இனி லிப்ஸ்டிக் தேவையிருக்காது! உங்கள் உதடுகளை அழகாக்கும் மேஜிக் குறிப்புகள்!

magic-beauty-tips-tamil
magic-beauty-tips-tamil
Updated on

ழகான, மென்மையான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளை இயற்கையான முறையில் பெறுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. உதடுகளை மெருகேற்ற பின்வரும் இயற்கை குறிப்புகளை பயன்படுத்தி பயன்பெறலாம். 

சர்க்கரை ஸ்க்ரப் (Exfoliation): 

ஒரு டீஸ்பூன் அளவு சக்கரையுடன் தேன் அல்லது சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உதடுகளில் மென்மையாக வட்ட இயக்கத்தில் 2 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது இறந்த செல்களை நீக்கி உதடுகளை மென்மை யாக்குவதுடன் உதட்டின் நிறத்தையும் மேம்படுத்தும்.

பால் ஏடு மற்றும் நெல்லிக்காய் சாறு:

பெரிய நெல்லிக்காயை எடுத்து நசுக்கி சாறு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சிறிதளவு பாலாடையும் சேர்த்து நன்கு கலந்து உதடுகளில் தடவி வர வெடிப்புகள் மற்றும் கோடை வெப்பத்தால் உதடுகள் உலர்ந்துபோவது போன்றவை நீங்கி அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய்: 

பாதாம் எண்ணெய் (2 சொட்டு) மற்றும் ஆலிவ் எண்ணெய்(2 சொட்டு) சம அளவில் கலந்து எடுத்து தினமும் இரவில் படுக்க செல்வதற்கு முன்பு தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும்.

நெய் அல்லது வெண்ணெய்: 

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உதட்டில் சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வர உதட்டு வெடிப்பு, வறண்ட உதடுகள் மற்றும் தோல் உரிந்து காணப்படும் உதடுகளை சரி செய்து மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கவைக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்:

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய உதட்டின் கருமை நீங்கி உதடுகள் ஜொலிக்கும். 

பீட்ரூட் மற்றும் கேரட் சாறு:

ஒரு துண்டு பீட்ரூட் மற்றும் ஒரு துண்டு கேரட் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து உதடுகளில் தேய்ப்பது அல்லது அதன் சாற்றை உதட்டில் தடவி வருவது உதடுகளுக்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை தரும். இந்தச்சாறை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை உபயோகிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
வெள்ளை முடிக்கு விடை கொடுப்போம்! நரைமுடி மறைய சில எளிய ரகசியங்கள்!
magic-beauty-tips-tamil

வைட்டமின் ஈ: 

வைட்டமின் ஈ ஆயிலை உதடுகளுக்கு பயன்படுத்த உதட்டு சுருக்கங்கள் நீங்கி மென்மையாக, பளபளப்பாக ஆரோக்கியமான தோற்றத்தைத் தரும்.

உதட்டு பராமரிப்பு குறிப்புகள்: 

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உதடுகளை நீரேற்றத்துடன் வைத்து வறண்டு போவதைத் தடுக்கும். 

உதடுகள் காய்ந்து இருப்பது போல் இருந்தால் சிலர் அடிக்கடி எச்சிலால் நனைத்து ஈரப்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு. இப்படி செய்வது உதடுகளை மேலும் வறட்சியாக்கும்.

வெயிலில் செல்லும் பொழுது SPF உள்ள லிப் பாம் பயன்படுத்துவது சூரிய ஒளியால் உதடு கருப்பாவதை தடுக்கும். புகைப்பிடித்தல் உதடுகளில் கருமை மற்றும் சுருக்கங்களை உண்டாக்கும். இதையும் தவிர்த்து விடுதல் நல்லது. 

லிப்ஸ்டிக் எப்போதும் வசீகரமானவைதான். லிப்ஸ்டிக் உதடுகள் நம்மை அழகாகக்காட்ட உதவும். ஆனால் எல்லா நேரங்களிலும், எப்போதும் உதட்டுக்கு சாயம் போடுவது, மேக்கப் கலையாமல் இருப்பது போன்றவையும் உதட்டின் நிறத்தை கருமையாக மாற்றும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சிறிது மெனக்கெட்டால் போதும் இயற்கையான முறையில் அதிக செலவின்றி, ஆரோக்கியத்திற்கும் கேடின்றி அழகான உதடுகளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com