
காலை நேர சரும பராமரிப்பு வழக்கத்தைப் போலவே இரவு சரும பராமரிப்பு வழக்கமும் மிகவும் அவசியமானது. இரவு நேர சரும பராமரிப்பு என்பது நம் சருமத்தை மீட்டமைக்க மற்றும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க மிகவும் தேவையானது. உறங்கும் பொழுது சரும செல்கள் இயற்கையாகவே தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் செயல்முறைக்கு உட்படுகிறது. இந்த நேரத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு கொடுப்பது சரும ஆரோக்கியத்திற்கும், பளபளப்பிற்கும் தேவையானது. இரவு நேர சரும பராமரிப்பு என்பது பகலை விட மிகவும் முக்கியமானது. உறங்க செல்வதற்கு முன்பு சில விஷயங்களை செய்து பழக சருமத்தின் பளபளப்பையும், வறண்டு போகாமல் மென்மையாக பாதுகாக்கவும் முடியும்.
பரபரப்பான வாழ்க்கை சூழலில் நிறைய பேருக்கு சருமத்தை பராமரிப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் தினமும் சிறிது நேரமாவது ஒதுக்கி கவனிப்பு கொடுப்பது அவசியம்.
சருமத்தை சுத்தப்படுத்துதல்:
இரவில் மேக்கப்பை நீக்காமல் தூங்குவது சரும துவாரங்களில் அடைப்பை ஏற்படுத்தி பருக்கள், கரும் புள்ளிகள் ஏற்பட வழிவகுக்கும். எனவே படுப்பதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவி விட சரும துவாரங்கள் அடைபடாது. அத்துடன் இரவில் நம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மேக்கப்பை நீக்குவது அவசியம். இதற்காக ஒரு மென்மையான கிளென்சரை பயன்படுத்தி முகத்தைக் கழுவலாம்.
போதுமான தூக்கம்:
சருமத்தை மீட்டெடுப்பதில் போதுமான தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏழு எட்டு மணி நேரம் தூக்கம் உடலையும் மனத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். குறிப்பாக அலைபேசி, கணினி போன்ற எந்த ஒளியும் இல்லாத இருட்டான அறையில் தூங்குவது நல்லது.
பால் சிகிச்சை:
இரவு தூங்குவதற்கு முன்பு பஞ்சில் சிறிது காய்ச்சாத பச்சை பாலை தொட்டு முகம், கழுத்து, கைகளில் தேய்த்து சரும அழுக்குகளை போக்கலாம். தினமும் இம்முறையில் கிளென்சிங் செய்வது சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதேபோல் பாலுடன் சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து சருமத்தில் பயன்படுத்தி வருவது, பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக எக்ஸ்ஃபோலியேட் செய்து அதில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றுகிறது. மஞ்சளில் காணப்படும் குர்குமின் சருமத்தில் உள்ள வீக்கத்தை குறைத்து பொலிவாக்குகிறது.
சீரம்கள்:
ஒவ்வொரு சருமத்திற்கும் தனித்துவமான தேவைகள் இருப்பதால், நம் சரும வகைக்கு ஏற்ற தயாரிப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது. முகப்பரு, கருவளையம் போன்ற சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண சீரம்களை பயன்படுத்தலாம். அத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுவதும் அவசியம். இரவு நேர பராமரிப்பு அடுத்த நாள் சருமத்தை மேலும் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.
எண்ணெய் பசை சருமத்திற்கு:
எண்ணெய் சருமத்தில் பருக்கள் வரக்கூடும். இதற்கு முகத்தை சரியாக சுத்தம் செய்து, நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த, சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு இறந்த சருமம் சுத்தம் செய்யப்படுகிறது.
வறண்ட சருமத்திற்கு:
சருமம் மிகவும் வறண்டதாக இருந்தால் இரவு நேர தரும பராமரிப்பு இன்னும் அவசியமாகிறது. தேங்காய் எண்ணெயின் சிறந்த அமைப்பு வறண்ட சருமத்திற்கு ஆழமான மாய்சரைசராக செயல்பட்டு, தேவையான போஷாக்கை அளிக்கிறது.
சருமத்திற்கு ஈரப்பதம் அளித்தல்:
சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதற்கு மாய்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். இது சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
டோனர் பயன்படுத்துவது:
டோனர் சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்த உதவும். எனவே சருமத்திற்கு ஏற்ற டோனரைப் பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.
மிதமான மசாஜ்:
சருமம் இரவு நேரத்தில் அதிக ஊடுருவக் கூடியதாக இருக்கும். எனவே சரும பராமரிப்பு பொருட்களை சிறப்பாக உறிஞ்சி, அவற்றின் நன்மைகளைப் பெறுகிறது. விட்டமின் ஈ, விட்டமின் சி உள்ள கிரீம்களை இரவில் தடவி மென்மையாக மசாஜ் செய்வது ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு செல்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கு உதவும். ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கூட முகத்தில் தடவலாம். இவற்றைத் தடவி மென்மையாக மேல் நோக்கி மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து முகத்தை கழுவிய பின்பு உறங்கச் செல்வது நல்லது. இவை நம் சரும செல்களை பாதிப்படையாமல் தடுத்து புத்துணர்வைத்தரும்.