

சூரியனின் தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர் களிலிருந்து (UV) சருமத்தை பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தை தக்கவைக்க இரசாயன களிம்புகளுக்குப் பதிலாக இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். இயற்கையில் இருந்து பெறப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இவை ரசாயன சன் ஸ்கிரீன்களைப் போல் இல்லாமல் சருமத்திற்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது.
இயற்கையான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணம்:
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் இன்றிமையாத ஒன்றாக உள்ளது. என்னதான் சன்ஸ்கிரீன் புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்தாலும், ரசாயனங்கள் மூலம் செய்யப்படுவதால் அதுவும் ஆபத்துதான். தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது தோலில் எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படும். அத்துடன் அதில் உள்ள ரசாயனங்கள் நம் சருமத்தில் உள்ள துளைகள் வழியாக ஊடுருவிச்சென்று ஹார்மோன் சிதைவை ஏற்படுத்தக்கூடும். எப்போதுமே முகத்தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்தது மற்றும் எளிதில் சேதமடையக் கூடியது என்பதால் முகத்திற்கு இயற்கையான சன்ஸ்க்ரீன்கள் மிகவும் அவசியமானது.
எள் எண்ணெய் (Sesame Oil):
நீண்ட நேரம் கடுமையான வெயிலில் இருப்பது சரும பாதிப்புகளையும், காலப்போக்கில் சருமப் புற்றுநோயையும் கூட ஏற்படுத்த போகும். ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. இதில் சுமார் 4 முதல் 10 வரை SPF( Sun Protection Factor) அளவு இயற்கையாகவே உள்ளது. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளை சரிசெய்து இளமையை பாதுகாக்க உதவுகிறது.
சூரியனின் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம் மற்றும் கரும்புள்ளிகளைத் தடுக்கிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதால் ஏற்படக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களால் உண்டாகும் சரும பாதுகாப்பைத் தடுக்கவும் இது உதவுகிறது. வெளியில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் சில துளிகள் எள் எண்ணெயை முகம் மற்றும் கைகளில் தடவிக்கொள்ளலாம்.
கேரட் விதை எண்ணெய் (Carrot Seed Oil):
கேரட் விதை எண்ணை சருமத்திற்கு இயற்கையான முறையில் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஒரு சிறந்த மூலப்பொருளாகும். இதில் உள்ள கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்திற்கு கூடுதல் கவசமாக செயல்படுகிறது.
இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்துக்கள் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. கேரட் விதை எண்ணை மிகவும் அடர்த்தியானது என்பதால் அதனை நேரிடையாகப் பயன்படுத்தக் கூடாது. பாதாம் எண்ணெய் அல்லது சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து வெயிலில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இதை தடவிக்கொள்ளலாம்.
துளசி:
துளசி இலைகளைக் கழுவி, சிறிது நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அத்துடன் சிறிது கற்றாழை ஜெல், 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகம், கைகள் போன்ற வெயில் படும் இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவிவிடவும்.
துளசி இலைகளில் உள்ள 'அர்சோலிக் அமிலம்' (Ursolic acid) மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. தோல் கருமையாவதைத் தடுத்து, வீக்கத்தைக் குறைத்து, சருமத்தை இயற்கையாகவே புதுப்பிக்க உதவுகிறது. துளசி அதன் தூய்மைப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் பண்புகளுக்காக அறியப்படுகிறது.
இது ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பொருளாக செயல்பட்டு, சருமத்தை சுற்றுச்சூழல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கிறது. அத்துடன் புறஊதாக் கதிர்களின் வெளிப்பாட்டால் ஏற்படும் அழற்சியையும் தணிக்கிறது.
கற்றாழை (Aloe Vera):
வெயிலால் சிவந்த மற்றும் எரிச்சலூட்டும் சருமத்திற்கு உடனடி குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும் சோற்றுக்கற்றாழையை நன்றாக மசித்து, இளநீர் சிறிது சேர்த்து வெயில் படும் இடங்களில் பூசிக் கொண்டு வர சருமம் டேன் ஆகாது.சூரிய கதிர்களால் ஏற்படும் கருமை(Tan) மற்றும் வெப்பத்தை நீக்கி சருமத்திற்கு இயற்கை ஈரப்பதத்தைத் தருகிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், வெயிலால் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கவும் உதவும் இதில் இயற்கையிலேயே உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தை பாதுகாக்கின்றன.
கஸ்தூரி மஞ்சள்:
ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கஸ்தூரி மஞ்சள் இவையெல்லாம் சூரிய கதிரிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க கூடியவை. வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் கருந்திட்டுக்களை மறையச் செய்ய உதவும். இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.
கஸ்தூரி மஞ்சள் தூளுடன் சிறிது ரோஸ் வாட்டர் அல்லது தயிர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும்.