
நம் வீட்டிலேயே இயற்கையான பொருட்களைக்கொண்டு அழகை மேம்படுத்துவதில் கஸ்தூரி மஞ்சளுக்கு ஈடு இணை இல்லை எனலாம்.
கஸ்தூரி மஞ்சளில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட் சருமத்தில் பாக்டீரியாக்களின் தொற்றால் உண்டாகும் முகப்பரு, கட்டிகள் கரும்புள்ளிகள் ஆகிய சரும பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது.
கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் சன் டேன் போன்ற பாதிப்பு உள்ளவர்களும் கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தி தீர்வு காணலாம்.
பயன்படுத்தும் முறை.
வளரும் இளம்பெண்களில் சிலருக்கு முகம் மற்றும் கால், கைகளில் அடர்த்தியாக முடி வளர்வது மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. அவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் பால் கலந்து அதிக முடி உள்ள இடங்களில் பேக் போட்டு ஊறவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து குளித்தால் நாளடைவில் தேவையற்ற முடி உதிர்வதோடு முகம் கை, கால் ஆகியவை மென்மை அடையும்.
கஸ்தூரி மஞ்சள் சிறந்த சன் பேக்காவும் செயல்படுகிறது. அடிக்கடி வெளியில் செல்லவேண்டிய அவசியம் உள்ள பெண்கள், கஸ்தூரி மஞ்சள் கொண்டு முகம் கழுவிவிட்டு வெளியில் செல்லலாம். சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இது உதவும்.
முகம் எப்போதும் ஃபிரஷ்ஷாக இருக்க கஸ்தூரி மஞ்சள் கொண்டு எப்படி கிளன்சிங் செய்வது? பார்ப்போம்.
காய்ச்சாத பசும் பால் ஒரு டீஸ்பூன், அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், தேன் சேர்த்து கலந்து உடனே முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பளிச்சிடும்.
முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற ஸ்க்ரப் பயன்படுத்துவோம்.
இதற்கு இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். கலக்கிய கலவையைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்துக்குப் பொலிவைத் தரும்.
இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், இரண்டு வைட்டமின் இ மாத்திரையை சேர்த்து பிழிந்து அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் கலந்து, இத்கலவையை 15 நிமிடங்கள் முகத்துக்கு மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருத்திட்டுகள் நீங்கும். பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் புத்துணர்வு அளிக்கும்.
ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 டீஸ்பூன் கடலை மாவுடன், 2 டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகம் கழுத்துப் பகுதியில் பேக் போட்டு அரைமணி நேரம் உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று மின்னும்.
வாரம் ஒருமுறை கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தி சருமத்தில் உண்டாகும் அலர்ஜி பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் இயற்கை பொருட்களில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் பலவிதமான அழகியல் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகின்றன. அந்தந்தக் காலகட்டங்களில் உண்டாகும் பருவநிலை மாற்றங்களை சந்தித்து அழகை பாதுகாக்கவும், இயற்கையான பொருளே நமக்கு பெருந்துணையாக இருக்கும்.