

Cooking oil saving tips: சமையல் எண்ணெய் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. சர்வதேச அளவில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறக்குமதி செலவுகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதங்கள் மற்றும் உலகளாவிய விநியோக சிக்கல்கள் காரணமாக சமையல் எண்ணெயின் விலை கணிக்க முடியாத அளவுக்கு எப்போதுமே அதிகமாகவே உள்ளது.
நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டில் இது ஒரு பெரிய சுமையாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி, கோடைக்காலங்களில் அதிக எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தினமும் சாப்பிடுவது நமது செரிமான மண்டலத்தை மிகவும் மந்தமாக்கிவிடும். உணவின் அசல் சுவை சற்றும் குறையாமல், அதே நேரம் சமையல் எண்ணெயின் பயன்பாட்டைப் பாதியாகக் குறைப்பதற்கான சில சமையலறை ரகசியங்களை இப்போது பார்ப்போம்.
மசாலா வதக்க சுடுநீர் பயன்படுத்துங்கள்!
பெரும்பாலான இந்திய உணவுகளில் மசாலா தயாரிக்கும் போது, வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்க அதிக எண்ணெய் தேவைப்படும். இதற்குத் தொடர்ந்து எண்ணெய் ஊற்றுவதற்குப் பதிலாக, நடுநடுவே சிறிது சூடான நீரைத் தெளித்து வதக்கப் பழக வேண்டும். இதனால் தக்காளி மற்றும் வெங்காயம் அடிப்பிடிக்காமல் அருமையாகச் சுருள வெந்துவிடும்.
எண்ணெய் இல்லா வறுவல் முறை!
குழம்பு மற்றும் கிரேவி செய்யும்போது மசாலாப் பொருட்களை நிறைய எண்ணெயில் வதக்கி அரைப்பது பலரின் வழக்கம். அதற்குப் பதிலாக, வெறும் வாணலியில் அவற்றை உலர்வாக வறுத்து அரைக்கலாம். தேங்காய், மல்லி விதைகள், வேர்க்கடலை மற்றும் எள் போன்ற பொருட்களை இப்படி வறுத்து அரைக்கும் போது குழம்பு செம டேஸ்டாக இருக்கும். தென்னிந்திய மற்றும் மகாராஷ்டிர சமையலில் இந்த முறை அதிகம் பின்பற்றப்படுகிறது. இதனால் உணவு அதிக எண்ணெய் இல்லாமல் மிகவும் ஆரோக்கியமாக மாறும்.
தாளிக்கும் அளவைக் குறைக்கவும்!
நாம் தினமும் அவசரத்தில் பெரிய கரண்டிகளில் நிறைய எண்ணெய் ஊற்றித் தாளிக்கும் பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். மிகச் சிறிதளவு எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் கருவேப்பிலை போட்டுத் தாளித்தாலே உணவு மிகவும் வாசனையாக இருக்கும். இது தயிர் சாதம், கிச்சடி மற்றும் கூட்டு வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக அமையும்.
ஆவியில் வேகவைக்கும் முறை!
உருளைக்கிழங்கு, வெண்டைக்காய் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை நேரடியாகப் பாத்திரத்தில் எண்ணெயில் வதக்கினால், அவை மிக அதிக எண்ணெயைக் குடிக்கும். எனவே, அவற்றை முதலில் சிறிது நேரம் ஆவியில் வேகவைத்து அல்லது சுடுநீரில் கொதிக்க வைத்து, பின்னர் லேசாகச் சிறிதளவு எண்ணெயில் வதக்கலாம். இது உங்கள் சமையல் நேரத்தையும் மிச்சப்படுத்தும், காய்கறிகளும் மிருதுவாக இருக்கும்.
அகலமான பாத்திரங்களைப் பயன்படுத்தவும்!
ஆழமான கடாய்களுக்குப் பதிலாக எப்போதும் தட்டையான மற்றும் அகலமான பாத்திரங்களைப் பயன்படுத்துவது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு முடிவாகும். அகலமான பாத்திரங்களில் வெப்பம் மிகவும் சமமாகப் பரவி, காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் மிகக் குறைந்த எண்ணெயிலேயே சீக்கிரமாகவே வெந்துவிடும். முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற பொரியல் வகைகளைச் செய்ய இது ஒரு சூப்பரான வழியாகும்.
நமது சமையலறையில் நாம் செய்யும் இந்தச் சிறிய, எளிய மாற்றங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, சமையல் எண்ணெய்க்காக நாம் செய்யும் மாதச் செலவையும் அதிரடியாகக் குறைக்கும். உணவின் சுவைக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் உடலுக்கு ஆரோக்கியமாகச் சமைக்க இந்த அட்டகாசமான டிப்ஸ்களை உங்கள் வீடுகளில் இன்றே முயற்சி செய்து பயன்பெறுங்கள்.