

எங்கேயாவது சீக்கிரமாக புறப்பட வேண்டும் அல்லது பார்ட்டி, ஃபங்ஷன், கலை நிகழ்ச்சி போன்றவற்றிற்கு அடிக்கடி செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய முக்கியமான குறிப்புகள் இதோ-
பொதுவாகவே பெண்கள் கூந்தலை கட்டவே அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆதலால் அழகுக்கு எடுப்பாகவும், விரைவாக செய்யக்கூடியதுமான இரண்டு வகை ஹேர் ஸ்டைலை விரைவாக உருவாக்கக் கற்றுக் கொண்டு வைத்திருப்பது நல்லது. காரிலோ, பஸ்ஸிலோ, இருசக்கர வாகனங்களில் எதில் பயணம் செய்தாலும் கூந்தல் கட்டு அசைவே கூடாது. ஹேர்பின்களும் பக்காவாக இருக்க வேண்டும். முடியை பறக்கவிடும் ஹேர் ஸ்டைலும் நல்லதன்று. அது அடுத்தவர்களுக்கும் தொந்தரவு தரும்.
மேக்கப் சாதனங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திருங்கள். நீங்கள் அவசரமாக புறப்படும் நேரத்தில் ஐப்ரோ பென்சிலை தேடி லிப்ஸ்டிக்கை தேடி ஓடிக்கொண்டிருந்தால் காலதாமதம் ஏற்படும். ஆதலால் எல்லா வகையான பிரஷ்களையும் ஒரு கப்பில் போட்டு வையுங்கள். இன்னொரு பெட்டியில் ஐப்ரோ பென்சில், ஐலைனர் பிரஷ், கண்மை போன்றவையும் பாதுகாப்பாய் இருக்கட்டும் .லிப்ஸ்டிக், ஃபேஸ் பவுண்டேஷன், பவுடர், பொட்டு போன்றவற்றை தனியாக ஒரு கவரில் போட்டு வையுங்கள். மேலும் ஹேர்ப்பின்கள், ஊக்குகள், கிளிப்பு வகைகள், சீப்பு வகைகள், கண்ணாடி அனைத்தையும் ஓர் இடத்தில் எடுத்து வைத்து விடுங்கள்.
அவசரமாக புறப்பட வேண்டிய தருணங்களில் புதிய ஸ்டைல் எதிலும் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க கூடாது. புதிய முயற்சிகளை ஓய்வு நாட்களில் செய்து பார்க்கலாம். முகத்துக்கு மேக்கப் போட்ட பிறகு கூந்தலை சீவி கட்டுவது சிறந்தது. ஏனென்றால் முக அழகுக்கு பொருத்தமாக கூந்தலை சரி செய்யலாம். சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவ்வாறானவர்கள் கூந்தலை சீவி கட்டிய பின்பு மேக்கப் போட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக வறண்டகூந்தல், எண்ணெய் பசை உள்ள கூந்தல், சாதாரண கூந்தல் போன்றவற்றை நன்றாக புரிந்து கொண்டு அந்தந்த கூந்தலை உடையவர்கள் அந்த கூந்தலுக்கு தேவையான பேக் போட்டு, அதேபோன்ற சருமம் உடையவர்களும் அந்த சருமத்திற்கு தகுந்த மாதிரியான குளியல் முறைகளைப் பின்பற்றி முன்கூட்டியே தயாராக இருந்தால் மேக்கப் போடுவது எளிமையாக முடியும்.
முகத்தின் நிறத்திற்கு பொருத்தமான பவுடரைப் பூச வேண்டியது அவசியம். இது அழகை மேம்படுத்திக் காட்டும்.
கண்மை போட பென்சிலை பயன்படுத்தினால் சீக்கிரம் போட முடியும். உடல் நிறத்துக்கும் உடை நிறத்துக்கும் பொருத்தமான பென்சில்களை பயன்படுத்துவது அவசியம். அதேபோல் லிப்ஸ்டிக்கையும் பயன்படுத்த வேண்டும். எந்த உடையை, நகையை அணியப் போகிறோம் என்பதை தேர்வு செய்து இரவிலேயே அந்த உடையை எடுத்து வைத்துக் கொண்டால், பகலில் புறப்படும்போது குழப்பமே வராது. அதற்கு ஏற்ப மேக்கப் போடுவது ஐந்தே நிமிடத்தில் முடியும்.
மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் இருக்காது. தன்னை அழைத்துப் போவதற்கு ரெடியாக வந்திருப்பவர்களும் அலுத்துக் கொள்ளாமல், நம் மேக்கப்பை பார்த்து அதற்கு தயாராக நாம் எடுத்துக் கொண்ட நேரத்தை கவனித்து இவ்வளவு சீக்கிரம் கிளம்பி விட்டீர்களா ?என்று சந்தோஷத்துடன் அழைத்துச் செல்வார்கள்.
நிகழ்ச்சிகளையும் அழகுடன் செய்து பரிசுகளை வெல்லலாம். பார்த்தும் மகிழலாம். காலம் நம் கையில்! அதற்கு நாம் செய்து வைத்திருக்க வேண்டியது முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்.