
உருளைக்கிழங்கு, பீட்ரூட்டை தினசரி நாம் சமையலில் பயன்படுத்தி வருகிறோம். அதனுடைய மற்றொரு முகம் அழகுக்கு அழகு ஊட்டுவது. அதற்காகவும் இதில் சிறிது பயன்படுத்திக் கொண்டால், தனியாக தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்காக மேக்கப் சாமான்கள் வாங்க காசு, பணம் செலவு செய்ய வேண்டியது இல்லை. கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். அதற்கான டிப்ஸ் இதோ:
பீட்ரூட்டை தோல் சீவி துருவி விழுதாக அரைத்து கைகளில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து நன்கு காய்ந்தவுடன் கைகளை கழுவவும். தொடர்ந்து வாரம் மூன்று முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும். அதன் சாற்றை சிறிது உதட்டில் பூசினால் உதட்டில் இருக்கும் வறட்சி நீங்க லிப்ஸ்டிக் போல் காட்சி தரும். உதடுகளும் சிவந்து அழகு பெறும்.
பீட்ரூட்ட துண்டுகளை சாலட்டாகவும், பீட்ரூட் சாற்றையும் அவ்வப்போது அருந்தி வந்தால் உடல் நீர் ஏற்றத்துடன் இருப்பதோடு சருமம் பொலிவு பெறும். இரும்புச் சத்தும் போதுமான அளவு கிடைத்துவிடும்.
பீட்ரூட், கேரட், தக்காளி கறிவேப்பிலை இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைத்து தினமும் ஒரு டம்ளர் ஜூஸாக சாப்பிட்டு பாருங்களேன் இளநரை குறையும்.
பீட்ரூட்டை விழுதாக அரைத்து அதனுடன் சிறிது பார்லி தூளையும் கலந்து எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி எட்டில் இருந்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதனை துண்டுகளாக சீவி கண்களின் மேல் 20 நிமிடங்கள் வைத்தால் கருவளையத்தைப் போக்கிவிடலாம்.
நீண்ட நேரம் கண் விழித்து படிப்பது, எழுதுவது, எலக்ட்ரானிக் பொருள்களில் ஈடுபடுவது போன்றவற்றால் ஏற்படும் கண்களின் சோர்வை நீக்க கண்கள் சோர்வாக இருக்கும்பொழுது உருளைக்கிழங்கு துண்டுகளை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அதனை கண்களின் மேல் வைத்தால் கண்களில் சோர்வானது உடனே நீங்கும். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
சரும அழுக்குகளை நீக்க வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இவற்றை தோல் நீக்காமல் அரைத்து, அதில் ஒரு முட்டை, சிறிது தயிர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின்னர் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமம் பொலிவுடன் இருப்பதை உடனே அறிய முடியும்.
உருளைக்கிழங்கை அரைத்து அதனுடன் ஆப்பிள் சாஸ் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும் .இதனால் நல்ல ஒரு இளமையான தோற்றத்தை பராமரிக்க முடியும்.
குளூட்டாநியான் உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் ரத்த கொதிப்பு, புற்றுநோய் மற்றும் கொழுப்பு தொடர்பான உயிர் பறிக்கும் நோய்களின் அபாயம் இன்றி வாழ்கின்றனர் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆதலால் தக்காளி, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, திராட்சை சாறு போன்றவற்றில் குளூட்டாநியான் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அழகுடன் ஆரோக்கியத்தையும் பெறலாம் என்பது உறுதி. ஆதலால் உணவிற்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து அழகை மேம்படுத்துவோமாக!