
அழகு என்பது தோற்றத்தில் மட்டுமல்ல நம் உள்ளத்திலும் இருக்க வேண்டியது அவசியம். மனதில் உற்சாகம் இருந்தால் முகம் அழகுடன் திகழும். மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகள் இன்றி, தினசரி குறைந்தது 6 மணிநேர தூக்கம் போன்றவை நம்மை புத்துணர்ச்சியுடனும், அழகுடனும் இருக்க வைக்கும். உடலுக்கு தேவையான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதும், முழு தானியங்கள், விட்டமின் இ சத்து நிறைந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், முகச்சுருக்கத்தையும் போக்கும். முகத்திற்கு இளமையையும் அழகையும் தரும் சில பொருட்களை இப்பதிவில் காணலாம்.
வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகள்:
பாதாம், வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பசலைக் கீரை, கடுகு கீரை போன்ற கீரைகள், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் போன்ற விதைகள், கொட்டைகள், சமையல் எண்ணெய்கள், மீன் மற்றும் காய்கறிகளில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதய நோய் அபாயத்தை குறைக்கும். சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கேரட்:
இரண்டு துண்டு கேரட்டை விழுதாக அரைத்து அத்துடன் 1/2 ஸ்பூன் பாதாம் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை பகுதிகளில் தடவியும், கண்களுக்கு அடியிலும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சுருக்கங்கள் குறைவதுடன் சருமத்தின் நிறமும் கூடும்.
ஆரஞ்சு தோல்:
ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு காயவைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி காற்று புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும். வாரத்திற்கு இரண்டு நாட்கள்1 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் சிறிதளவு பால் கலந்து கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவும். இது கவரிங் நகை போடுவதால் ஏற்படும் கருமை நீங்கவும், சருமத்தில் அலர்ஜி காரணமாக கருப்பு தட்டுவதும் நீங்க உதவும்.
தக்காளி:
தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் சருமத்தை முதிர்ச்சி அடையாமல் பார்த்துக்கொள்ளும். தக்காளியை விழுதாக அரைத்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமத்தில் உள்ள கருமை குறையும். தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம் முகப்பருக்களை போக்கும்.
தேன்:
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகளை நீக்க தேன் பெரிதும் உதவும். முகப்பரு உள்ள இடத்தில் தினமும் சிறிதளவு தேன் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து முகத்தை கழுவி வர முகப்பருவை தோற்றுவிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து முகப்பருகள் மற்றும் அவற்றின் வடுக்கள் மறையும். தினமும் ஒரு ஸ்பூன் தேனை உணவாக எடுத்துக்கொள்ள இளமையான தோற்றம் பெறலாம். அத்துடன் தினமும் சிறிது முகத்தில் பூசி வர தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயிலை முகம் கை கால் கழுத்து பகுதிகளில் பூசி வர சருமம் பளபளப்பாக மின்னும். வைட்டமின் ஈ ஆன்ட்டி ஆக்சிடன்ட் அதிகம் கொண்ட ஆலிவ் எண்ணெய் சருமத்தில் உள்ள சேதத்தை சரி செய்யும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
தேங்காய் எண்ணெய்:
சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படும். சருமத்திற்கு நீர் ஏற்றத்தை கொடுப்பதுடன், சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை அளித்து சருமத்தை மிருதுவாக்கும். சொறி சிரங்கு போன்ற சரும பிரச்னைகள் தோன்றாது.
விளக்கெண்ணெய்:
சிலருக்கு புருவத்தில் அதிக முடியின்றி மிகவும் மெல்லியதாக இருக்கும். இதற்கு சிறிதளவு விளக்கெண்ணெய் எடுத்து புருவங்களில் தடவி வர மெல்லிய புருவம் போய் அடர்த்தியாக முடி வளர்ந்து பார்க்க அழகாக இருக்கும்.
கருவளையம் நீங்க சிறிதளவு விளக்கெண்ணையை கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவு கொண்டு கழுவி வர கருவளையம் காணாமல் போகும்.
உடல் சூட்டிற்கு உச்சி மண்டையில் சிறிது விளக்கெண்ணெய் வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
பீட்ரூட்:
சருமத்தை பிரகாசமாக்கவும், கரும்புள்ளிகள், கருவளையங்களை போக்கவும் உதவும். பீட்ரூட் உதடுகளுக்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கும். உதட்டு வெடிப்புகளை குறைக்கும். அத்துடன் சருமத்தை மென்மையாக்கும். இதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பளிச்சென வைக்கும். சிறிது பீட்ரூட்டை எடுத்து அரைத்து அதன் சாறை சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம். பீட்ரூட் சாறுடன் சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம்.
வாழைப்பழ கூழ்:
குளிர்காலமோ, வெயில் காலமோ சருமத்தை பளிச்சென்று பொலிவுடன் வைத்துக்கொள்ள எந்த காலத்திற்கும் ஏற்ற வாழைப்பழத்தை தோல் நீக்கி பாதி எடுத்து நன்கு மசித்து அத்துடன் சிறிது தேன் கலந்து கை, கால் முகம் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட நல்ல பலன் கிடைக்கும்.