

AC skin damage: காலையில் அலுவலகம் செல்லும்போது முகம் மிகவும் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஆனால் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது முகம் மிகவும் களைத்துப்போய் இருண்ட நிறத்தில் இருப்பதை பலரும் கவனித்திருப்பீர்கள். இதற்கு முக்கிய காரணம் நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தின் சுற்றுப்புற சூழல் தான். நாள் முழுவதும் குளிரூட்டப்பட்ட AC அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது உங்களின் சரும ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் இதனை 'ஆபீஸ் ஏர்' (Office air) என்று மிகவும் பிரபலமாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த ஆபீஸ் ஏர் நமது சருமத்தை எப்படி சத்தமில்லாமல் பாதிக்கிறது, அதிலிருந்து முகத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சருமம் ஏன் வறண்டு போகிறது?
அலுவலகத்தில் தொடர்ந்து பல மணி நேரம் ஏசியில் இருப்பது மற்றும் இயற்கையான காற்றை விட அங்கு ஈரப்பதம் மிகவும் குறைவாக இருப்பது ஆகிய இரண்டு விஷயங்கள் தான் சரும பிரச்சனைகளுக்கு முக்கிய அடித்தளமாக அமைகின்றன. வெறும் ஆறு மணி நேரம் ஏசி காற்றில் தொடர்ந்து இருந்தாலே நமது சருமம் மிகவும் கடினமாகவும், வறண்ட தன்மையுடனும் மாறிவிடும். மேலும் முகத்தில் உள்ள நுண்துளைகள் மற்றும் மெல்லிய சுருக்கங்கள் வெளியே அப்பட்டமாகத் தெரியத் தொடங்கும்.
சருமத்திற்குள் நடக்கும் மாற்றங்கள்!
தொடர்ந்து ஏசி காற்றில் இருக்கும்போது டிரான்ஸ்எபிடெர்மல் வாட்டர் லாஸ் (Transepidermal Water Loss) என்ற ஒரு மோசமான செயல்முறை நமது சருமத்திற்குள் அதிரடியாக நடக்கிறது. அதாவது நமது தோலில் உள்ள இயற்கையான ஈரப்பதம் கொஞ்சம் கொஞ்சமாக வளிமண்டலத்திற்கு தப்பிச் செல்வதை தான் இது குறிக்கிறது. இதனால் சருமத்தின் பாதுகாப்பான தடுப்பு சுவர் மிகவும் பலவீனமடைகிறது.
அதோடு ஏசி அறையில் உள்ள மிகக் குறைந்த ஈரப்பதம் சருமத்திற்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்புச் சத்துக்களை முற்றிலுமாக அழித்துவிடுகிறது. இது தவிர, தேநீர் அருந்தவோ அல்லது வேறு வேலைகளுக்காகவோ குளிர்ச்சியான ஏசி அறையில் இருந்து அடிக்கடி கடுமையான வெயிலில் வெளியே சென்று வருவது சருமத்தின் தடுப்பு சுவரை மேலும் அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
சருமத்தைப் பாதுகாக்கும் டிப்ஸ்!
அலுவலகத்தில் ஏசியால் ஏற்படும் வறட்சியைத் தடுக்க உங்கள் மேசையின் அருகில் ஒரு சிறிய Humidifier கருவியை வைத்துக்கொள்ளலாம். இது உங்களை சுற்றியுள்ள காற்றில் தேவையான ஈரப்பதத்தை சேர்க்கும். சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது மிகச் சிறந்த பலனைத் தரும். சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை உறிஞ்சாத மென்மையான கிளென்சர்களை மட்டுமே முகத்தைக் கழுவப் பயன்படுத்த வேண்டும்.
கடுமையான ஸ்க்ரப்களை பயன்படுத்த வேண்டாம். மாய்ஸ்சரைசர் போடுவதற்கு முன்பாக முகத்திற்கு தேவையான நீரேற்றத்தைத் தரும் சீரம் தடவுவது சருமத்தை வறட்சியிலிருந்து கட்டாயம் காப்பாற்றும். மேலும் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தை உள்ளுக்குள் இருந்து வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மிகவும் உதவும்.
அலுவலக வேலைப் பளு மற்றும் நேரமின்மை காரணமாக பலரும் தங்களின் சருமப் பராமரிப்பைக் கோட்டை விட்டு விடுகிறார்கள். ஏசி காற்றால் முகத்தின் அழகு காணாமல் போவதை நினைத்துக் கவலைப்படுவதை விட, இந்த எளிய வழிகளைப் பின்பற்றி உங்கள் சருமத்தைக் காப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.