

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசி (AC) ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. அலுவலகம் முதல் வீடு வரை பல மணிநேரங்களை குளிர்ந்த அறைகளிலேயே கழிக்கிறோம். ஆனால், இந்த இதமான குளிர்ச்சிக்கு பின்னால் நமது சருமம், சுவாசம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதிப்படைவது பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஏசியை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக்கப் பார்க்கலாம்.
சருமப் பிரச்சனைகள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு:
ஏசி இயந்திரங்கள் அறையிலுள்ள வெப்பத்தை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் முழுமையாக உறிஞ்சிவிடுகின்றன. காற்றில் ஈரப்பதம் குறையும் போது, அது நேரடியாக நமது சருமத்தைப் பாதிக்கிறது.
சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை ஏசி காற்று உலரச் செய்கிறது. இதனால் சருமம் அரிப்புடன் கூடிய வறட்சி, மற்றும் இறுக்கமான உணர்வைப் பெறுகிறது.
போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் ஏசியில் நீண்ட நேரம் இருப்பது, உதடுகளில் வெடிப்பையும், கண்களில் எரிச்சலையும் உண்டாக்குகிறது. நீண்ட கால அளவில் இது சருமத்தின் மென்மையைச் சிதைத்து முன்கூட்டியே முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
சுவாசப் பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி:
முறையாகப் பராமரிக்கப்படாத ஏசி இயந்திரங்கள் சுவாச நோய்களின் பிறப்பிடமாக உள்ளன. ஏசி ஃபில்டர்களில் படியும் தூசி, பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் குளிர்ந்த காற்றுடன் சேர்ந்து அறை முழுவதும் பரவுகின்றன.
குறைந்த ஈரப்பதம் கொண்ட காற்றைச் சுவாசிக்கும்போது, சுவாசப்பாதையில் உள்ள சவ்வுப் படலம் உலர்ந்து போகிறது. இது தும்மல், தொண்டை வறட்சி மற்றும் மூக்கடைப்பு போன்ற தொல்லைகளைத் தருகிறது. ஏற்கனவே ஆஸ்துமா அல்லது சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஏசி காற்று நிலைமையை இன்னும் மோசமாக்கும். சுத்தமான காற்று சுழற்சி இல்லாதது நுரையீரலின் ஆரோக்கியத்தைப் படிப்படியாகப் பாதிக்கிறது.
அதேசமயம், மூடிய அறைகளில் ஏசியைப் பயன்படுத்தும்போது, அங்கிருக்கும் காற்று மீண்டும் மீண்டும் சுழற்சி செய்யப்படுகிறது. குறிப்பாக அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், காற்றில் உள்ள கிருமிகள் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. ஒரே அறையில் இருப்பவர்களில் ஒருவருக்கு சளி அல்லது இருமல் இருந்தால், ஏசி காற்று அந்த வைரஸ்களை எளிதாக மற்றவர்களுக்கும் பரப்புகிறது. இதனால் சாதாரண சளி முதல் காய்ச்சல் வரை அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இயற்கையான சூரிய ஒளியும், வெளிக்காற்றும் இல்லாத சூழல் நமது நோய் எதிர்ப்புச் சக்தியைக் காலப்போக்கில் பலவீனப்படுத்துகிறது.
தீராத தலைவலி மற்றும் உடல் சோர்வு:
ஏசி அறையிலேயே நீண்ட நேரம் முடங்கிக் கிடப்பது அறியாமலேயே உங்களைச் சோர்வடையச் செய்யும். அறையில் ஆக்சிஜன் சுழற்சி சீராக இல்லாதபோது, மூளைக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைப்பதில்லை. இது மனரீதியான சோர்வையும், மந்தமான உணர்வையும் ஏற்படுத்துகிறது.
மேலும், ஏசி அறையிலிருந்து திடீரென வெயிலுக்குச் செல்வதும், வெயிலிலிருந்து மீண்டும் குளிர்ச்சியான அறைக்குள் வருவதும் உடலின் வெப்பநிலையை நிலைப்படுத்துவதில் சிக்கலை உண்டாக்குகின்றன. இந்தத் திடீர் வெப்பநிலை மாற்றம் 'வெப்ப அதிர்ச்சியை' ஏற்படுத்தி, கடுமையான தலைவலியை உண்டாக்கும்.
மூட்டு மற்றும் தசை பிடிப்புகள்:
குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படும்போது, அது தசைகளைச் சுருங்கச் செய்கிறது. குறிப்பாக அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஏசி குளிர்ச்சியால் கழுத்து, முதுகு மற்றும் மூட்டுகளில் பிடிப்பு ஏற்படுகிறது.
தொடர்ச்சியான குளிர்ச்சி மூட்டுகளில் உள்ள திரவத்தின் தன்மையை பாதித்து, உடல் வலி மற்றும் தசைப் பிடிப்புகளைத் தூண்டுகிறது. ஏற்கனவே மூட்டுவலிப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏசி அறையில் இருப்பது வலியைப் பலமடங்கு அதிகரிக்கும்.
ஏசியைப் முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஏசி பயன்படுத்தும் அறையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். மேலும், அவ்வப்போது ஜன்னல்களைத் திறந்து வைத்து இயற்கைக் காற்றை உள்ளே அனுமதிப்பதும், ஏசி ஃபில்டர்களைச் சீராகச் சுத்தம் செய்வதும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)