
'பிளாட்டினா' என்ற ஸ்பானிஷ் மொழி வார்த்தைக்கு 'சிறிய வெள்ளி’ என அர்த்தம். வெள்ளியைப்போல இருந்தாலும் கருத்துப் போகாமல் புது மெருகும். பளபளப்பும் மங்கி போகாமல் இருக்கும். பிளாட்டினத்தை இப்படித்தான் அழைத்தனர் ஸ்பெயின்மக்கள்.
பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி, "மன்னர்கள் அணியத்தகுந்த அரிய உலோகம் பிளாட்டினம்தான் என 250 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய பெண்கள்தான் முதன்முதலாக பிளாட்டினத்தில் நகை செய்து அணிய துவங்கினார்கள். அதன் பிறகு சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரிட்டன் என ஐரோப்பிய நாட்டு பெண்களை இந்த உலோகம் வசீகரித்துவிட்டது. இப்போது அமெரிக்காவிலும் சீனாவிலும் விரும்பி அணிகிறார்கள்.
தங்கள் அந்தஸ்தை காட்டும் ஆபரணங்களாக பிளாட்டின நகைகளை மேல்தட்டு மக்கள் நினைக்கிறார்கள்.
என்னதான் கடினமான உலோகமாக இருந்தாலும், எவ்வளவு உழைப்பையும் தாங்கும் என்றாலும் காஸ்ட்லியான பிளாட்டின நகைகளையும் பத்திரமாக பராமரிப்பது அவசியம் அதற்கு சில டிப்ஸ்கள்.
எல்லா உலோகங்களிலும் உராய்வால் கீறல்விழுவது போல பிளாட்டின நகைகளிலும் கீறல்விழும். பிளாட்டின நகைகளை பாலிஷ் செய்வது, சுத்தம் செய்வது, டிசைன் மாற்றுவது, சைஸ் மாற்றுவது என எல்லாவற்றையும் அதற்காக இருக்கும் பிரத்யேக கடைகளில் கொடுத்து செய்துகொள்வது பாதுகாப்பானது.
அழுக்கு சேர்ந்தால் திரவ சோப் ஏதேனும் போட்டு மிருதுவாக தேய்த்து பழைய டூத் பிரஷ்ஷால் தேய்த்து கதகதப்பான தண்ணீரில் கழுவலாம். மென்மையான சாட்டிங் துணியால் அழுத்தி துடைத்தால் பளிச்சென மின்னும்.
தண்ணீரில் இரண்டு சொட்டு ஷாம்பு விட்டு கலந்து அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவி பழைய டர்க்கி டவலால் துடைத்து வைத்தால் பளபளவென இருக்கும்.
இப்படி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பிளாட்டின நகைகளை சுத்தம் செய்வது நல்லது.
மரத்தில் செய்த நகைப்பெட்டியிலோ, அலமாரி, லாக்கர், வங்கி லாக்கரிலோ, அப்படியே பிளாட்டின நகைகளை வைக்கக்கூடாது. அதற்கான பிரத்தியேக பெட்டிகளில் மட்டுமே வைக்கவேண்டும்.
அதிலும் மென்மையான வெல்வெட் துணியில் சுற்றி வைப்பது மிக அவசியம்.
மற்ற சாதா தங்க நகைகளுடன் பிளாட்டின நகைகளை சேர்த்து வைக்கவேண்டாம். பிளாட்டின நகைகளோடு உரசி மற்ற நகைகளில் கீறல்கள் விழக்கூடும். தனித்தனி ஜிப் வைத்த நகைப் பைகள் இப்போது கிடைக்கின்றன. இதில் ஒவ்வொன்றையும் தனி அடுக்கில் வைக்கலாம்.
சமையல் செய்வது, பாத்திரங்கள் கழுவது, வீடு சுத்தம் செய்வது, போன்ற வேலை செய்யும்போது பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் எதுவும் பிளாட்டின் நகைகளை ஒன்றும் செய்யாது. ஆனாலும் அதில் பதித்திருக்கும் வைரம் போன்ற கற்கள் இதில் பாதிப்பு அடையும். எனவே கழற்றி வைத்துவிட்டு வேலை முடிந்த பிறகு போட்டுக்கொள்ளலாம்.
சில நகைக்கடைகளில் பிளாட்டின நகை மீது ரோடியம் பிளேட் கோட்டிங் கொடுப்பார்கள். பிளாட்டினம் போலவே இருக்கும் ரோடியம், கண்ணாடிபோல பளபளக்கும். இந்த கோட்டிங் கொடுத்திருந்தால் அது தேய்ந்ததும் திரும்பவும் கோட்டிங் கொடுக்கலாம்.