பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ளும் பொழுது, அவசர அவசரமாக எதையும் செய்யாமல், எதை, எப்பொழுது, எப்படி செய்ய வேண்டும் என்று முறைப்படி தெரிந்து கொண்டு செய்தால் முழு பலனையும் அடையலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:
முகத்திற்கு பேக் போடும் பொழுது:
எந்த பேக் போட்டாலும் 20 ,25 நிமிடங்களுக்கு மேல் காய விட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அதிகம் காய விடும்பொழுது தேவைக்கு அதிகமான ஈரப்பசையையும் சேர்த்து உறிஞ்சி விடும். ஆதலால் பேக்கின் முழு பலனும் கிடைக்காமல் போய்விடும். உதாரணத்திற்கு புதினாவை அரைத்து முகத்தில் பூசி முக்கால் பதம் காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது பேக் போட்டதின் முழு பலனும் கிடைக்கும். முகம் பொலிவாக இருக்கும்.
தேய்க்கும் முறை:
பொதுவாக எண்ணெய், வெண்ணெய், பாலேடு, பழச்சாறு, சோப்பு பவுடர் ஆகியவற்றில் எதை தேய்த்தாலும், உடம்பில் எந்த இடத்தில் தேய்த்தாலும் மேல் நோக்கி தேய்ப்பது தான் நல்லது. இது சருமத்திற்கு தேவையான அளவு நெகிழ்வு தன்மையை கொடுப்பதுடன் நாளடைவில் சதை தொங்காதபடி இறுக்கமான அமைப்பை கட்டுக்குள் வைத்திருக்கும்.
உலர் சருமம் பொலிவு பெற :
சிலரின் சருமம் அடிக்கடி உலர்ந்து விடுவதைக் காணலாம். அவர்கள் எப்பொழுதும் எண்ணெய்யோ அல்லது ஏதாவது ஒரு கிரீமையோ பூசிய வண்ணம் இருப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் இயற்கையாகவே வறண்ட சரும அமைப்பைக் கொண்டது அவர்களுடைய சருமம். இவர்கள் அடிக்கடி பாத்ரூம் சென்று விட்டு வந்தால் தண்ணீரை அடிக்கடி ஊற்றுவதாலும் அதன் எண்ணெய் தன்மை குறைந்து சருமம் உலர்ந்து அதனால் எரிச்சல் ஏற்படுவதும் உண்டு.
அதற்கு இப்படிப்பட்டவர்கள் அதிக கொழுப்புச் சத்து கலந்து செய்யப்பட்ட சோப்பை உபயோகிக்க வேண்டும். சருமம் அதிகமாக காய்ந்து வெடித்து போகாமல் இருக்க சோப்பின் எண்ணெய் பிசுபிசுப்பு காப்பாற்றும். தாவர எண்ணெய் கலந்து செய்யப்படும் சோப்பு இது போன்ற வறண்ட சரும உள்ளவர்களுக்கு பொதுவாக நல்லது செய்யும்.
குளியல் முறை:
இப்பொழுதெல்லாம் சிலர் டப்பில் குளிக்கிறார்கள். அப்படி குளிக்கும் பொழுது பேத்திங் சால்ட் (Bathing salt) என்ற உப்பை நீரில் கலந்து குளிக்கலாம். இதில் நன்மை என்னவென்றால் சோடியம் செஸ்கியூ கார்பனேட் என்ற சேர்மம் அந்த சால்ட்டில் கலந்துள்ளதால் அது கடினமான நீரை மிருதுவாக்கி, உடல் அழுக்கையும் போக்கி பளிச்சென்று மேனியை மின்ன செய்து விடுகிறது.
சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க:
வேலையின் நிமித்தம் சூரிய வெப்பத்தின் போது வெளியில் சென்று விட்டு வந்தால் முகம் கறுத்து போவதையும், கரும்புள்ளிகள் விழுவதையும் தடுக்க முடியாது தவிப்பவர்கள் அநேகர். அதையும் தடுக்கலாம். எப்படி என்றால் ஒரு மஸ்லின் துணியை நன்றாக மோரில் நனைத்து கண், மூக்கு பகுதியில் துவாரம் போட்டுக் கொண்டு மோரில் நனைத்த அந்த துணியை முகத்தில் போட்டுக் கொண்டு நேராக படுத்து விட வேண்டும். 15 நிமிட நேரம் கழித்து துணியை எடுத்துவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகி கரும்புள்ளிகள் விழுவதை தடுக்க செய்யும். இது போல் தொடர்ந்து செய்யும் பொழுது புள்ளிகள் கறுமைகள் எல்லாம் காணாமல் போகும் .