடாமல் ஓப்பனாக அணியலாம். இது தொப்பையை மறைப்பதுடன், தோற்றத்தைப் பத்து ஆண்டுகள் இளமையாகவும் காட்டும்.
துணிகளின் தரம்:
இந்த வயதில் மலிவான, பளபளப்பான செயற்கை இழை (பாலியஸ்டர்) துணிகளைத் தவிர்ப்பது நல்லது. துணியின் தரம் மனிதரின் மதிப்பை உயர்த்தும்.
ரகசியம்: லினன், காட்டன் போன்ற தரமான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை உடலுக்கு இதமாக இருப்பதுடன், பார்ப்பதற்கே ஒரு கௌரவமான, அதேசமயம் நவீனமான தோற்றத்தை வழங்கும்.
காலணிகளும் இதரப் பொருட்களும்;
ஆடை எவ்வளவு அழகாக இருந்தாலும், அணியும் காலணிகள்தான் ஒரு மனிதனின் ஃபேஷனை முழுமையாக்குகின்றன.
ரகசியம்: பழைய மாடல் செருப்புகளைத் தவிர்த்துவிட்டு, நவீன ரக 'லோஃபர்ஸ்' அல்லது வெள்ளை நிற 'ஸ்நீக்கர்ஸ்' ரகக் காலணிகளைப் பயன்படுத்தலாம். வெள்ளை ஸ்நீக்கர்ஸ் காலணிகள் ஜீன்ஸ் மற்றும் சாதாரண பேண்ட்களுக்கு அசாத்தியமான இளமைத் தோற்றத்தைத் தரும். அதேபோல், பெரிய எண்களைக் கொண்ட பழைய கடிகாரங்களுக்குப் பதிலாக, நேர்த்தியான லெதர் வார்ப்புகள் (ஸ்ட்ராப்) கொண்ட கடிகாரங்களை அணியலாம்.
இளமை என்பது வெறும் வயதில் இல்லை. அது மனதிலும், மனிதர்கள் தங்களை வெளிப்படுத்தும் விதத்திலும்தான் இருக்கிறது. 40 வயது என்பது முதுமையின் தொடக்கமல்ல. அது முதிர்ச்சியான இளமையின் உச்சகட்டம். எனவே, சரியான ஆடைகளைத் தேர்வு செய்து, அணிந்து ஸ்டைலாக உலா வரலாம்.