
முகத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் வழிந்தால் அது ஒரு சோர்வை உண்டாக்கும். தன்னம்பிக்கையையும் குறைக்கும் என்று ஒரு சிலர் கூறினாலும், அந்த சருமம் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். வயதான தோற்றமும் சுருக்கமும் வராது.
குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமான கிரீம்களை உபயோகப்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது. கோடையில் முகம் பிசுபிசுப்பாக இருக்கும். அவற்றை சரி செய்வதற்கான வழிமுறைகள்:
முதலில் எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்தை உடையவர்கள் அதனைக் கட்டுப்படுத்த கீரை, தக்காளி, தயிர் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள் பால் மற்றும் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு, கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவேண்டும்.
மேலும் எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்தக் கூடிய பேக்குகளை போட்டால் எண்ணெய் வழிவது கட்டுப்பட்டு நிற்கும்.
லாவண்டர் எண்ணெய்யும், ஆல்மெண்ட் எண்ணெயும் எல்லா வகை சருமத்திற்கும் மசாஜ் செய்ய ஏற்றது.
கடலை மாவு ,சந்தன பவுடர், பால் பவுடர் ,இவற்றுடன் புதினா சாறு எலுமிச்சைசாறு இரண்டு சொட்டு அதிகமாக விட்டு பன்னீர் சிறிதளவு மஞ்சள் கலந்து நன்றாகக் குழைத்து பசை போல் செய்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவ முகத்தில் உள்ள கருப்பு புள்ளிகள் மறைந்து, முகம் பளபளப்பு பெறும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் எலுமிச்சைச் சாற்றை சற்று அதிகமாகக் கலந்து கொள்ளும்போது எண்ணெய் வழி வது குறைந்து சருமம் மினுமினுப்பாகவும் இருக்கும்.
நன்றாக பழுத்த பப்பாளியை மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும். இது அதிகமாக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துவதோடு நல்ல போஷாக்கையும் தரும்.
எலுமிச்சை பழச்சாற்றுடன் தர்பூசணி பழத்தை சேர்த்து நன்றாக குழைத்து பேக் போடலாம். முகத்தை 15 நிமிடம் கழித்து கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
எண்ணெய் பசை உள்ள சருமம் அதிக எண்ணெயை சுரப்பதால் எப்போதும் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனால் விரைவில் அழுக்குப் படிந்து முகப்பருக்கள் தோன்றும் .இதற்கு அவ்வப்பொழுது பேக் போட்டு பராமரித்து வரவேண்டும். குறிப்பாக கோடையில்.
வெள்ளரிச்சாறு, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசையினால் ஏற்பட்ட பருக்கள் மறைந்து நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு ஒரு தேக்கரண்டி ,தேன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு சில துளிகள் மூன்றையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவேண்டும். இந்த பேக் சரும துவாரங்களை இறுக்கமாக்குவதோடு எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்தி சருமத்திற்கு நல்ல பொலிவையும் தரும்.
நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவலாம்.
ஆரஞ்சு பழச்சாறு, தேன், ரோஸ் வாட்டர் ,முல்தானி மட்டித் தூள் சேர்த்து கலந்து பேக் போட்டு காயும்வரை விட்டு கழுவி வர எண்ணெய் போயே போச்சு.
எண்ணெய் பசை உள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளிசாறு ஒரு தேக்கரண்டியில் எலுமிச்சை சாற்றை சேர்த்து பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வரவேண்டும். தக்காளியை இரண்டாக வெட்டி அப்படியே தேய்க்கலாம். இது மசாஜ் செய்வதுபோல் இருக்கும். இதுபோல் செய்வதாலும் எண்ணெய் சுரப்பு குறையும்.
துளசி, வேப்பிலை இரண்டையும் அரைத்து அதை சந்தன பவுடருடன் கலந்து Face pack போட்டால் எண்ணெய் பசையால் உண்டான முகப்பரு மற்றும் முகப் புண்களுக்கு நல்லது.