
கிராமங்களில் வயது முதிர்ந்த பெண்கள் காபியை 'காப்பித் தண்ணி' என்றும் தேனீரை 'தேத் தண்ணி என்றும் கூறுவது வழக்கம். இந்த பிளைன் பிளாக் 'தேத் தண்ணி' முடிவளர்ச்சிக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பிளாக் டீ வாட்டரில் காஃபின், டேன்னின்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை முடி கால்களின் அருகே உள்ள நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வேர்களைப் பலப்படுத்தவும், முடி உதிர்வைத் தடுக்கவும் உதவுகின்றன. இதைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, ஸ்கேல்ப் ஆயில் (Scalp oil) சமநிலைப்பட்டு, முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும், பள பளப்பாகவும் வளர ஆரம்பிக்கும். பால், சர்க்கரை எதுவும் சேர்க்கப்படாத இந்த பிளைன் பிளாக் டீ முடி ஆரோக்கியம் காக்க எப்படி செயல்படுகிறது என்று விரிவாகப் பார்ப்போம்.
இதிலுள்ள காஃபின், முடி மெலிவுற்று, உதிர்வதற்கு காரணமாகும் DHT (dihydrotestosterone) என்ற ஹார்மோனை தடுத்து நிறுத்துகிறது. இந்த தேனீரால் முடி முழுவதையும் கழுவி வர ஸ்கேல்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். முடிக்காலின் அருகே உள்ள நுண்ணறைகள் சுறுசுறுப்படைந்து புதிய முடி இழைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.
பிளாக் டீயில் உள்ள கேட்டச்சின்ஸ் மற்றும் ஃபிளவனாய்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் டேன்னின்ஸ் ஆகியவை ஸ்கேல்ப்பில் உள்ள வீக்கங்களையும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் குறைக்க உதவுகின்றன. இதனால் முடி ஆரோக்கியமாக வளரவும் வேர்க் கால்கள் பலமடையவும் ஆரம்பிக்கின்றன.
தொடர்ந்து பிளாக் டீயினால் முடியை அலசி வர முடி உதிர்வதும், இழைகள் உடைவதும் தடுக்கப்படுகிறது. ஸ்கேல்ப்பில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசையை பிரித்து விடாமல், மெதுவாக ஸ்கேல்ப்பை பிளாக் டீ சுத்தப்படுத்திவிடும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் பிளாக் டீ இலைகளை, இரண்டு கப் கொதிக்கும் நீரில் போட்டு 5-7 நிமிடம் வரை விட்டு வைத்து, பிரவுன் கலர் வந்ததும் வடிகட்டி, குளிரச்செய்து பின் கூந்தல் முழுக்கவும், ஸ்கேல்ப் பகுதியிலும் பூசுவதற்கு உபயோகிக்கலாம். தலை முழுக்க ஊற்றி ஐந்து நிமிடம் மசாஜ் பண்ணலாம். ஷாம்பு போட்ட பின்னும், தேத் தண்ணி ஊற்றி கூந்தலை கழுவிவிடலாம். வாரத்தில் இரண்டு மூன்று முறை கூந்தலுக்கு பிளாக் டீ வாட்டர் பாத் கொடுக்கலாம். ரோஸ் மேரி ஆயில், பெப்பர்மிண்ட் ஆயில் போன்றவற்றையும் டீ வாட்டருடன் கலந்து உபயோகிக்கலாம்.
மாசுபட்ட சூழல் மற்றும் ஸ்ட்ரெஸ் காரணமாக முடி கொட்டும் போதும், குழந்தை பெற்ற அம்மாக்களுக்கும் டீ வாட்டர் பாத் நல்ல பலனளிக்கும். சம நிலையற்ற ஹார்மோன் சுரப்பு உள்ள பெண்கள் மற்றும் வேறு காரணங்களுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நபர்களும் டெர்மட்டோலாஜிஸ்ட்டை கலந்தாலோசித்து பின் தலைக்கு டீ வாட்டர் உபயோகிப்பது நலம்.