
நமது அன்றாட வாழ்வில் சமையல் அறை மற்றும் பூஜை அறைகளில் உபயோகித்த சில பொருள்களை பயன்படுத்தி உடல் பொலிவையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். அதில் முதல் இடம் பிடிப்பது எலுமிச்சம் பழம்.
எலுமிச்சம்பழ தோலின் பயன்கள்
எலுமிச்சை பழச்சாறு பிழிந்த பின், அதன் தோலைத் தூக்கி எறியாமல் அவற்றை நன்கு வெயிலில் உலர்த்தி, பொடித்து ஒரு பாட்டில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொடியுடன் பாசிப்பயறு மாவும், பன்னீரும் கலந்து, முகத்திற்கு Face Pack ஆகப் பயன்படுத்தலாம்.
எலுமிச்சைப் பொடியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனைச் சேர்த்து, கஸ்தூரி மஞ்சள் கலந்து, வாரத்திற்கு இருமுறை தேய்த்துக் குளித்தால், உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கி, முகமும் உடலும் பொலிவு பெறும்.
எலுமிச்சைப் பொடியுடன் ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி பவுடர், சர்க்கரை மற்றும் பால் கலந்து, கழுத்து மற்றும் கை முட்டிகளுக்குத் தேய்த்து கழுவினால், கருமை நீங்கிவிடும்.
எலுமிச்சை பொடியுடன் பாலாடை கலந்து பன்னீர் ரும் சந்தனமும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரத்திற்கு பிறகு கடலை மாவு தேய்த்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
செம்பருத்திப்பூ
நாம் அன்றாடப் பூஜையில் கடவுளுக்கு சமர்பிக்கும் மலர் செம்பருத்திப்பூ. அது அளவிலாப் பயன்கள் தரக்கூடியது.
செம்பருத்தி பூ HEAD PACK
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி இதழ்கள்
வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
மருதாணி ஒரு கைப்பிடி அளவு
வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு
செம்பருத்திப்பூக்களை அதன் மகரந்தம் மற்றும் காம்புகளை நீக்கிவிட்டு இதழ்களை பிரித்து சுத்தம் செய்து நன்கு நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் ஒரு கைப்பிடி வேப்பிலையையும் மருதாணி இலைகளை சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்துகொள்ள வேண்டும்.
வெந்தயம் 200 கிராம் அளவு எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.
இந்த நான்கு பொடிகளையும் தனித்தனியாக பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது தலா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் paste போல கலந்து தலையில் பேக்போல போட்டு ஊறிய பிறகு வாரம் ஒருமுறை குளித்தால் உடல் குளிர்ச்சி பெறும் முடி உதிர்வதையும் தடுக்கும். மேலும் பொடுகு பேன் தொல்லை நீங்கும்.
செம்பருத்தி பூ face' pack
செம்பருத்திப்பூ பவுடருடன் சிறிது தேன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பேக் ஆக போட்டு பயத்த மாவு தேய்த்து கழுவினால் சருமம் பள பளக்கும்.
நீலச் சங்குப் பூ
சங்கு பூக்களை அதன் காம்புகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து நன்கு நிழலில் உலர்த்தி பொடித்து அதனுடன் நான்கு ஏலக்காய் இரண்டு கிராம்பு வைத்துக்கொண்டு தேவைப்படும் போது தேநீராக தயாரித்து பருகலாம். இதனால் ஜலதோசம் மற்றும் சருமத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் வயிற்று உப்புசம் அஜிரணம் ஆகியவை குறையும் சர்க்கரை நோயாளிகளுக்கு உடலின் சர்க்கரை அளவு மட்டுப்படும்.
மல்லிகை மற்றும் செவ்வந்தி பூ ரோஜா இதழ்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியுடன் எலுமிச்சை சாறு அல்லது பன்னீர் கலந்து face pack ஆக உபயோகிக்கலாம்.
இந்த கதம்ப மலர்ப் பொடியுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் பூலாங்கிழங்கு பவுடர் கலந்து நறுமணம் கமழும் குளியல் பொடியாகவும் உபயோகித்துக் கொள்ளலாம்.
பன்னீர் ரோஜா இதழ்கள்
பன்னீர் ரோஜா இதழ்களை நன்கு உலர்த்தி அதனுடன் நன்கு காயவைத்த பாசி பயறு சேர்த்து மிக்ஸியில் பவுடராக்கி கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சிறிது தயிரில் கலந்து முகத்தில் பூசி கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.